ரூ. 316 கோடி; 47 ஹெக்டர் பரப்பளவு; 108 தூண்கள் - உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில் சிறப்பம்சங்கள்!
உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஆன்மீக நகரமான உஜ்ஜயினியில் உள்ளது, மகாகாளேஷ்வர் கோயில். ரூ.316 கோடி ரூபாயில் ‘ஸ்ரீமஹாகால் லோக்’ என அழைக்கப்படும் வழித்தடத்திற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அக்டோபர் 11ம் தேதி மாலை 6 மணி அளவில் மகாகாளேஷ்வரர் கோயில் கருவறைக்குள் பாரம்பரிய வேட்டி அணிந்து பிரதமர் மோடி நுழைந்தார். அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர். அங்கு மகாகாளேஷ்வருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
"ஆன்மிகம் ஒவ்வொரு துகளிலும் அடங்கியுள்ளது மற்றும் தெய்வீக ஆற்றல் உஜ்ஜயினின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது. உஜ்ஜயினி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செழிப்பு, அறிவு, கண்ணியம் மற்றும் இலக்கியத்திற்கு வழிவகுத்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, தான் இழந்த பொலிவை புதுப்பித்தல் மூலமாக பெற்றுவருகிறது,” என்றார்.
ஸ்ரீமஹாகாலேஷ்வர் கோயில் சிறப்புகள்:
உஜ்ஜயினி நகரம் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு 200 கி.மீ. தொலைவில் ’மஹாகாலேஷ்வர்’ கோயில் உள்ளது. ஆன்மீக சிறப்பு வாய்ந்த இந்த தலத்திற்கு தனி அடையாளம் உண்டு.
12 'ஜோதிர்லிங்கங்களில்' ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். சிவராத்திரி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் வடக்கு நோக்கி உள்ள நிலையில், உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
இங்குள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.
மஹாகால் லோக் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலத்திற்கு உலக அளவிலான நவீன வசதிகளை வழங்குவதற்காகவும், பக்தர்களின் வருகையை இருமடங்காக அதிகரிப்பதற்காகவும் “மஹாகால் லோக்” திட்டத்தின் தொடங்கப்பட்டது.
ரூ.856 கோடி செலவில் 'மகா காளேஷ்வர் கோவில் வழித்தடத் திட்டம்' மேற்கொள்ளப்பட்டது. ரூ. 316 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- இந்தியாவின் ஆன்மிக சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முழு திட்டமும் முடிவடைந்தால் கோவில் வளாகம் ஏழு மடங்கு விரிவுபடுத்தப்படும். தற்போதுள்ள 2.87 ஹெக்டேரில் இருந்து 47 ஹெக்டேராக விரிவடையும் எனக்கூறப்பட்டுள்ளது.
- 2.5 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மகா காள் காரிடார், தாமரை குளத்தால் சூழப்பட்டுள்ளது மற்றும் நீரூற்றுகளுடன் சிவன் சிலை உள்ளது. இங்குள்ள சுவர்களில் சிவனின் ஆனந்த நாட்டிய தாண்டவத்தை சித்தரிக்கும் விதமாக 108 தூண்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
- சிவபுராணக் கதைகளான விநாயகரின் பிறப்பு, தக்ஷனின் கதை உள்ளிட்ட போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சுவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிலைகளில் QR குறியீடு உள்ளது. பக்தர்கள் குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், சிலையின் விவரங்கள் செல்போனில் தோன்றும்.
- வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் மற்றும் ஃபுட் கோர்ட் வளாகமும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- முழு வளாகமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் 24x7 கண்காணிக்கப்படும்.
- பக்தர்களின் வசதிக்காக அன்னச்சத்திரம், பிரசங்க மண்டபம் ஆகியவையும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
- மகாகாளேஷ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள காரிடாரானது, காசி விஸ்வேஸ்வநாதர் கோயில் காரிடாரை விட 4 மடங்கு பெரியது.
- மஹாகால் லோக் காரிடார் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் சுற்றுலா மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
216 அடி உயரம்; 1500 டன் எடை: இந்தியாவின் 2வது பிரம்மாண்ட ராமானுஜர் சிலை சிறப்பம்சங்கள் என்ன?