Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குழந்தையின் சருமத்தை பூப்போல் பாதுகாக்கும் ‘நவீன துணி டயாப்பர்’ –முபீன் பாத்திமாவின் தொழில் முயற்சி!

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முபீன் பாத்திமா Bum2Bum என்கிற பிராண்ட் மூலம் துணி டயாப்பர்களை விற்பனை செய்து வருகிறார்.

குழந்தையின் சருமத்தை பூப்போல் பாதுகாக்கும் ‘நவீன துணி டயாப்பர்’ –முபீன் பாத்திமாவின் தொழில் முயற்சி!

Monday September 20, 2021 , 5 min Read

ஒரு வீட்டில் பச்சிளம் குழந்தை இருப்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். குக்கர் சத்தத்தைவிட அதிகமாக 'குவா குவா’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தை அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் என்றாலும் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டு நீண்ட நேரம் ஈரத்தில் இருந்தால் சிணுங்கிக்கொண்டே இருக்கும்.


முன்பெல்லாம் குழந்தைக்கு பாட்டிகள் காட்டன் துணியை லங்கோட் போல் கட்டிவிடுவார்கள். துணிகளை அவ்வப்போது மாற்றி துவைத்து, உலர்த்தி மீண்டும் கட்டிவிடுவார்கள். ஆனால், இந்தப் பழக்கம் மாறிவிட்டது. சின்னக் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர்களை வெளியில் கூட்டிச் செல்வது கஷ்டமாக இருக்கும். இரவு நேரங்களில் ஈரத்தில் படுத்திருந்தால் குழந்தையின் தூக்கம் கலைவதுடன் உடல்நலமும் பாதிக்கப்படும்.


இதுதவிர, தற்போது பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை டே கேரில் விட்டுச் செல்லும் வழக்கமும் அதிகமாகி விட்டது. இதுபோல் எத்தனையோ சந்தர்பங்களில் குழந்தைகளுக்கு துணி பயன்படுத்த முடியாமல் போனது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அறிமுகமானதுதான் டிஸ்போசபிள் டயாப்பர்.


இந்த வகை டயாப்பர்கள் பல தர்மசங்கடங்களைத் தவிர்த்துவிடுவதால் இது மக்களிடையே பிரபலமானது. இதற்கான செலவு பற்றி பெற்றோர் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மளிகை சாமான்களைக் காட்டிலும் டயாப்பர் செலவு அதிகம் இருக்கும் என்பதை பெற்றோர் பலரும் மறுக்கமாட்டார்கள்.


எல்லா கண்டுபிடிப்புகளிலும் நன்மை, தீமை இரண்டும் சேர்ந்துதான் இருக்கும் அல்லவா? அவசியத் தேவையின்போது மட்டுமே பயன்படுத்தி அடிக்கடி மாற்றிவிட்டால் இதனால் அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் குழந்தைக்குப் டயாப்பர் போட்டுவிடுவதால் சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வளிக்கிறது Bum2bum.

1

முபீன் பாத்திமா

Bum2Bum நிறுவனர் முபீன் பாத்திமா. சென்னை பெரம்பூரில் வசிக்கிறார். திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் Bum2Bum என்கிற பிராண்ட் மூலம் துணி டயாப்பர்களை விற்பனை செய்கிறார்.

தொழில் முயற்சியின் ஆரம்பப்புள்ளி

முபீனின் இரண்டாவது மகன் பிறந்து ஓராண்டு கடந்திருக்கும். குழந்தைக்கு இரவில் தூங்கும்போது மட்டும் டயாப்பர் பயன்படுத்தியிருக்கிறார். வழக்கமாக கடைகளில் கிடைக்கும் டயாப்பரை வாங்கிப் பயன்படுத்தினார். இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதால் குழந்தையின் சருமத்தில் ராஷ் அதிகம் ஏற்பட்டுள்ளது.

“நைட் தூங்கும்போது மட்டும்தான் டயாப்பர் யூஸ் பண்ணேன். காலையில எழுந்ததும் கழட்டிடுவேன். வழக்கமா நமக்குக் கிடைக்கற பிராண்டட் டயாப்பர்ஸ் பிளாஸ்டிக்கால தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால என் குழந்தைக்கு ஸ்கின்ல ராஷ் வந்துது. ஸ்கின் அப்படியே கருப்பா மாறிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் பழைய ஸ்கின் கலர் திரும்பவே இல்லை,” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் முபீன்.

டிஸ்போசபிள் டயாப்பர்ல கெமிக்கல் இருக்கும். ஜெல் மாதிரியான சப்ஸ்டன்ஸ் இருக்கும். குழந்தை யூரின் போகும்போது இது உறிஞ்சு அப்படியே உப்பிடும். டயாப்பரை ரொம்ப நேரம் மாத்தாம இருந்தா அந்த யூரின்ல இந்த கெமிக்கலும் கலந்துடும். காத்து போகாம இறுக்கமா இருக்கறதால பிரச்சனை வரும், என்று டிஸ்போசபிள் டயாப்பரால் ஏற்படும் பிரச்சனைகளை அடுக்குகிறார்.


இதற்கு என்ன மாற்று என்று யோசித்தார் முபீன். துணி டயாப்பர் வாங்கிப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். சருமத்திற்கு நல்லது என்பதால் சரியான தயாரிப்பை வாங்கிவிட்டோம் என்று திருப்தியடைந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

”குழந்தை ஒரு தடவை யூரின் போனதுமே இந்த துணி டயாப்பர்களை திரும்பவும் யூஸ் பண்ண முடியாம போச்சு,” என்கிறார்.

இது எனக்கு மட்டுமே இருக்கும் பிரச்சனை இல்லையே? குழந்தை இருக்கும் அனைவரும் இதே பிரச்சனையை சந்திப்பார்களே? குழந்தை ஈரத்தில் இருக்கக்கூடாது; டயாப்பர் பயன்படுத்துவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவும்கூடாது; பாதுகாப்பாக இருக்கவேண்டும் அதேசமயம் ஈரத்தையும் உறிஞ்சவேண்டும். இதுவே எல்லா தாய்மார்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் அல்லவா? ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் தயாரிப்பு எதுவும் சந்தையில் கிடைக்கவில்லையே....? என யோசித்தார்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வணிகமாக மாற்ற முடிவு செய்தார் முபீன். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் Bum2Bum துணி டயாப்பர் விற்பனைக்குத் தயாரானது. ஆனாலும் இதுதொடர்பான ஆய்வு, சாம்பிள் தயாரித்து தனது குழந்தைக்குப் பயன்படுத்தி சோதனை செய்வது போன்ற ஆயத்தப்பணிகளைப் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கியுள்ளார் முபீன்.
cloth diapers

பம்2பம் டயாப்பர் எப்படி தயாராகிறது?

Bum2Bum தயாரிப்புகளுக்கு மூங்கில் இழை கொண்டு தயாரிக்கப்படும் துணி வகைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துணி சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. மூங்கில் இழை தவிர ஹெம்ப் என்கிற மற்றொரு வகையும் இருக்கிறது என்றாலும் இந்தியாவில் இது அதிகம் கிடைப்பதில்லை என்கிறார் முபீன்.


Bum2Bum டயாப்பரின் வெளிப்பகுதி PUL ஷீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த PUL லேயர் 100% நீர்புகா தன்மை கொண்டது. காற்றோட்டமாக இருக்கும். துவைத்துப் பயன்படுத்தக்கூடியது.


டயாப்பர் உள்ளே வைப்பதற்காக மூங்கில் இழை கொண்டு தயாரிக்கப்படும் இன்சர்ட் விற்பனை செய்யப்படுகிறது. தனியாக இந்த இன்சர்ட் மட்டும் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 200 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

மூங்கில் இழை கொண்டு தயாரிக்கப்படும் இன்சர்ட் கொண்ட பாக்கெட் டயாப்பர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மூங்கில் இழைகள் கொண்டு தயாரிக்கப்படும் துணியை எட்டு லேயர் வரை மடித்து தைக்கப்படுகிறது. பார்க்க பேட் போலவே இருக்கும் இந்த Insert.

இதுதவிர இந்தத் துணி அப்படியே கட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் Flats. இந்தத் துணியை மடித்து நம் விருப்பம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2

குழந்தை கழிப்பறை செல்ல பயிற்சியளிக்க உதவும் வகையில் ’ட்ரெயினிங் பேண்ட்ஸ்’ விற்பனை செய்கிறது Bum2Bum. இதன் விலை 500 ரூபாய்.


இவை தவிர மஸ்லின் துணி, டயாப்பர் மேட், வைப்ஸ் போன்ற தயாரிப்புகளையும் Bum2Bum வழங்குகிறது. இதற்கான தயாரிப்பிற்கான துணி வகைகள் திருப்பூரில் இருந்து வாங்கப்படுகிறது. தையல் வேலைகள் பெரம்பூரிலேயே மேற்கொள்ளப்படுவதாக முபீன் தெரிவிக்கிறார்.

Bum2Bum தயாரிப்பின் சிறப்பம்சம்

சாதாரண டயாப்பர் ஷீட்டை 100 முறை வாஷ் வரை செய்யலாம். ஆனால் Bum2Bum 300 வாஷ் வரை தாக்குப்பிடிக்கும் என்கிறார் முபீன்.

S, M, L, XL என எந்த சைஸ் நம் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கும் என தடுமாறவேண்டாம். Bum2Bum டயாப்பர் ஒன்று வாங்கினாலே 5 மாதம் முதல் 5 வயது வரை (அல்லது 17 கிலோ வரை) பயன்படுத்தலாம். பட்டன் கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். இடுப்பு சுற்றளவும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வகையில் இந்தத் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த ஒரு பிராண்டும் இதுபோன்ற துணியை விற்பனை செய்வதில்லை என்பது Bum2Bum சிறப்பம்சம்.

3

அதிக உறிஞ்சுதன்மை கொண்ட மூங்கிலால் ஆன இந்தத் துணி இரண்டு மணி நேரத்தில் காய்ந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்டர், முதலீடு மற்றும் வருவாய்

ஃபேஸ்புக், இன்ஸ்டா, வலைதளம் போன்றவற்றில் ஆர்டர் பெற்று விற்பனை செய்து வருகிறார் முபீன். ஆன்லைன் விற்பனை தவிர முபீனின் வீட்டிற்கே வந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். பச்சிளம் குழந்தைக்குப் பயன்படுத்தப்படுவதால் திருப்தியடைந்த தாய்மார்களே இதன் பிராண்ட் அம்பாசிடர்கள். இவர்களது பரிந்துரை மூலமாகவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த வணிகத்தில் 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  ஆண்டு வருவாயாக 6 லட்ச ரூபாய் வரை ஈட்டப்படுவதாகவும் முபீன் தெரிவிக்கிறார்.

பராமரிப்பு முறை

ஒரு துணியை 300 முறைக்கும் மேலாக வாஷ் செய்துகொள்ளலாம். டெட்டால், கெமிக்கல் கலந்த சோப்பு பவுடர், வாசனைக்காக பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பயன்படுத்தக்கூடாது. Surf Excel Easy Wash அல்லது Quick Wash பயன்படுத்துவது சிறந்தது என்று முபீன் பரிந்துரைக்கிறார்.

ரசாயனங்களுடன் கலக்கப்படும்போது உறிஞ்சுதன்மை பாதிக்கப்படும். எனவே துண்டு பிரசுரங்கள், வாய்ஸ் மெசேஜ், வீடியோ என பலவகைகளில் வாஷ் செய்யும் முறையை விவரித்துள்ளார் முபீன்.
4

சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்

புதிய தயாரிப்பு என்பதால் மக்களிடம் கொண்டு சேர்ப்பது சவாலாக இருந்தது என்கிறார் முபீன். பார்க்க பனியன் துணி போல் இருப்பதால் உறிஞ்சுதன்மை இருக்குமா என்கிற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு வந்துள்ளது. பயன்படுத்திப் பார்க்க அறிவிறுத்தியுள்ளார். வீடியோவாக பதிவிட்டு விரிவாக விவரித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.


நார்மல் துணி தைக்கும் மிஷனில் மூங்கிலால் ஆன துணியைத் தைக்கமுடியாது. இதற்கென பிரத்யேகமாக மிஷன் வாங்கி தைக்கிறார். தைப்பதற்கு ஆள் கிடைப்பதிலும் சிரமத்தை சந்தித்துள்ளார்.


புதிய தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இணையாக வாஷிங் பற்றி விவரமாக எடுத்துச் சொல்வதும் சவாலாக இருந்துள்ளது. துணிகளுக்கு ஆர்டர் கொடுத்த பிறகு திருப்பூரில் இருந்து வந்தடைவதற்கு 2 மாதங்கள் ஆகிறது என்கிறார்.

வரும் நாட்களில் ஆஃப்லைன் ஸ்டோர் திறக்க திட்டமிட்டுள்ளார். குழந்தைக்காக டயாப்பர் மற்றும் துணி வாங்கும் வாடிக்கையாளர்கள் குழந்தைகளுக்கான மற்ற தயாரிப்புகளையும் கேட்டு வருவதால் அதிக தேவை இருக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறார்.