ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 7-லெவன் கடை: மும்பையில் தொடக்கம்!
விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்த திட்டம்!
ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் (ஆர்ஆர்விஎல்), இன்று முதல் இந்தியாவில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட 7-லெவன் வசதியான கடைகளைத் தொடங்க இருக்கிறது. முதல் 7-Eleven கடை மும்பை அந்தேரி கிழக்கில் திறக்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிரேட்டர் மும்பையில் முக்கிய சுற்றுப்புறங்கள் மற்றும் வணிக சுற்றுப்புறங்களில் இந்தக் கடைகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்ஆர்விஎல்), அதன் சொந்தமான துணை நிறுவனமான 7-இந்தியா கன்வெனியன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் மூலம், 7-லெவன் கடைகளை இந்தியா முழுவதும் வைக்கவுள்ளது.
7-லெவன் இன்க் உடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டதாக ஃபியூச்சர் குரூப் கூறிய சில நாட்களுக்குப் பிறகு ஆர்ஆர்விஎல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்ஆர்விஎல் என்பது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை விற்பனை நிறுவனமாகும்.
இந்த புதிய தொடக்கம் தொடர்பாக பேசியுள்ள ஆர்ஆர்விஎல் இயக்குநர் ஈஷா அம்பானி,
"ரிலையன்ஸ் நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், உலகளவில் நம்பகமான லக்சரி கடையான 7-லெவனை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறோம். சில்லறை வணிகத்தில் உலகளாவிய பிராண்டுகள் மத்தியில் 7-லெவன் கடை மிகவும் சிறப்பானது,” என்றார்.
SEI உடன் நாங்கள் உருவாக்கும் புதிய பாதைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சொந்த சுற்றுப்புறங்களில் அதிக வசதியையும் தேர்வுகளையும் வழங்கும், என்றுள்ளார்.
இதேபோல், ”இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய வசதியான சில்லறை விற்பனையாளர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு இது ஒரு சிறந்த நேரம்," என்றுள்ளார் SEI தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ டிபிண்டோ என்பவர்.
சில்லறை வர்த்தகத்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய 7-லெவன் கடைகள் இந்தியாவுக்கு வரவிருப்பது பெரிய வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.