'பிக் பாஸ் போட்டியாளரான முதல் திருநங்கை’ - யார் இந்த நமீதா மாரிமுத்து?
தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக களமிறங்கியுள்ளார். திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாகவும், முடித்த வரை அவர்களைப் பற்றிய மற்றவர்கள் பார்வையை மாற்றுவதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி கொரோனா பிரச்சினையில் கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் அக்டோபரில் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களின் அறிமுகத்துடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று ஆரம்பானது.
கமல் அறிமுகம் செய்து வைத்த போட்டியாளர்களில் மக்களை அதிகம் ஆச்சர்யப்படுத்தியவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் அவர் தான். நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சுவாரஸ்யமான ஆளுமையாக அறிமுகப்படுத்தப்பட்டார் நமீதா.
கடந்த 2011ம் ஆண்டு பொறியியல் 3ம் ஆண்டு படிக்கும் போது, பாலின மாற்றத்தை உணர்ந்து வீட்டில் இருந்து வெளியேறினார் நமீதா. இதனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை என்றபோதும், மாடலிங் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அறுவைச் சிகிச்சை முடிந்து தன் வாழ்க்கையில் பல போராட்டங்களுக்குப் பிறகே, தனது பெற்றோர் தன்னை ஏற்றுக் கொண்டதாக நமீதா குறிப்பிட்டுள்ளார்.
திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, ஸ்பெயினில் நடந்த மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருது போன்றவற்றை வென்றுள்ளார்.
மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர். மாடலிங் துறையை தேர்வு செய்து அதில் தனது சமூகத்தின் சார்பாக பங்கேற்று வருவதாகக் கூறுகிறார் நமீதா.
மாடலிங் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்துள்ளார் நமீதா. சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.
பிக் பாஸ் தொடக்க விழாவில் பேசிய நமீதா,
“என்னைப் போன்ற திருநங்கைகளை, சில பெற்றோர் ஒதுக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. அப்படி செய்யாமல் பெற்றோர் அவர்களை அரவணைத்தால் என்னென்ன மாற்றம் அவர்களுக்குள் வரும், அவர்கள் இந்த சமூதாயத்தில் நல்ல இடத்தை பிடிக்க உறுதுணையாக இருக்கும். திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாகவும், முடிந்த வரை அவர்களைப் பற்றிய மற்றவர்கள் பார்வையை மாற்றுவதற்காகவுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் சில புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதை கமல் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் இம்முறை திருநங்கைகளை ‘பால்கடந்தோர்’ என்று அழைக்கலாமா? என்று புதிய வார்த்தையை பரிந்துரைத்தார் கமல். பிறகு நல்ல எண்ணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள நமீதாவை வாழ்த்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். திருநங்கையான, ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை கமலுக்கு நமீதா பரிசளித்தார்.
“பாஸ்போர்ட்ல என் பெயரை மாத்தினதைப் பார்த்து வெளிநாட்டில ஆச்சரியப்பட்டாங்க. ஏன்னா, அங்க இப்படி செய்ய முடியாது. இறுதி வரைக்கும் ஒரே பெயர்தான்,” என்கிற தகவலையும் பிக் பாஸில் தெரிவித்தார் நமீதா.
மாடலிங் மட்டுமின்றி கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டங்களில் பல சமூகசேவைகள் செய்தவர் நமீதா. திருநங்கைகள் சிலருடன் சேர்ந்து, கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு சிரமப்பட்ட திருநங்கைகள் பலருக்கு உதவி செய்துள்ளார்.
சர்வதேச அழகிப் போட்டிகளில் திருநங்கைகளின் இந்திய பிரதிநிதியாக இருந்தவர் இவர், மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னைப் போல பலரையும் உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் நமீதாவின் கனவு. நிச்சயம் அவரது கனவு நினைவாகி, பிக் பாஸ் பட்டத்தையும் கைப்பற்றி புதிய வரலாறு படைக்க நமீதாவை நாமும் வாழ்த்துவோம்.