94 ஆண்டு பாரம்பரிய வணிகத்தை நவீன தலைமுறைக்கு ஏற்ப மாற்றிய அமைத்த லாவண்யா நல்லி!
94 ஆண்டுகளைக் கடந்து செயல்படும் ’நல்லி’ பிராண்ட் புடவைகள் வயதானவர்களுக்கானது என்கிற பிம்பத்தை மாற்றியமைத்து இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டியுள்ளார் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த லாவண்யா நல்லி.
'நல்லி’ - இது இந்தியாவின் பழமை வாய்ந்த, பிரபல புடவை பிராண்ட். 94 ஆண்டுகளைக் கடந்து செயல்படும் இந்த வணிகத்தின் இன்றைய மதிப்பு 800 கோடி ரூபாய்.
இந்தக் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த லாவண்யா நல்லி, இந்த வணிகத்தின் துணைத் தலைவராக செயல்படுகிறார். இவர் யுவர்ஸ்டோரியின் ’உமன் ஆன் ஏ சம்மிட்’ உரையாடலில் இந்த குடும்ப சாம்ராஜ்ஜியத்தை நவீனப்படுத்திய செயல்பாடுகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
குடும்ப வணிகத்தில் லாவண்யா
லாவண்யா சிறு வயதில் தனது தாத்தா பாட்டி வீட்டில் நேரம் செலவிடுவார். அவர்கள் வீடு சென்னையில் முதன் முதலில் திறக்கப்பட்ட நல்லி ஸ்டோரின் மாடியில் இருந்தது.
குடும்பத்தினர் தங்களுக்குள் அன்றாடம் பேசிக்கொள்ளும்போது வணிகத்தைப் பற்றிய பேச்சு நிச்சயம் இடம்பெற்றிருக்கும். லாவண்யா இதைக் கேட்டே வளர்ந்துள்ளார். ஐந்து தலைமுறைகளில், வணிகத்தில் இணைந்துகொண்ட முதல் பெண் லாவண்யாதான். இதை அவர் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
“94 ஆண்டுகளாக வணிகத்தை நடத்தி வந்தாலும் குடும்பத்தில் யாரும் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதில்லை. 2005ம் ஆண்டில் நிறுவனத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தனர். ஒன்று நான். மற்றொருவர் என் அப்பாவின் செக்ரெட்டரி,” என்கிறார் லாவண்யா.
பெற்றோரின் விருப்பத்தின் பேரில் லாவண்யா பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை விடுமுறை கிடைத்தது. அந்த சமயத்தில் குடும்ப வணிகத்தைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. படிப்பை முடித்ததும் நல்லி வணிகத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் இவர் வணிகத்தில் இணைந்திருப்பதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
”குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தவில்லை என சொல்லமாட்டேன். அதேசமயம் பெரிதாக ஆதரிக்கவுமில்லை. என்னுடைய இருப்பு பெரிதாக கவனம் பெறவில்லை. இருந்துவிட்டு போகட்டும் என விட்டுவிட்டார்கள்,” என்று சிரித்துக்கொண்டே குறிப்பிடுகிறார் லாவண்யா.
ஆனால், அவர்கள் நினைத்தது தவறாகிப் போனது. அடுத்த நான்காண்டுகளில் நல்லி குரூப் ஆஃப் கம்பெனீஸ் துணைத் தலைவர் ஆனார். இந்த சமயத்தில் 14 என்றிருந்த ஸ்டோர்களின் எண்ணிக்கையை 21-ஆக உயர்த்தினார்.
ஃபேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளம் தலைமுறையினரின் ரசனைக்கேற்ப தயாரிப்புகளை அப்டேட் செய்தார், லாபம் அதிகரிக்கச் செய்தார்.
அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழாண்டுகள் வரை மேற்படிப்பிற்காக வணிகத்தை விட்டு விலகி இருந்தார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். McKinsey & Company, Myntra போன்ற நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றார். 2015ம் ஆண்டு மீண்டும் நல்லி வணிகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார்.
இந்த முறை பாரம்பரிய வணிகத்தில் மின்வணிக செயல்பாடுகளை புகுத்தினார். இதனால் விற்பனையும் லாபமும் அதிகரித்தது. மேலும், பல வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்தது.
“குடும்பத்தினர் என்னிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு வகையில் எனக்கு நிம்மதியளித்தது. துணிந்து புதிய முயற்சிகளைக் கையிலெடுக்க முடிந்தது,” என்கிறார் லாவண்யா.
Nalli Next
2007-ம் ஆண்டில் லாவண்யா செய்த ஒரு விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. ஆம், இந்த சமயத்தில் Nalli Next என்கிற ஃபார்மேட்டை அறிமுகப்படுத்தினார்.
முக்கிய விசேஷ தினங்களில் அணிந்துகொள்ளும் அழகான, நேர்த்தியான புடவைகளை இந்த பிராண்ட் வழங்குகிறது. இதுவே இந்த பிராண்டின் அடையாளமாகவும் மாறியது. ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருந்தது. இந்த அடையாளம் காரணமாக இளம் தலைமுறையினர் இந்த பிராண்டுடன் தொடர்பில் இல்லாமல் போனார்கள்.
”பெரும்பாலான நல்லி வாடிக்கையாளர்கள் விசேஷ தினங்களுக்கு புடவை வாங்க வருவார்கள். வயதானவர்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகளை வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் இவர்களுடன் வரும் இளம் பெண்கள் எந்த செக்ஷனுக்கும் சென்று பார்க்கமாட்டார்கள். காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், வயதானவர்கள் கட்டும் வகையில் கட்டம் போட்ட புடவைகள் போன்றவை மட்டுமே இங்கு இருக்கும் என்பது அவர்கள் மனதில் ஆழமாக பதுந்துவிட்டது. இதை நான் ஆய்வு செய்து தெரிந்துகொண்டேன்,” என்கிறார்.
இளம் தலைமுறையினரை நல்லி வாடிக்கையாளர்களாக மாற்றவேண்டும் என்கிற உந்துதல் லாவண்யாவிற்குப் பிறந்தது. கடையின் உள் அலங்காரங்களை மாற்றினார். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவையளிக்கும் சேல்ஸ்பெர்சன்களுக்கு பயிற்சியளித்தார்.
இளம்பெண்கள் தங்களின் ரசனைக்கேற்ற ஆடைகள் இங்கு இருக்கிறதா என்பதையாவது விசாரிக்கவேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. இன்று சென்னையிலும் பெங்களூருவிலும் Nalli Next ஸ்டோர்கள் செயல்படுகின்றன.
பாலின வேறுபாடு – ஒரு நுணுக்கமான அணுகுமுறை
பாலின வேறுபாட்டை ஒரு நுணுக்கமான அணுகுமுறையுடன் கையாளவேண்டும் என்கிறார் லாவண்யா.
“பல நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. மகப்பேறு விடுப்பு, கூடுதல் நேர வேலை, பாதுகாப்பு இப்படி பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி பெண்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்,” என்கிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது,
“பணியமர்த்தும் மேலாளர்கள் பெண்களைப் பொருளாதார ரீதியில் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். பெண்கள் நம்பகத்தன்மை மிக்கவர்கள், கடினமாக உழைப்பவர்கள். இப்படிப்பட்ட சாதகமான அம்சங்களை அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்கிறார்.
இளம் தலைமுறையினருக்கு ஆலோசனை
மனம் சொல்வதைக் கேட்டு நம்பிக்கையுடன் துணிந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடவேண்டும் என்கிறார் லாவண்யா.
“நான் வணிகத்தில் சேர்ந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலைமை எவ்வளவோ மாறியுள்ளது. முன்னேற்றப் பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இன்று தொழில் முயற்சியில் ஈடுபடுவது எளிதாக உள்ளது. எனவே மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். முன்னோக்கி ஒரு அடி எடுத்துவைப்பதால் நாம் எதையும் இழக்கப்போவதில்லை. மாறாக அதைச் செய்யாமல் போனால்தான் இழப்பு ஏற்படும்,” என்கிறார் லாவண்யா.
ஆங்கில கட்டுரையாளர்: பூஜா ராஜ்குமாரி | தமிழில்: ஸ்ரீவித்யா