ஒரே நாளில் 2 நிறுவனங்களை வாங்கிய முகேஷ் அம்பானி: சோலார் எனர்ஜியில் புதிய மைல்கல்!

விரைவில் சோலார் பேனல் உற்பத்தி!
1 CLAP
0

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்த வருடம் மிகச்சிறப்பான வருடம். கொரோனா தாக்கத்திலும் இந்த வருடம் அவரின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்த நிலையில், சமீபத்தில் உலகின் 100 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கும் அதிகமாக சொத்துக்கொண்ட எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்தார்.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் சமீபகாமாக நிறைய முதலீடுகளை செய்து வருகிறது. ஜஸ்ட் டயல் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கிய அம்பானி, நேற்று ஒரே நாளில் இரண்டு நிறுவனங்களை புதிதாக வாங்கியுள்ளார்.

கிரீன் எனர்ஜி வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்துவரும் அவரது நிறுவனம் இதற்காக ’ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமையில், சீன நிறுவனமான கெம்சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நார்வே நாட்டின் REC சோலார் என்ற நிறுவனத்தை சுமார் 771 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார் அம்பானி.

இந்த விற்பனை தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார்.

அது, ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் என்ற நிறுவனத்தையும் கைப்பற்றிய அறிவிப்பு தான். இந்திய நிறுவனமான ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார்-ன் 69.36 சதவீத பங்குகளை மொத்தமாக வாங்கியுள்ளார் முகேஷ் அம்பானி. நேற்று வெளியான இந்த இரண்டு அறிவிப்புகளால் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை அளித்தன.

இந்தியாவில் சோலார் எனர்ஜி துறையில் போட்டி மிகுந்த நிறுவனங்கள் இந்த இரண்டும். இந்த இரண்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு கைகொடுக்கும் என்ற எண்ணத்தில் இரண்டு நிறுவனங்களையும் வாங்கியுள்ளது ரிலையன்ஸ்.

ஸ்டெர்லிங் அன்ட் வில்சன் சோலார் நிறுவனத்தில் ஷாபூர்ஜி பலோன்ஜி அண்ட் கோ மற்றும் குர்ஷெட் யஸ்தி தாருவாலா ஆகியோர் 69.36 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். அதனை தான் மொத்தமாக வாங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.

இந்த ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் நிறுவனம் இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் சோலார் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகும். சுமார் 26 நாடுகளில் சுமார் 11 ஜிகாவாட் அளவிலான மின்சாரம் தயாரிற்கும் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது.

இதனிடையே, REC சோலார் - ஸ்டெர்லிங் அன்ட் வில்சன் இணைப்பு மூலம் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி சோலார் பேனல் உற்பத்தி முதல் நிறுவும் பணி விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.