23 வயதில் இளம் விமானியாக சாதனைப் படைத்த கேரளப் பெண் – குவியும் வாழ்த்துக்கள்!
கேரளாவைச் சேர்ந்த 23 வயது ஜெனி ஜெரோம் மிகக் குறைந்த வயது பெண் விமானி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயது ஜெனி ஜெரோம் மிகக் குறைந்த வயது பெண் விமானி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவரது சி்று வயதுக் கனவு நனவாகியுள்ளது.
- ஜெனி ஜொரோம் கேரளாவின் வயது குறைந்த வணிக விமானியாக வரலாறு படைத்துள்ளார்.
- இவர் ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்த ஏர் அரேபியா (G9 449) விமானத்தில் இணை விமானியாக பணியாற்றியுள்ளார்.
- பீட்ரஸ்-ஜெரோம் தம்பதியின் மகளான ஜெனி ஜெரோம் திருவனந்தபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான கொச்சுத்துறைப் பகுதியைச் சேர்ந்தவர்.
- எட்டாம் வகுப்பு முதலே விமானி ஆகவேண்டும் என்பது இவரது கனவாக இருந்து வந்தது.
- மத்தியக் கிழக்குப் பகுதியான அஜ்மனில் வளர்ந்த ஜெனி ஜெரோம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.
இந்த இளம் விமானிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. எழுத்தாளரும் திருவனந்தபுரம் எம்பி-யுமான சசி தரூர்,
“இணை விமானியாக கொச்சுத்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெனி ஜெரோமி பயணித்ததற்கு வாழ்த்துக்கள். அவர் ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜா முதல் திருவனந்தபுரம் வரை பறந்தபோது அவரது சிறுவயது கனவு நனவாகியுள்ளது. இவர் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,
“ஜெனியின் கனவுகளுக்கும் விருப்பத்திற்கும் ஆதரவாக இருந்த அவரது குடும்பத்தினர் சமூகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். ஜெனி ஜெரோமின் சாதனை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது. ஜெனி மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்,” என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன்,
”கேரளாவின் இளம் பெண் விமானியாக சாதனை படைத்துள்ள ஜெனி ஜெரோமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் இவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.