முகேஷ் அம்பானி மகனுக்காக துபாயில் வாங்கிய காஸ்ட்லியான வீடு: விலை என்ன தெரியுமா?
துபாயில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை தனது இளையமகன் ஆனந்த் அம்பானிக்காக, முகேஷ் அம்பானி வாங்கிக்கொடுத்துள்ளார்.
துபாயில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை தனது இளையமகன் ஆனந்த் அம்பானிக்காக, முகேஷ் அம்பானி வாங்கிக்கொடுத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வாங்கும் வீடுகள் அனைத்துமே பிரம்மாண்டாத்திற்கு பெயர் போனவை. மும்பை Antilia-வில் உள்ள 27 மாடி வீடு, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வாங்கியுள்ள வீடுகள் என அனைத்துமே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக அடிபடும் அளவுக்கு பிரம்மாண்டத்திலும், விலையிலும் அசரவைக்கக்கூடியவை.
தற்போது கோடீஸ்வரர்களின் பாலைவனச் சோலையாக உள்ள துபாயில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பீச் சைடு வில்லா மாடல் வீட்டை அவரது இளையமகன் வாங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானி வாங்கிய பிரம்மாண்ட வீடு:
ஐக்கிய அரபு நாடுகளிலேயே அதிகமான கோடீஸ்வரர்களை கவர்ந்திழுக்கும் நாடாக துபாய் அமைந்துள்ளது. மில்லியனர்களுக்கு சொகுசான சுற்றுலா தளமாகவும், ஆடம்பர சொத்துக்களை வாங்கிக்குவிக்கும் இடமாகவும் துபாய் இருந்து வருகிறது.
இங்கு சமீபத்தில் ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சுமார் 80 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிரம்மாண்ட பீச் சைடு வில்லாவை வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 643 கோடி ரூபாய் எனக்குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல துபாயில் வீடுகள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்திலேயே இது மிகப்பெரியதாக கருத்தப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட வீடானது, துபாயில் உள்ள பனை வடிவ செயற்கை தீவான பாம் ஜுமேராவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை தனது இளையமகன் ஆனந்த் அம்பானிக்காக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தப் பிரம்மாண்ட வீட்டில் 10 படுக்கை அறைகள், பிரைவேட் ஸ்பா, வீட்டுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் அழகிய நீச்சல் குளங்கள் உட்படப் பல ஆடம்பரமான விஷயங்கள் இந்த வீட்டில் அமைந்துள்ளன.
ரியல் எஸ்டேட்டில் தடம் பதிக்கும் துபாய்:
கடந்த சில மாதங்களாகவே துபாய் அரசு இந்திய பிரபலங்கள், தொழிலபதிபர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. தற்போது வெளிநாட்டினர் துபாயில் வீடு வாங்குவதற்கான தடைகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ரியல் எஸ்டேட் சந்தையாக மாறி வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள சொத்தை வாங்குவோருக்கு 10 வருட விசா வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் அவரது மனைவி விக்டோரியா மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் ஆகியோர் ஆனந்த் அம்பானியின் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருப்பார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு:
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 93.3 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் 11வது பணக்காரராகவும், இந்திய அளவில் முதல் கோடீஸ்வரராகவும் வலம் வரும் முகேஷ் அம்பானியின், 3 வாரிசுகளில் ஆனந்த் அம்பானியும் ஒருவர்.
அம்பானி குடும்பத்துடன் வசித்து வரும் மும்பை ஆன்டிலியாவில் அமைந்துள்ள 27 அடுக்குமாடிகளைக் கொண்ட வானுயர்ந்த கட்டிடம் இந்தியாவிலேயே விலை உயரந்த இல்லமாகும். இதில் மூன்று ஹெலிபேடுகள், 168 கார்கள் நிறுத்துமிடம், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், ஒரு பெரிய பால்ரூம் மற்றும் ஒன்பது லிஃப்ட் ஆகியவை உள்ளன.