லண்டனில் செயல்படும் கோவை தொழில் முனைவர்: ஆண்டுக்கு 3மில்லியன் பவுண்ட் வருவாய் ஈட்டும் Kovaion
கோவை செட்டிபாளையம் இவரது சொந்த ஊர். அங்கு பொறியியல் படித்து முடித்து, பல ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு 10 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இவர் தொடங்கிய நிறுவனம் kovaion ஆண்டுக்கு 50% வளர்ச்சியை அடைந்து வருகிறது.
சில நிறுவனங்களில் பெரிய அளவுக்கு வருமானம் இருக்காது, ஆனால் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். இதற்கு மாறாக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் அமைதியாக இருக்கின்றன. சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் அதே சமயத்தில் கணிசமாக வருமானம் ஈட்டும் பல நிறுவனங்கள் எந்தவிதமான வெளிச்சமும் இல்லமால் அமைதியாக உள்ளன.
kovaion நிறுவனமும் அப்படி சத்தமில்லாமல் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சர்வக்தேச நிறுவனமாகும். ‘கோவையான் கன்சல்டிங் இந்தியா’ 10 ஆண்டுகளுக்கு மேலாக யூகே-வில் செயல்பட்டுவருகிறது. லண்டன் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூருவில் அலுவலகம் உள்ளது. அமெரிக்காவிலும் சிறு குழுவினர் பணியாற்றுகின்றனர். சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் நிறுவனர் நந்தகுமார் இதுவரை மீடியா வெளிச்சத்துக்கு வராதவர் மிகுந்த தயக்கத்துக்கு இடையே நம்மிடம் பேசினார்.
கோவை செட்டிபாளையம் இவரது சொந்த ஊர். அப்பா லேத் வைத்திருந்தார். உறவினர்கள் சிறு தொழில் செய்துவந்தார்கள். கோவையில் பொறியியல் படித்தேன். படித்து முடித்தவுடன் 2004ம் ஆண்டு ஹெக்ஸாவேர் நிறுவனத்தில் இணைந்தேன். இரண்டு ஆண்டுக்கு பிறகு டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். அங்கு பணியாற்றிய போது கொரியா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றேன். இறுதியாக லண்டனில் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.
”டிசிஎஸ் சிறப்பான நிறுவனம். இருந்தாலும் அங்கு ஒரு எல்லைக்கு மேல் என்னால் செயல்பட முடியவில்லை என்பது போல உணர்ந்தேன். அதனால், சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டேன். லண்டனில் இருந்ததால் அங்கிருந்தே 2011-ம் ஆண்டு தொழில் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் மட்டுமே இருந்தேன். சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக நான் மட்டுமே பணியாற்றினேன். அதன் பிறகு மனைவி வந்து சேர்ந்தார். அதன் பிறகே படிப்படியாக பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன்,” என்றார்.
ஆரக்கிள் நிறுவனத்தின் சாப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படும். ஆனால், அந்த சாப்ட்வேரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு customized செய்வதுதான் எங்களுடைய பணி. ஆரம்பத்தில் ஒரிரு நிறுவனங்களுக்கு மட்டும் சேவை வழங்கிவந்தோம், தற்போது 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று பகிர்ந்தார் நந்தகுமார்.
பென்ஸ், கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட பலரும் எங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சென்னையில் மற்றும் பெங்களூருவில் பெரும்பான்மையான ஊழியர்கள் உள்ளனர்.
இவர் தன்னுடைய சொந்த முதலீட்டில், kovaion நிறுவனத்தை 2010ல் தொடங்கி, முதல் ஏழு எட்டு மாதங்களுக்கு தனியாக ஒரே ஊழியராக இருந்துள்ளார். நிறுவனம் மேலும் வளர வளர புதிய ஆட்களை தேர்வு செய்ததாக பகிர்ந்தார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும் இங்கிலாந்தில் தொடங்குவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆரம்பத்த்தில் புதிய நிறுவனமாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை இருந்தது. அதன் பிறகு எங்களுடைய செயல்பாடு காரணமாக மாற்றம் இருந்தது, என்றார்.
தொழில்முனைவில் ஏதாவது சவால்களை சந்தித்திருக்கிறாரா என்று கேட்டதற்கு,
“2014ம் ஆண்டு மிகவும் சிக்கலான ஆண்டு. அப்போது பிஸினஸ் முழுவதும் க்ளவுடுக்கு மாறியது. அதனால் நாங்களும் மாற வேண்டிய சூழல் இருந்தது. அப்போது அதிக கவனம் மற்றும் முதலீடு செய்தோம். 18 மாதங்கள் சிக்கலான சூழல் இருந்தது,” என்றார்.
அடுத்த கட்டம்?
நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ஆண்டுக்கு 50 சதவீத வளர்ச்சியை அடைந்து வருவதாக நந்தகுமார் தெரிவித்தார். இதே அளவிலான வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளுக்கும் எதிர்பார்க்கிறார்.
“இந்த வளர்ச்சியை தக்கவைக்க அதற்கான பணிகளை செய்துவருகிறோம். தற்போதைய வருமானம் 3 மில்லியன் பவுண்ட்களுக்கு மேல் இருக்கிறது. கோவையான் என்று பெயர் வைத்திருந்தாலும் எங்களுக்கு கோவையில் அலுவலகம் இல்லை. அதனால் கோவையில் மிகப்பெரிய அலுவலகத்தைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கோவையில் அலுவலகம் தொடங்குவோம்,” என்றார்.
இதுவரை வெளியில் இருந்து முதலீடு ஏதும் இவர்கள் பெறவில்லை. அடுத்த பத்தாண்டுகளுக்கு திட்டம் இருக்கிறது. ஆனால், அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தேவையான நிதி ஆதாரம் உள்ளது என்றார்.
இதுவரை ஆரக்கிள் நிறுவனத்தின் சேவைகளை நிறுவனங்களுக்கு மாற்றிக்கொடுத்தோம். அந்த சேவை தொடரும் அதேவேளையில் இனி நாங்களே low code ஆப்களை உருவாக்க இருக்கிறோம் என நந்தகுமார் தெரிவித்தார்.
சொந்த ஊர் கோவை என்பதால் கோவை மற்றும் டெக்னாலஜி தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக Kovaion என பெயர் வைத்தோம். வரும் மார்ச் மாதம் டெலிவரி மையத்தை தொடங்க இருக்கிறோம். 100 நபர்கள் வரை செயல்படும் அலுவலகமாக இது இருக்கும்.
சந்தை பரபரப்பில் இருந்து விலகி செயல்படும் நிறுவனங்களும் சந்தையில் பல வெற்றிகரமாக இருக்கின்றன என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்.