புதிய நாடாளுமன்றத்தை வடிவமைத்த கட்டிடக் கலை நிபுணர் - யார் இந்த பிமல் படேல்?

பிரம்மாண்டமும் பாரம்பரியமும் இரண்டறக் கலந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்த கட்டிடக் கலை நிபுணர் பிமல் படேலின் பின்னணியும், அவரது நிறுவனம் பெறும் தொகையும் மலைக்கத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தை வடிவமைத்த கட்டிடக் கலை நிபுணர் - யார் இந்த பிமல் படேல்?

Saturday May 27, 2023,

3 min Read

நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு மேம்பட்ட வசதிகளைத் தரவும், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நினைவுகூரும் சின்னமாகவும், ஆங்கிலேயர் கால சுவடுகளை நீக்கும் வகையிலும் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பிரம்மாண்டமும் பாரம்பரியமும் இரண்டறக் கலந்ததாக வீற்றிருக்கிறது. இதன் வடிவமைப்புப் பின்னணியில் இருக்கிறார், இந்தியாவின் மகத்தான கட்டிடக் கலை நிபுணர்களில் ஒருவரான பிமல் படேல்.

பழைய நாடாளுமன்றக் கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது என்பதால், அந்தக் கட்டிடத்துக்கு பதிலாக ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டியுள்ளது. அதேவேளையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைக்கவும், சென்ட்ரல் விஸ்டாவைச் சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்தவும் குஜராத்தின் அகமதாபாதைச் சேர்ந்த ‘எச்.சி.பி. டிசைன், பிளானிங் அண்டு மேனேஜ்மென்ட்’ என்ற கட்டிடக் கலை நிறுவனம் பணிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவர்தான் பிமல் படேல்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கோண வடிவ மனை தேர்ந்தெடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் போல் வட்ட வடிவமாக அல்லாமல் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டது. அதேவேளையில், பெரிதாக வித்தியாசம் இல்லாத வகையிலும், முகப்புத் தோற்றத்தில் பழைமை வெளிப்படும் வகையிலும் புதிய நாடாளுமன்றத்தை பிமல் படேல் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.

bimal

குஜராத் மண்ணின் மைந்தனான பிமல் படேல் கட்டிடக் கலைத் துறையில் மிகவும் பிரபலமானவர். இந்தியாவில் மிக முக்கியமான கட்டுமானங்களின் வடிவமைப்பில் பங்காற்றியவர். குறிப்பாக காசி விஸ்வநாத் பாதை, சபர்மதி நதிக்கரை திட்டம் முதலானவை பிமல் படேலின் திறமையை பறைசாற்றுபவை. இவை அனைத்துக்கும் மணிமகுடம் வைப்பது போலவே ‘சென்ட்ரல் விஸ்டா’ இப்போது அமைந்துள்ளது.

யார் இந்த பிமல் படேல்?

நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் திட்டமிடலில் நிபுணரான பிமல் ஹஸ்முக் படேல் முப்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள திறமைவாய்ந்த கட்டிடக் கலைஞர். தற்போது படேல் அகமதாபாத்தில் உள்ள சிஇபிடி (சென்டர் ஃபார் என்விரான்மென்ட் ப்ளானிங் அண்ட் டெக்னாலஜி) தலைவராக இருக்கிறார். இவரது தந்தையும், பழம்பெறும் கட்டிடக் கலை நிபுணருமான ஹேஸ்முக் சி.படேல் கடந்த 1960-ல் உருவாக்கிய நிறுவனம்தான் ‘எச்.சி.பி. டிசைன், பிளானிங் அண்டு மேனேஜ்மென்ட்’. இப்போது இதன் தலைவராக நிறுவனத்தை பிமல் வழிநடத்துகிறார்.

அகமதாபாத்தின் லயோலா ஹாலில் உள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிமல் படேல், சென்டர் ஃபார் என்விரான்மென்ட் பிளானிங் அண்ட் டெக்னாலஜி (CEPT)-யில் கட்டிடக் கலை பயின்றார். பின்னர், அமெரிக்காவில் 1995-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இதனிடையே, தனது தந்தையின் நிறுவனத்தில் இணைந்தார்.

Bimal Patel

1992-ல் அகா கான் விருது, 2001-ல் உலக கட்டிடக் கலை விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள பிமல் படேலுக்கு, 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

கங்காரியா லேக் டெவலப்மென்ட், அகா கான் அகாடமி - ஹைதராபாத், புஜ் டெவலப்மென்ட் ப்ளான், ஆன்ட்ரபிரனர்ஷிப் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கட்டிடம், குஜராத் உயர் நீதிமன்றம், அகமதாபாத் ஐஐடி நியூ கேம்பஸ் மற்றும் காந்திநகரின் ஸ்வர்னிம் சங்குல் முதலானவை பிமல் படேலின் முக்கிய புராஜக்ட்களாகும்.

ரூ.229 கோடி டீல்!

‘சென்ட்ரல் விஸ்டா’ திட்ட கன்சல்டன்சி-க்கான ஏலத்தில் பிமல் படேலின் எச்சிபி டிசைன்ஸ் நிறுவனம் வென்றதன் மூலம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான வடிவமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான ஆலோசனை பணிகளுக்காக பிமல் படேலுக்கு ரூ.229.75 கோடி வழங்கப்படுகிறது.

திட்டங்களுக்கான மாஸ்டர் ப்ளான் தயாரித்தல், கட்டிட வடிவமைப்பு, மதிப்பிடுதல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பார்க்கிங் வசதி போன்றவை படேலின் நிறுவனம் வழங்கக் கூடிய சேவைகளில் அடங்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

modi

புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பு - கவனிக்கத்தக்க அம்சங்கள்:

  • முக்கோண வடிவிலானது புதிய நாடாளுமன்ற கட்டிடம்

  • தேசிய பறவையான மயிலைப் போல மக்களவைக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • தேசிய மலரான தாமரை போல மாநிலங்களவை கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் முக்கியக் கட்டிடக் கலைகளின் தாக்கத்தை உள்ளடக்கியது புதிய நாடாளுமன்ற கட்டிடம்.

  • இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் அரசியல் சாசன அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

  • புதிய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி அமைப்புகள் உள்ளன.

  • புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள 6.5 மீ உயர தேசிய சின்னம் வெண்கலத்தால் ஆனது. இதன் எடை சுமார் 9500 கிலோ. இதைத் தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கம்பீரமும் அழகும் நிறைந்து காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,

“புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒவ்வோர் இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது...” என்று சிலாகித்துள்ளார்.


Edited by Induja Raghunathan