ரசாயனம் நிறைந்த உணவால் மோசமாகிய உடல்நிலை; ஆரோக்கியத்தை மேம்படுத்த Farmery தொடங்கிய விவசாயி மகள்!
விவசாய பின்னணியை கொண்ட காமாக்ஷி, நாம் சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து பிராண்டான ஃபார்மரியை உருவாக்கி சமூக ஆரோக்கியத்தில் பங்கெடுத்து வருகிறார்.
விவசாயப் பின்னணியை கொண்ட காமாக்ஷி சிறுவயதிலே, "நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்..." என்பதை அவரது விவசாயி தாயிடம் இருந்து கற்றுக்கொண்டார். இன்று இத்தத்துவத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து பிராண்டான ஃபார்மரியை (FARMERY) உருவாக்கி சமூகத்தின் ஆரோக்கியத்தில் பங்கெடுத்து வருகிறார்.
சண்டிகரில் பிறந்த காமாக்ஷி நாகர், சிறு வயதிலிருந்தே இயற்கை எழில் சூழ வளர்ந்தவர். அவரது தந்தை பொதுப்பணித் துறையில் பொறியியல் தலைவராக பணிபுரிந்து வந்தவர். அவரது தாய் ஒரு அர்பணிப்புள்ள விவசாயி. அவர்களது குடும்பத்தின் 80 ஏக்கர் பண்ணையில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
பண்ணையிலிருந்து பெறப்படும் பால், நெய், வெண்ணெய் மற்றும் பிற விளைப்பொருட்கள் அவர்களது உணவின் ஒரு பகுதியாக இருந்து ஆரோக்கியமான வாழ்கைக்கு அடித்தளமாகின. சிறு வயதிலே ஆர்கானிக் வேளாண்மையின் மகத்துவத்தையும், மதிப்பையும் கண்கூடாக பார்த்து வளர்ந்தது, காமாக்ஷியின் இன்றைய முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தது.
விவசாயம் மற்றும் இயற்கை விளைபொருட்கள் மீதான அன்பை அவருக்குள் ஊட்டியது அவரது அம்மாதான். நிலத்தில் பயிரிட்டு விவசாயம் மேற்கொள்வதை மட்டுமல்ல, விளைவித்த பொருள்களை உள்ளூர் சந்தைகளில் விற்பது போன்ற வணிக அம்சங்களையும் அவர் அம்மாவிடமிருந்து கற்று தேர்ந்தார்.
"என் அம்மாவுக்கு 73 வயதாகிறது. இன்றும் உடல்நிலை மோசமாக ஆகிய போதும், அவர் பண்ணைக்கு செல்வதை நிறுத்தவில்லை. அவரது வாழ்நாள் முழுவதும் விவசாயம் செய்து வருகிறார். அர்ப்பணிப்பு என்பது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று. என் உத்வேகத்திற்கான ஆதாரம் அவர். பராம்பரிய விவசாயத்திற்கும் தொழில்முனைவு மனபான்மைக்கும் இடையேயான நுட்பமான மனநிலையை அவர் எவ்வாறு ஏற்படுத்தி, பராமரிக்கிறார் என்பதை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்," என்று காமாக்ஷி பெருமிதத்துடன் ஹெர்ஸ்டோரியிடம் கூறினார்.
1996ம் ஆண்டு காமாக்ஷி திருமணமாகி டெல்லிக்கு குடிபெயர்ந்த பிறகு, ஆர்கானிக் உணவின் தேவையை உணர்ந்தார். இயற்கை மத்தியிலான கிராம வாழ்க்கையிலிருந்து நகரத்திற்கு மாறியதில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
"டெல்லிக்கு குடிபெயர்ந்த பிறகு, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்தது. நீர், காற்று, காய்கறிகள் என அனைத்தும் மாசு மற்றும் இரசாயனங்கள் நிறைந்திருந்தது. காய்கறிகளை கழுவும் தண்ணீர் கூட இங்கு சுத்தமாக இல்லை," என்று வேதனையுடன் புலம்பினார்.
உணவின் தரம் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கும் அவரது தாயார், சண்டிகரில் கிடைக்கும் விளைபொருட்களுக்கும், டெல்லியில் கிடைக்கும் ரசாயனம் கலந்த காய்கறிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார். இந்த அப்பட்டமான மாறுபாடு காமாக்ஷிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், ஆர்கானிக் பொருட்களைத் தேட அவளை மேலும் தூண்டியது.
FARMERY விதை விழுந்த கதை...
திருமணமாகிய பின் ஏற்பட்ட இடமாற்றம் காமாக்ஷியின் உடல்நிலையை மோசமாக்கியது. அதற்குக் காரணம் அவர் உட்கொண்ட ரசாயனம் நிறைந்த உணவுகள் தான் என்று அறிந்தபின், காமாட்சியும் அவரது கணவரும் ஆர்கானிக்காக விளைந்த பொருட்கள் மற்றும் விவசாயிகளை பற்றி ஆராயத் தொடங்கினர்.
அவர்களது குடும்பத்திற்காக சிறந்த உணவினை கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தனர். இந்த தேடலின் நீட்சியாய் 2018ம் ஆண்டு அவருடைய கணவர் `ஃபார்மரி` நிறுவனத்தை விலைக்கு வாங்க உந்தியது. 2020ம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றில் அவர் வணிகத்தை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல அயராது உழைக்கத் தொடங்கினார்.
"ஒரு பெரிய குடும்பத்தில் மணம் முடிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு பெண் தொழில் தொடங்குவது என்பது பொதுவானதல்ல. அப்படியே நான் சொந்தமாக ஏதாவது செய்ய விரும்பினாலும், பல ஆண்டுகளாக வீட்டுக்கென கட்டமைக்கப்பட்டுள்ள சில மதிப்புகளை நான் உடைத்துவிடாமல் இருக்கவேண்டும். அதனால், கைவினைஞர்களிடமிருந்து நகைகளைப் பெற்று, அவற்றைக் காட்சிக்கு வைத்து, என் வீட்டிலே சில ஆண்டுகளாக விற்றுவந்தேன். என் கணவர் ஃபார்மரியை விலைக்கு வாங்கியபோது, முழுநேர தொழில்முனைவோருக்குள் நுழைய வழிவகுத்தது," என்று அவர் பகிர்ந்தார்.
ஃபார்மரிக்குள் காமாக்ஷி அடையெடுத்தவுடன், பல முன்னெடுப்புகளை முன்னெடுத்தார். அதில், அவர்களது தாய் வீட்டு பண்ணையில் கையாண்டு வந்த கைகளால் செய்யும் சில பராம்பரிய நடைமுறைகளை கொண்டு வந்தார்.
"ஆர்கானிக் பருப்பு, மோர் ஆகிய தயாரிப்புகளை புதிதாக சேர்த்தேன். நாங்கள் பருவகால பழங்களை மட்டுமே வளர்க்கிறோம்," என்று கூறினார்.
"வணிகம் என்பது பிராண்டை உருவாக்குவது மட்டுமல்ல..."
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் ஃபார்மரி நேரடியாக பணிபுரிந்து, நிலையான விவசாய நடைமுறைகளை உறுதி செய்கிறது. அவரைப் பொறுத்தவரை, ஒரு பிராண்டை உருவாக்குவது என்பது தரமான பொருட்களை வழங்குவது மட்டுமல்ல. ஒரு நிலையான மற்றும் தார்மீக கொள்கைகளுடன் ஒரு வணிகத்தை உருவாக்குவது.
"நான் ஏதாவது செய்கிறேன் என்றால், நான் அதை சரியான வழியில் செய்ய வேண்டும்" என்று அவர் கூறுகிறார். கால்நடைகள் நன்றாக கவனிக்கப்படுவதையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்து, அவர்கள் வளர்க்கும் பண்ணைகளை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுகிறார். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து விளைப்பொருட்களை கொள்முதல் செய்தாலும், கார்பன் தடயத்தை குறைப்பதற்கான வழிகளை அவர் ஆராய்கிறார்.
"ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தார்மீகக் கொள்கைகளுடன் விளைப்பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளை அடையாளம் காண நாங்கள் ஒரு ஆய்வு செய்தோம். இப்போது, எங்களிடம் நம்பகமான நெட்வொர்க் உள்ளது. எங்களது விவசாயிகள் அவர்களது விளைப்பொருட்களுக்கான விலையினை அவர்களே நிர்ணயிக்கிறார்கள். அது மட்டுமின்றி, எங்கள் விற்பனையிலிருந்து அவர்களுக்கும் கமிஷன் கிடைக்கும்," என்று அவர் விளக்கினார்.
அவரது ஆன்மீகக் கண்ணோட்டமும் தனது தொழில்முனைவோர் பயணத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஹெக்டர் கார்சியாவின் இகிகை புத்தகம் வணிகத்திற்கான அவரது அணுகுமுறையை வடிவமைத்தது, குறிப்பாக விநியோகச் சங்கிலியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுடன் ஈடுபடுவதை வலியுறுத்துகிறது.
"நீங்கள் ஒரு வெற்றிகரமான வணிகத்தை நடத்த விரும்பினால், ஏணியின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுடன் ஈடுபடத் தொடங்குங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. நான் அவர்களிடம் பேசுவேன், தினமும் அவர்களை வாழ்த்துவேன், அவர்களுக்கு வேலை பிடித்திருக்கிறதா? அவர்களை நன்றாக உணர வைப்பது எது? என்று அவர்களிடம் கேட்பேன்," என்றார்.
இன்று ஃபார்மரி விசுவாசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சமூகத்தில் ஃபார்மரி நன்வரவேற்பைப் பெற்றுள்ளது.
"எனது பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல தரமான ஏ2 பால் மற்றும் பால் பொருட்களை விரும்புகிறார்கள். எங்களது தயாரிப்புகளைப் பயன்படுத்தி பார்த்து, நேர்மறையான விமர்சனங்களுடன் திரும்பி வருகிறார்கள். இந்த நேரடி கருத்து வணிகப் பயணத்தின் மிகவும் பலனளிக்கும் அம்சங்களில் ஒன்றாகும்.
பெண்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய ஒரு குறிப்பிட்ட தலைமுறை அறிவுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் குடும்பத்தின் நலனுக்கு ஆரோக்கியமானது எது என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதையே உங்களது வாடிக்கையாளர்களுக்கும் பின்பற்ற வேண்டும். உணவுடன் பெண்களின் ஆழமான வேரூன்றிய தொடர்பு, தலைமுறைகள் தாண்டி கடத்தப்பட்டுள்ளது," என்றார்.
ஏக்கருக்கு ரூ.6 லட்சம் லாபம் - இயற்கை விவசாயத்தில் அசத்தும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி!