பருத்தித் துணியில் சானிட்டரி நாப்கின்கள்: கோவை பெண்ணின் இயற்கை முயற்சி!
இஷானா தயாரிக்கும் துணி நாப்கின்கள் ரசாயனங்களற்றது, மக்கும் தன்மை கொண்டது, மறுபயன்பாட்டிற்கு உகந்தது. இவர் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களுக்கு வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
”மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவ்வாறு மாதவம் செய்து பிறக்கும் மங்கையர்கள் இன்று நடனம் தொடங்கி நாசா வரையிலும் பல்வேறு துறைகளில் கால் பதித்து சாதனைப் படைத்து வருகின்றனர். பலவீனமானவர்களாகக் கருதப்பட்ட பெண்கள் வலிமை மிகுந்தவர்கள் என நிரூபிக்கத் துவங்கியுள்ள காலம் இது.
பொதுவாகவே பெண்கள் பல்வேறு பணிகளை ஒரே சமயத்தில் கவனம் செலுத்தக்கூடிய திறன்மிக்கவர்கள். இருப்பினும் அத்தகைய திறமைசாலிகளான பெண்கள் மாதவிடாய் சமயத்தில் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாதவிடாய் சமயத்தில் துணிகளைப் பயன்படுத்தியப் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அறிமுகமானதுதான் சானிட்டரி நாப்கின்கள்.
இந்த சானிட்டரி நாப்கின்கள் பல தர்மசங்கடங்களுக்கு தீர்வாக உள்ளபோதும் இதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. சானிட்டரி பேட்களை ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்துவிடவேண்டும். இவற்றை மறுசுழற்சி செய்ய போதுமான வசதிகள் நம்மிடையே இல்லை. இதனால் அவை சுகாதாரமற்ற முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் வீசப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க இந்த சானிட்டரி நாப்கின்கள் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு, சில ரசாயனங்ளும் சேர்க்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
சரி! இதற்குத் தீர்வுதான் என்ன? இதுதானே உங்கள் கேள்வி. அவசர உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்ட நாம் மீண்டும் சிறுதானியங்களைத் தேடி வாங்குவதில்லையா? பல நவீன அணிகலன்களைப் பயன்படுத்தி மகிழ்ந்தாலும் பழைய வடிவமைப்புகளான ‘ஆண்டிக் ஜுவல்லரிகளை ஆர்வமாக வாங்குவதில்லையா? ஆம். அதே போல் தான், சானிட்டரி நாப்கின் பிரச்சனைகளுக்கும் இதே தீர்வுதான்.
பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டரி பேட்களுக்கு சரியான மாற்று துணி நாப்கின்கள்தான். இதை சரியாக புரிந்துகொண்டு களமிறங்கியிருக்கிறார் கோவை கணபதி நகரைச் சேர்ந்த இஷானா. இவர் பருத்தித் துணிகளால் ஆன நாப்கினை தயாரித்து வருகிறார். இவை மக்கும் தன்மை கொண்டவை.
12ம் வகுப்பு படித்துள்ள இஷானா தையலில் சான்றிதழ் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். இவரது அம்மாவுடன் இணைந்து தையல் தொழில் புரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இவரை உயர்கல்வி படிக்க வற்புறுத்தியபோதும் தொழில்முனைவு ஆர்வத்தால் தையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
மாதவிடாய் சமயத்தில் சந்தையில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தியதால் இஷானாவிற்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக துணி நாப்கின்களை தயாரிக்கத் தொடங்கினார். அவரைப் போன்றே பிரச்சனைகளை சந்தித்த அவரது தோழிகளுக்கும் இந்தத் தயாரிப்பைக் கொடுத்துள்ளார். அவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதிகளவில் துணி பேட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
”நான் இந்திய மக்களுக்காக இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் வழக்கமான சானிட்டரி நாப்கின்களால் ஒவ்வொரு பெண்ணும் சருமத்தில் தடிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்,” என்றார் இஷானா.
இஷானா தயாரிக்கும் மறுபயன்பாட்டிற்கு உகந்த நாப்கின்கள் 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. வழக்கமான பிளாஸ்டிக் நாப்கின்கள் மக்குவதற்கு வருடக்கணக்கில் ஆகும். ஆனால் இந்தத் துணி நாப்கின்கள் ஆறு நாட்களில் மக்கிவிடக்கூடியது. இவற்றை துவைத்து 12 முறை வரை பயன்படுத்தலாம்.
"இந்த துணி நாப்கின்களை வழக்கமான முறையில் துவைத்த பிறகு மஞ்சள்பொடியில் ஊறவைக்கலாம். வெயிலில் காயவைக்கவேண்டும். அடுத்த மாதம் இந்த நாப்கினை எடுத்து பயன்படுத்துவதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஈரத்துணிக்கு அடியில் நாப்கினை வைத்து அயர்ன் செய்தால் நல்லது,” என்கிரார் இஷானா.
இஷானா பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார். நாப்கின் தயாரிக்கும் பணியில் 25 பெண்களை இணைத்துக் கொண்டுள்ளார். கட் செய்யப்பட்ட துணிகளை இந்த பெண்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கே இஷானா பயிற்சி அளித்தப்படி தைத்து அதை விற்பனைக்கு தயாராக்குகின்றனர்.
”காட்டன் துணி கொண்டு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் முறையை மேலும் பலருக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்,” என்கிறார் இஷானா.
சேலம், ஹைதராபாத், கேரளா போன்ற பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது பகுதிகளில் பேட்களை விநியோகிக்க அனுமதி கோரி இஷானாவை அணுகி வருகின்றனர்.
இந்த நாப்கின்களை பயன்படுத்தும் பயனாளிகள் கூறும்போது,
“ஜெல், பசை போன்ற ரசாயனங்கள் கலந்த சானிட்டரி பேட்கள் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஆரம்பத்தில் பருத்தி நாப்கினுக்கு மாறுவதில் சில சங்கடங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் எளிதாகவும் வசதியாக இருக்கிறது,” என்கின்றனர்.
இஷானா தனது அடுத்தக் கட்ட திட்டங்கள் குறித்து கூறும்போது,
“வருங்காலத்தில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கான பேட்களையும் குழந்தைகளுக்கான துணி டயாப்பர்களையும் தயாரிக்க விரும்புகிறேன்,” என்கிறார் இஷானா.
இந்த நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதாலும் உடல் நலத்திற்கு சிறந்தது என்பதாலும் பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு மாற்றாக இந்த் துணி நாப்கினை பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும் என்றும் இஷானா வேண்டுகோள் விடுக்கிறார்.
கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா | வீடியோ : சுதாகர்