தாய்பால் சோப், கரிசிலாங்கண்ணி காஜல்- நலங்கு மாவு பவுடர்: மாதம் 1 லட்சம் ஈட்டும் லில்லி!
முக க்ரீம், லிப் பாம், ஹேர் ஆயில், ஷாம்பூ, சோப், காஜல், லிப்ஸ்டிக் என அனைத்து அழகுப் பொருள்களுக்கும் ஆர்கானிக் தீர்வினை வழங்கி 100க்கும் அதிகமான புரோடெக்டுகளுடன் காஸ்மெட்டிக் தயாரிப்பு தொழிலில், ஆண்டுக்கு ரூ1,00,000 வருவாய் ஈட்டுகிறார் லில்லி.
எங்கும், எதிலும் ஆர்கானிக் பொருட்களை நாடும் பழக்கம் மக்களிடம் பரவி வருகிறது. காஸ்மெட்டிக் உலகுக்குள்ளும் ஆர்கானிக் தயாரிப்புகள் அடியெடுத்து நன்மாற்றத்தை வித்திட்டுள்ளது. அழகினை பராமரிக்கவும், அழகினை கூட்டுவதற்கும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்பொருட்களை ஆரோக்கியமாக வழங்கிட முயன்று வருகிறார் சென்னையை சேர்ந்த லில்லி நிலா பார்தீபன்.
2018ம் ஆண்டு 1000 ரூபாய் முதலீட்டில் நலங்குமாவு சோப், நலங்குமாவு பவுடர் என சொற்பமான தயாரிப்புகளுடன் 'லக்சாதிகா ஹெர்பல்ஸ்' எனும் பெயரில் வீட்டிலே தொழிலை தொடங்கியுள்ளார் லில்லி. ஃபேஸ்புக் மார்கெட்டிங், கல்லுாரிகளில் ஸ்டால் என்று அவரது தொடர் முயற்சிகளால், வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொண்டுள்ளார்.
3 ஆண்டுகள் பயணத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்புகளுடன் மாதம் ரூ.1லட்சம் வருவாய் ஈட்டும் தொழில்முனைவராக வளர்ந்து இருக்கிறார் லில்லி.
வருங்காலத்தில் தயாரிப்பு ஆலை அமைத்து எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயலாற்றி வரும் அவரிடம் பேசினோம்.
"எனக்கு சொந்த ஊர் விழுப்புரம். இப்போ சென்னைவாசி. எம்.பி.ஏ முடிச்சிட்டு ஹெச்.ஆராக 2 வருஷம் வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம், கல்யாணம், குழந்தைனு வேலைக்கு போக முடியல. குழந்தையை நான் தான் கவனிச்சுகணும்.
ஒருநாள் கடையில் வாங்கிய கஸ்துாரி மஞ்சள் தேச்சு பாப்பாவை குளிக்க வச்சேன். அவ அழுக ஆரம்பிச்சுட்டா. ஏன், இப்படி அழுகுறானு நான் யூஸ் பண்ணி பார்த்தா, கையிலாம் எரியுது. அய்யோ, நமக்கே எரியுதுனா, குழந்தைக்கு எப்படி இருக்கும். அதுல இருந்து அவ விஷயத்தில் எப்பவும் கவனமா இருப்பேன். மாமியாரின் பக்குவதில் பாப்பாவுக்காக நலங்கு மாவு பவுடர் செய்தேன். சோப் தயாரிக்க முறைப்படி வகுப்புக்கு சென்று கற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நலங்குமாவு சோப்பு செய்தேன்.
செய்து வைத்திருப்பதில் எக்ஸ்ட்ராவை சொந்தகாரங்களுக்கு கொடுப்பேன். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் கொடுப்பேன். அங்கிருந்து தான் தொழிலாக துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
காஸ்மெட்டிக் பார்மூலேஷனில் டிப்ளமோ கோர்சை முறைப்படி கற்றப்பின், பலநாள் பயிற்சிகளுக்கு பிறகு பாப்பாவுடைய பெயரான 'லக்சாதிகா' எனும் பெயரில் தொழிலைத் தொடங்கினேன்.
பெர்ஃபக்ட் சோப்பினை தயாரிப்பதற்கு முன்னதாக நிறைய சொதப்பியுள்ளேன். பயிற்சி காலத்தில் கொழ கொழப்பாக தான் வந்தது. கிட்டத்தட்ட 10 கிலோ சோப்பினை வீணாக்கியதற்கு பிறகே, சரியான பார்மூலாவை கொண்டு வந்தேன்.
தொடக்கத்தில், சொந்தக்காரர்கள், அவர்களது நண்பர்கள் என குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே விற்பனை நடந்துவந்தது. அந்த சமயத்தில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் லக்சாதிகா பெயரில் பக்கத்தை துவங்கி, தொடர்ந்து போஸ்ட் செய்வேன். அது தவிர, காலேஜ், மால், வள்ளுவர் கோட்டம் என பல இடங்களில் ஸ்டால் போட்டேன். வாடிக்கையாளர்களின் வட்டத்தினை பெரிதாக்க, ஸ்டால்கள் கைக்கொடுத்தன.
குழந்தைப் பாராமரிப்பு ஒருபுறம், தயாரிப்பு பணி ஒருபுறம், விற்பனைப்பணி மறுபுறம் என ஓடிக்கொண்டே இருந்து, பல நாள் துாக்கமில்லாமல் இருந்திருக்கேன். குழந்தை இருப்பதால், அவள் துாங்கும் சமயம் மட்டும் தான் என்னுடைய வொர்க் டைம். அதற்காக இரவு 3 மணி, 4 மணி வரை முழித்திருந்து பொருட்களை தயாரிப்பேன். ஆனால், எம்.பிஏ முடித்துவிட்டு இந்தபணி தேவைதானா என்று குடும்பத்திலிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
துாக்கமற்று கடந்த இரவுகளால் உடல் மெலிந்து போனது. தொடக்கத்திலிருந்தே மாமியார் மட்டுமே முழு ஆதரவு அளித்து வந்தார். இப்போதும், லக்சாதிகா ஹெர்பல்சின் கணக்குகளை அவரே கவனித்து வருகிறார்.
தொடக்கத்தில் சராசரியான வணிகம் மட்டுமே நடந்துவந்த நிலையில், 10வது மாதத்தில் ஆர்கானிக் ஷாப்பிலிருந்து பல்க் ஆர்டர் கிடைத்தது. குழந்தைகளுக்கான நலங்குமாவு சோப்புடன் அடுத்தடுத்த தயாரிப்புகளான குளியல் பவுடர், கற்றாழையில் பேபி லோஷன், மசாஜ் ஆயில், ஹெட்பாத் ஆயில், குழந்தைகளுக்கான ஷாம்பூ ஆகியவற்றை அறிமுகப்படுத்தினேன்.
பேபி புரோடெக்ட்டுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சோப் தயாரிப்பில் பலரும் ஈடுப்பட்டு வருவதால், வணிக ரீதியாக வெற்றியடைய தயாரிப்புகளின் தரத்திலும் தனித்துவத்திலும் அதிகம் கவனம் செலுத்தினேன்.
வாடிக்கையாளர்களின் விரும்பும் வகையில் சோப்பினை கஸ்டமைஸ் செய்துதருகிறேன். அப்படி ஒருமுறை டாக்டர் ஒருவர், அவரது தாய்ப்பாலில் சோப் தயாரித்து கொடுக்கச் சொன்னாங்க. அதிலிருந்து பல தாய்மார்களும் அவர்களது தாய்ப்பாலில் சோப் செய்துதரக் கூறுகின்றனர்.
தொடர்ந்து, பசும்பால், ஆட்டுபால், ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், கற்றாழை, முருங்கைக் கீரை, ஆரஞ்சு, லெமன், வெட்டிவேர், ரெட் ஒயின் என சோப்பில் மட்டும் 30 வகைகளும், 10 நிறங்களிலான ஆர்கானிக் லிப்ஸ்டிக், கரிசலாங்கண்ணியில் காஜல், டே க்ரீம், நைட் க்ரீம், கற்றாழை ஹேர் மாஸ்க், ஹேர் சீரம் என 100 வகையான ஆர்கானிக் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எங்களது இணையதளத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறேன். வாரத்திற்கு 50 ஆர்டகள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரூ1,00,000 வரை வருமானம் கிடைக்கிறது.
விழுப்புரத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து மஞ்சள், கரிசலாங்கண்ணி, முருங்கைகீரை, செக்கில் ஆட்டிய எண்ணெய்யை கொள்முதல் செய்து கொள்வேன். அதுதவிர, மற்ற மூலப்பொருள்களை மும்பை, டில்லி மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
"இப்போது வரை, வீட்டிலேயே பொருட்களைத் தயாரித்து வருகிறேன். இதன் அடுத்த கட்டமாக, உற்பத்தி ஆலை தொடங்கி, எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமர்த்த வேண்டும். விரைவில் அதற்கான பணிகளில் இறங்கிவிடுவேன்," என்று தன்னம்பிக்கையுடன் கூறி அவரது தொழிற்பயணத்தை பகிர்ந்தார் ஹோம்ப்ரூனர் லில்லி.
அவரது தயாரிப்புகளை வாங்குவதற்கு :-