குறைந்த கட்டணத்தில் வெளியூர் செல்ல டாக்சி புக் செய்யணுமா? இதோ இருக்காங்க ‘டாக்சிடா...’
வெளியூர் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு டாக்சி ஆபரேட்டர்களின் கட்டண விவரங்களை தொகுத்து வழங்குகிறது Taxida ஸ்டார்ட் அப்.
மொபைல் வாங்கவேண்டும். சாம்சங், ஓப்போ, ஆப்பிள் எது வாங்கலாம்?
நகை வாங்கவேண்டும். ஜிஆர்டி, கல்யாண் ஜுவல்லர்ஸ் எங்கு போகலாம்?
டிவி வாங்கவேண்டும். சோனி, எல்ஜி எது வாங்கலாம்?
ஹேர் கட் செய்யவேண்டும். நேச்சுரல்ஸ், கிரீன் ட்ரெண்ட்ஸ் எங்கு போகலாம்?
இப்படி விம் பார் வாங்குவது முதல் வில்லா வாங்குவது வரை அனைத்தையும் பல்வேறு ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்து நாம் பழகிவிட்டோம்.
பொதுவாகவே நாம் எந்த ஒரு பொருளையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து வாங்கிவிடுவதில்லை. அதற்கான தேவை, செலவிட வேண்டிய தொகை, தரம் போன்ற பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கிறோம்.
அதேபோல் முன்பெல்லாம் வெளியில் போக வேண்டுமானால் பஸ், ரயில் என்ற ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்வோம். ஆனால் இன்று ஓலாவா, ஊபரா என்பதுதான் பிரதான கேள்வியாகிவிட்டது.
இதற்கு முக்கியக் காரணம் டாக்சி சேவைகளில் கிடைக்கும் சௌகரியம் மட்டுமல்ல. இதற்காக மக்கள் செலவிடும் தொகையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆனால் உள்ளூர் பயணங்களுக்கு மிகவும் வசதியாகத் தோன்றும் டாக்சி சேவைகள் வெளியூர் பயணங்களுக்கு ஏன் ஏற்றதாக இருப்பதில்லை?
இதற்கு முக்கியக் காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் டிராப் செய்வதற்கு டாக்சி நிறுவனங்கள் பயணிகளிடம் இரு வழி பயணத்திற்கான கட்டணங்களை வசூலிக்கின்றன. அதாவது நாம் பயணிக்கும் இடத்திற்கு செலவிடவேண்டியத் தொகையைக் காட்டிலும் இரு மடங்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வளிக்கிறது Taxida ஸ்டார்ட் அப். இந்தத் தளம் நீங்கள் பயணிக்கவேண்டிய இடத்திற்கு பல்வேறு டாக்சி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டணங்களைத் தொகுத்து வழங்குகிறது. 25-க்கும் மேற்பட்ட டாக்சி ஆபரேட்டர்களின் விலைப்பட்டியலை இந்தத் தளத்தின் மூலம் நீங்கள் பார்வையிடலாம்.
ஒரே இடத்தில் இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்படுவதால் நீங்கள் குறைந்த கட்டணம் வசூலிக்கும் டாக்சி நிறுவனத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் எந்தவித மறைமுகக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் ஆறுதல்.
தொழில்முனைவு ஆர்வம்
Taxida நிறுவனர் ரொசாரியோ நார்கிசன் பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. இவர் பள்ளி நாட்களிலேயே தொழில்முனைவில் ஆர்வம் காட்டியுள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பள்ளியை விட்டு செல்லும்போது தாங்கள் பயன்படுத்திய பொருட்களை ஜூனியர் மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்தார்.
அடுத்து கல்லூரி நாட்களில் ஆன்லைன் ரீசார்ஜ் வலைதளம் ஒன்றை உருவாக்கினார்.
சிறியளவில் இத்தகைய முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து dineabode.com என்கிற உணவு டெலிவரி ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார். இதன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்தார்.
இந்த வணிக முயற்சி வெற்றிபெறவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதில் ஈடுபட்ட பின்னர் இந்த வணிக முயற்சியை நிறுத்திக்கொண்டார். அதன் பிறகு சில ஸ்டார்ட் அப்களுடன் பணியாற்றி தொழில் நுணுக்கங்களைக் கற்றறிந்தார் ரொசாரியோ.
டாக்சி சேவை பிரிவு
“எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தமானவை. யூகே-வில் உள்ள டாக்சி ஸ்டார்ப் அப் ஒன்றில் பணிபுரிந்தேன். அந்த சமயத்தில் வெளியூர்களுக்கான டாக்சி சேவை பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை கவனித்தேன்,” என்கிறார் ரொசாரியோ.
டாக்சி சேவை சந்தையில் செயல்படுவது குறித்து தீவிரமாக யோசித்தார் ரொசாரியோ. தற்போது Taxida இணை நிறுவனராக உள்ள பாலாஜியுடன் வணிக யோசனை குறித்து கலந்துரையாடினார்.
இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுக்க விரும்பிய ரொசாரியோ, தனது வேலையை விட்டு விலகினார். மற்றொரு நண்பரான நிதினையும் இணைத்துக்கொண்டு Taxida நிறுவினார்.
“இந்தியாவில் எத்தனையோ உள்ளூர் டாக்சி ஆபரேட்டர்கள் செயல்படுகிறார்கள். சிறியளவில் இயங்கி வரும் இவர்கள் வளர்ச்சியடையப் போராடுகிறார்கள். இந்தப் பிரிவில் உள்ள பெரிய நிறுவனங்கள் கட்டணங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஒரு வழியில் மட்டும் பயணிப்பதற்கு இருமடங்காகக் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். இதுதவிர சுங்கக்கட்டணம், மாநில பெர்மிட் என எத்தனையோ மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன,” என்று இந்தப் பிரிவில் உள்ள சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டார் ரொசாரியோ.
இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திப்பதால் பயணிகள் தொலைதூர பயணங்களுக்கு இந்த டாக்சி சேவைகளைத் தேர்வு செய்வதில்லை. இதனால் நம்பகமான டாக்சி ஓட்டுநர்களைத் தேடுகிறார்கள்.
சிறு டாக்சி ஆபரேட்டர்களுக்கான ஒரு பொதுவான தளத்தை உருவாக்கவேண்டும் என்பதே Taxida நோக்கம்.
“நாங்கள் சிறு டாக்சி ஆபரேட்டர்களுக்கு டூல்களை வழங்குகிறோம். அவர்கள் இவற்றைக் கொண்டு வணிகங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இவர்கள் சந்திக்கும் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களுக்கும் நாங்கள் தீர்வளிக்கிறோம்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“இது ஒருபுறம் இருக்க வாடிக்கையாளர்கள் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறோம். அவர்கள் எந்த கட்டணத்தைப் பார்க்கிறார்களோ அதே தொகையை செலுத்தினால் போதும். இது சுங்கக் கட்டணம், மாநிலங்களுக்கிடையே வசூலிக்கப்படும் பர்மிட் கட்டணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. இதுதவிர வேறு எந்தவித மறைமுக கட்டணங்களும் விதிக்கப்படுவதில்லை,” என்று வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் அம்சங்களை சுட்டிக்காட்டினார்.
முதலீடு மற்றும் வருவாய்
குழு, பிராடக்ட், மார்க்கெட்டிங் என Taxida இதுவரை 40 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. லாபமோ நஷ்டமோ இல்லாத பிரேக்-ஈவன் நிலையை இந்நிறுவனம் இன்னமும் எட்டவில்லை. டாக்சி ஆபரேட்டர்களை அதிகளவில் தளத்தில் இணைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சேவையை விரிவுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
சேவை மற்றும் வணிக மாதிரி
Taxida கீழ்கண்ட சேவைகளை வழங்குகிறது:
- நகரங்களுக்கிடையே டாக்சி சேவை – ஒருவழிப் பயணம் மட்டுமல்லாது ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று திரும்புதல்
- வாடகை அடிப்படையில் நகருக்குள் பயணம் மேற்கொள்வதற்கான பேக்கேஜ்
- விமான நிலையத்திற்கான சிறப்பு பேக்கேஜ் (மீட் அண்ட் கிரீட் சேவைகளை உள்ளடக்கியது)
- நகரங்களுடையேயான பயண பேக்கேஜ்
- ஆன்மீக பயண பேக்கேஜ்
- டெம்போ டிராவல்லர் பேக்கேஜ்
அனைத்து வகையான டாக்சி சேவைகளை வழங்குவோர்களையும் வாடிக்கையாளர்களையும் Taxida ஒன்றிணைக்கிறது.
வாடிக்கையாளர்கள்: பயணம் செய்யும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை நகரங்களுக்கிடையே ஒரு வழி பயணத்திற்கான கட்டணத்தை மட்டுமே Taxida வசூலிக்கிறது. பயணம் செய்ய விரும்புவோர் பயணக் கோரிக்கையை முன்வைத்ததும் டாக்சி ஆபரேட்டர்கள் அனைவரிடமிருந்தும் கட்டண விவரங்களைப் பெறலாம்.
ரேட்டிங் மற்றும் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு தகுந்த ஆபரேட்டர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
டாக்சி ஆபரேட்டர்கள்: டாக்சி ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை உள்ளூர் டாக்சி ஆபரேட்டர்கள் தங்களது வணிகத்தை சிறப்பாக வளர்ச்சியடையச் செய்ய உதவும் சந்தைப் பகுதியாக Taxida செயல்படுகிறது.
வணிக வளர்ச்சி
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகமானது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
“கொரோனா பெருந்தொற்று காலமான மே மாதத்தில் எங்கள் சேவையை அறிமுகப்படுத்தினோம். ஆங்காங்கே சிக்கிக்கொண்டு பயணிக்க முடியாமல் தவித்தவர்களுக்கும் அவசரத் தேவைகளுக்காக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் உதவத் தொடங்கினோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானோம், இதே நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்கள் இன்றளவும் எங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறார்கள்,” என்கிறார்.
பெருந்தொற்று சூழலிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும்கூட 100 நாட்களில் நகரங்களுக்கிடையே இந்தத் தளத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு மற்றும் பெங்களூரு முழுவதும் Taxida செயல்பட்டு வருகிறது.
சந்தைப்படுத்துதல் மற்றும் சவால்கள்
விவேக் தலைமையில் இந்நிறுவனத்தில் மார்க்கெட்டிங் குழு சிறப்பாக இயங்கி வருகிறது. மார்க்கெட்டிங் பிரிவில் பத்தாண்டு கால அனுபவமிக்க இவர் சந்தை வாய்ப்புகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.
வருங்கால மார்க்கெட்டிங் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாகவே இருக்கும் சூழலில் புதுமையான உத்திகளை இந்நிறுவனம் வகுத்து வருகிறது.
“எங்கள் வணிக மாதிரியை மக்களிடையே கொண்டு சேர்ப்பது ஆரம்பகட்ட சவாலாக இருந்தது. நகரங்களுக்கிடையே டாக்சி சேவை வழங்கும் நிறுவனமாகவே மக்கள் எங்களை புரிந்துகொண்டார்கள். எங்கள் வணிக மாதிரியை புரியவைப்பது சவாலாக இருந்தது. இதைத் தெளிவாக விவரிக்கும் வகையில் எங்கள் வலைதளத்தை மாற்றியமைத்தோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது,” என்று விவரித்தார் ரொசாரியோ.
வருங்காலத் திட்டம்
2021-ம் ஆண்டு இறுதிக்கும் இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்கள் அனைத்திலும் செயல்படவேண்டும் என்பதும் தென்னிந்தியா முழுவதும் விரிவடையவேண்டும் என்பதுமே இந்நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டமாக உள்ளது.
வளர்ச்சி மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த டாக்சி தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் நிறுவனமாக உருவாகவேண்டும் என்பதுமே Taxida லட்சியமாக உள்ளது.
வலைதள முகவரி: Taxida