ஒரே நாளில் பில்லியனர் ஆன ஃபால்குனி நயர்: Nykaa ஐபிஓ வெளியீட்டால் $6.5 பில்லியன் திரட்டி சாதனை!
தொழிலதிபர் கனவால் சாதித்த ஃபால்குனி நாயர்!
அழகுசாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் 'நைகா' (Nykaa). நைகாவின் தாய் நிறுவனமான FSN E-Commerce Ventures சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. ஐபிஓ விற்பனையில் ஆங்கர் இன்வெஸ்டர்ஸ் எனப்படும் முதலீட்டர்களிடம் இருந்து மட்டுமே ரூ.2,396 கோடி திரட்டியது நைகா.
இந்த வளர்ச்சி காரணமாக நைகா நிறுவனத்தின் சிஇஓ தொழிலதிபர் ஃபால்குனி நயர் ஒரே நாளில் பில்லியனர் ஆகியுள்ளார். ஃபால்குனி நயர் FSN இ-காமர்ஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
ஐபிஓ வெளியீட்டுக்கு பின்பு இவரின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டாலர் வரை அதிகரித்தது. இந்த உயர்வால், சொந்த முயற்சியில் பில்லியனர் (self made) ஆன பெருமையை ஃபால்குனி நயர் பெற்றுள்ளார்.
மேலும், ஓரே நாளில் இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்று அசத்தியுள்ளார். ஃபால்குனி நயர் தலைமையில் சமீப காலமாகவே நைகா ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியால் குறைந்த ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாக நைகா உருவெடுத்துள்ளது.
மேலும், வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய சந்தையில் முதல் முறையாகப் பியூட்டி துறை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக, ’நைகா' ஐபிஓ வெளியிட்டது. இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலமாக நைகா சுமார் 722 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்தது.
ஸ்டெட்வியூ கேபிடல், ஷார்ப் வென்ச்சர்ஸ் மற்றும் லைட்ஹவுஸ் ஃபண்ட்ஸ் போன்ற வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் மூலமாகவும், அலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் போன்ற பிரபலங்களிடம் இருந்தும் 112 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி திரட்டியது.
ஐபிஓ-வில் கிடைத்த நிதி மூலமாக நைகா இனி அழகு மற்றும் ஆரோக்கிய விற்பனை சந்தையில் மட்டும் இருக்கப்போவதில்லை. ஆம், சந்தையை விரிப்படுத்தப் போகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள், உடைகள் போன்ற தயாரிப்புகளிலும் ஈடுபட இருக்கிறது. நகை விற்பனையில் ஈடுபடும் வகையில் ஏற்கனவே ‘பிபா பெல்லா' மற்றும் தோல் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் வகையில் டாட் & கீ ஆகிய நிறுவனங்களை இந்த வருடம் நைகா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று பில்லியனராக அறியப்படும் ஃபால்குனி நயர், 2012 வரை இந்தியாவின் முன்னணி முதலீட்டு வங்கியின் தலைவராக இருந்தவர். ஆனால், அவரின் கனவு ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதே. இந்த கனவை நனவாக்க நினைத்த போது அவருக்கு வயது 50.
அந்த வயதில் தனது தொழிலதிபர் கனவை நிறைவேற்றுவதற்காக நைகா-வை துவங்கியவர் 8 வருட கால இடைவெளியில் அதனை நிறைவேற்றியுள்ளார். அவரின் முயற்சியால் இன்று நைகா 40 நகரங்களில் 80 கடைகளுடன் அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்பு விற்பனையில் பெரிய சாம்ராஜ்யமாக செயல்பட்டு வருகிறது.
தொகுப்பு: மலையரசு