Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கண் குத்திப் பாம்பை படமெடுத்த கோவை இளைஞருக்கு நேட் ஜியோ சிறந்த இயற்கை புகைப்படக் கலைஞர் பரிசு!

கண் குத்திப் பாம்பை படமெடுத்த கோவை இளைஞருக்கு நேட் ஜியோ சிறந்த இயற்கை புகைப்படக் கலைஞர் பரிசு!

Monday December 19, 2016 , 4 min Read

25 வயதான பங்கு சந்தை வர்த்தகர் புகைப்படக்கலைஞராக மாறி, உலக புகழ் நேட் ஜியோ இந்த ஆண்டு நடத்திய ’இயற்கை புகைப்பட போட்டியில்’ கலந்துகொண்டு, அற்புதமாக புகைப்படம் எடுத்ததற்கான சிறப்பு விருதை பெற்று 2500 அமெரிக்க டாலர்களை பரிசாக வென்றுள்ளார் கோவை இளைஞர் வருண் ஆதித்யா.

image
image

அவரின் புகைப்படங்களை பார்க்கையில் பிரம்மிப்பு ஏற்படுவதோடு, இவர் எவ்வாறு இத்தனை துல்லியமாக சரியான நொடிப் பொழுதில் இந்த புகைப்படங்களை எடுத்திருப்பார் என்று நம்மை சிந்திக்கவைக்கும். தன்னுடைய கேமரா லென்ஸ் மூலம் இயற்கையின் பின்னணியில் இவர் வனவிலங்குகளை படம் பிடித்திருப்பது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இவரது புகைப்படங்களில் மாயஜாலங்கள் நிரம்பி உள்ளது. கண்களை கவரும் இவரது புகைப்படங்களே அவரின் திறமையை வெளிப்படுத்திவிடுகிறது. 

வருண் ஆதித்யா, கோவையில் இருக்கும் ஒரு முழுநேர பங்குசந்தை வர்த்தகர். நான்கு பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் விருதை வென்றதில் இவரும் ஒருவர். இந்தியாவை சேர்ந்த ஒரே வெற்றியாளர் வருண் என்பது குறிப்பிடத்தக்கது. படர்ந்த காடுகள் பின்னணியில் பச்சை நிற கண் குத்திப் பாம்பை மிக அற்புதமாக நேருக்குநேர் எடுத்ததற்கு இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘Dragging You Deep into the Woods’ அதாவது ’அடர்ந்த காடுகளுக்குள் உங்களை இழுத்து செல்கிறேன்’ என்ற அர்த்தத்திலான தலைப்பில் வெளியான வருணின் அந்த பச்சை பாம்பின் படம் நேட் ஜியோ போட்டியில் சிறந்ததாக தேர்வானது. அதே பாம்பை வருண் 23 ஷாட்டுகள் எடுத்திருந்தார், இருப்பினும் அந்த ஒரு படம் அரிய ஒன்றாக கருதப்பட்டு வெற்றிக்கு வித்திட்டது. 20,000 புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள வருணுக்கு 2500 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

வருண் ஆதித்யா பின்னணி

வங்கி அதிகாரிகளின் மகனான வருண் பல நகரங்களில் வாழ்ந்துள்ளார். அவரின் பெற்றோர்களுக்கு அடிக்கடி பணியிட மாற்றம் ஏற்பட்டதால் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக வருண் கூறினார். 

“நான் பள்ளிப்படிப்பில் அவ்வளவு நன்றாக மதிப்பெண் எடுத்ததில்லை அதனால் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவனாக, ஊக்கமில்லாதவனாக வளர்ந்தேன்,” என்கிறார். 

2011 ஆம் ஆண்டு தனக்கு 19 வயது ஆனபோதே, தனது ஆர்வம், திறமை புகைப்படத் துறையில் உள்ளது என உணர்ந்துள்ளார் வருண். கோவை ஜிஆர்டி கல்லூரியில் படித்த வருண் எம்பிஏ படிக்க லண்டன் சென்றார். அங்கே தனது சாம்சங் S2 போனால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

image
image

வெளிநாட்டு மண்ணில் ஏற்பட்ட திருப்பம்

லண்டன் எனக்கு பிடித்த இடமாகி போனது. என் மொபைல் போனில் அங்குள்ளவற்றை படம் பிடித்து நண்பர்கள், என் பெற்றோர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பேன் என்கிறார். 

“படம் பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்க, என் பெற்றோரிடம் கேட்டு டிஎஸ்எல்ஆர் கேமரா ஒன்றை வாங்கினேன். பிறகு என்ன, நான் பார்த்து ரசித்தவற்றை புதிய கேமராவில் க்ளிக் செய்து ஆசை தீர படமெடுத்தேன். எடுத்த படங்களை ஃபேஸ்புக்கில் ஆர்வத்துடன் பதிவேற்றம் செய்வேன். ஆனால் என்ன வெறும் 10 லைக்குகள் தான் கிடைக்கும். இருப்பினும் அதுவரை ஆசிரியர்கள், சுற்றி இருந்தோர் என்று யாருமே என்னை ஊக்கப்படுத்தியதே இல்லை என்பதால் அந்த ஒருசில லைக்குகள் கூட எனக்கு பெரிய உந்துதலாக இருந்தது.” 

அப்போது தான் தன் ஆர்வம், திறமை புகைப்படக்கலையில் இருப்பதை புரிந்து கொண்டார் வருண். படம் எடுக்க பலநூறு மைல்கள் பயணித்து விதவிதமாக புகைப்படங்கள் எடுக்கலானார். ஒரு பொருளை அசையாமல் காண்பிக்கும் சிறப்பு, புகைப்படங்களுக்கே உள்ளது, அதுவே என்னை லண்டன் மாநகரை சுற்றியுள்ள பூங்காங்களை படமெடுக்க ஊக்குவித்தது என்கிறார். 

“பறக்கும் பறவைகளை படமெடுப்பது சவாலான ஒன்றாக இருந்தது. அது போன்ற புகைப்படங்களைத் தான் மக்கள் பார்க்க விரும்பினர். அப்போதிலிருந்து ஆக்‌ஷன் புகைப்படங்கள் எடுக்கத்தொடங்கினேன்.” 

புகைப்படம் எடுப்பதில் உங்களின் ஆசான் யாரென்றால், சிரித்துக்கொண்டே, யூட்யூப், கூகிள் என்றார் வருண். சுயமாக தன்னை உருவாக்கிக்கொண்டுள்ள கலைஞன் வருண். முன்பு ஒருமுறை நேட் ஜியோ நடத்திய ஒரு போட்டியில் வென்று காஸ்டா ரிக்கா, பனாமா நாடுகளுக்கு பயணித்தார் அவர். முதுகலையை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். மேலும் இயற்கை புகைப்படக்கலையை பற்றி தன் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்கினார். 

image
image
”கர்நாடகாவில் உள்ள பந்திபூர் எனது முதல் ப்ராஜக்ட். என் அருமை நண்பன் சரவணன் சுந்தரத்துடன் அங்கு பயணித்தேன். என் பயண முடிவில் என் புகைப்படங்களை புரட்டும் போது நான் ஒரு சுதந்திர பறவையைப் போல உணர்ந்தேன்,” என்றார். 

சவால்கள் நிறைந்த பயணம்

பங்கு சந்தை வர்த்தகரான வருணுக்கு 8 மணி நேர பணியில் நம்பிக்கை இல்லை. ஆனால் புகைப்படக்கலையில் நினைத்த அளவு இந்தியாவில் சம்பாதிக்கும் வாய்ப்பில்லை அவருக்கு. 

“இந்தியாவில் போராட வேண்டியுள்ளது. ஒரு புதியவனாக, என்னை பற்றி, என் திறமையை பற்றி நிரூபிக்கவேண்டி இருந்தது. புகைப்படக்கலையில் எனக்கு இருந்த காதலால், இன்று என்னால் நேட் ஜியோ போன்ற ஒரு ப்ராண்டுடன் இணைய முடிந்தது.” 

இந்தியாவில் தற்போது புகைப்படக்கலைத் துறை ஒரு லாபகரமான துறையாக இல்லை. இதை ஒரு பொழுதுபோக்காக மட்டும் செய்யமுடியாது ஏனெனில் இது காஸ்டிலியான ஒரு துறை. ஒரு புதியவகை லென்ஸ் வாங்க தனக்கு தேவைப்பட்ட 10 லட்ச ரூபாயை பெற்றோரிடம் கடனாக பெற்றுள்ளார் அவர்.

image
image
“ஒருவர் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பின்னுள்ள கதையை புரிந்து கொண்டு, வெவ்வேறு கோணங்களில் அதை சிந்தித்து அனுபவிக்கவேண்டும். அதுவே என்னுடைய வெற்றி ஆகும். அதனால் ஒவ்வொரு படத்தை எடுக்கும்போதும் அதன் வடிவமைப்பில் கவனம் செலுத்துவேன். அதுவே அந்த படத்தின் சக்தியை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும், சட்டென ஈர்க்கவும் செய்யும்.” 

விருதை பெற்றுத் தந்த பச்சை பாம்பு

கடந்த ஜூலை 24 ஆம் தேதி, வருண் தனது நண்பர் அர்விந்த் ராமமூர்த்தி உடன் சேர்ந்து அம்போலி எனும் மகாராஷ்டிராவில் உள்ள மலைப்பிரதேசத்துக்கு சென்றார். அங்கு பெய்த தொடர் மழையை இடையூறாக பார்த்த பலருக்கு மத்தியில் அந்த ரம்மியமான சூழலை ரசித்து படமெடுக்கச் சென்றார் வருண். 

“மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மலபார் குதிக்கும் தவளைகளை படம் எடுப்பதற்காக நான் அங்கு சென்றேன். அப்படி படம் எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அந்த பச்சை நிற கண் குத்தி பாம்பை பார்த்தேன். காய்ந்த ஒரு மரக்கிளையில் சுருட்டிக்கிடந்த அந்த பாம்பு என்னை படமெடுக்க ஈர்த்தது.” 
image
image

”அதுவரை மாக்ரோ லென்ஸ் பயன்படுத்தி மலபார் தவளைகளை படமெடுத்து வந்தேன். முதலில் அதே லென்ஸ் கொண்டு இந்த பாம்பையும் படமெடுத்தேன். பின் வைட் ஆங்கில் லென்ஸ் (16-35mm) மாற்றி எடுக்கலானேன். அது ஒரு குழந்தை பாம்பு, அதனால் கீழே படுத்து அதன் அளவில் படமெடுக்க வேண்டி இருந்தது. 10-15 செமீ நீளம் இருந்த அந்த பச்சை பாம்பு விஷத்தன்மை உடையது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதன் அருகில் சென்று வைட் ஆங்கில் லென்ஸ் கொண்டு படம் எடுத்தேன். பல வாரியாக அந்த பாம்பை படமெடுத்துவிட்டு ஒருவித மனநிறைவுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்,” என்று தன் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார் வருண். 

இந்த இளம் கலைஞரின் உந்துதல் சக்தி என்னவென்று கேட்டால், 

“புகைப்படங்கள் மீதான என் காதல் என்னை மேலும் படமெடுக்க ஊக்கம் தருகிறது. என் வாழ்க்கை பாடங்களை போட்டோகிராபி மூலம் நான் கற்றுள்ளேன். எல்லாருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நமக்கென்று ஒரு துறை பிடித்திருக்கும். பிறர் சிரமமாக கருதும் அதே பணியை நாம் சுலபமாகச் செய்வோம். என் திறமையை நான் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார் வருண். 

திறமையும், நம்பிக்கையும் இருந்தால் நாம் காதலிக்கும் பணியில் சிறந்து விளங்கமுடியும் என்பது இந்த இளைஞர் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அவருக்கு நம் வாழ்த்துக்கள்!

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ருதி மோஹன்