முதலில் ஆக்சிஜன் ஆலை; இப்போது இலவச மருத்துவமனை: நெருக்கடியில் கைகொடுக்கும் ரிலையன்ஸ்!
ஜாம்நகரில் இரண்டு இலவச மருத்துவமனைகள் அமைக்கும் ரிலையன்ஸ்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையே, இந்தியாவின் பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வருகிறார்.
குஜராத்தில் உள்ள ரிலையன்ஸின் ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் மருத்துவ தர ஆக்ஸிஜன் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இங்கு இது கச்சா எண்ணெயை டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் போன்ற பொருட்கள் சுத்திகரிப்பு மட்டுமே நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், ரிலையன்ஸ் நிறுவனம், இங்கு முறையான கருவிகளை நிறுவி மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்குவதற்கான செயல்முறைகளை அமைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒரு நாளைக்கு 700 டன்களுக்கு மேல் மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தித் திறனை மேம்படுத்தியுள்ளது. ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆரம்பத்தில் 100 டன் மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இந்த உதவியின் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைத்து வருகிறது.
இதற்கிடையே, இதே குஜராத்தின் ஜாம்நகரில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், ஆக்ஸிஜன் வசதி கொண்ட 1,000 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை நிறுவவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக இங்கு நிறுவ இருக்கிறது. இதனால், ஜாம்நகர் மட்டுமில்லாமல், துவாரகா, காம்பலியா, போர்பந்தர் போன்ற குஜராத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த மருத்துவமனையால் பயனடையும்.
அடுத்த ஒரு வார காலத்திற்குள் ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 400 படுக்கைகளுடன் கூடிய மையம் ஏற்படுத்தவும், அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜாம்நகரின் வேறு ஒரு பகுதியில் 600 படுக்கை வசதிகள் கொண்ட இன்னொரு மையம் ஏற்படுத்தவும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஆகும் செலவை ரிலையன்ஸ் நிறுவனமும், மருத்துவர்கள், செவிலியர்களை மட்டும் மாநில அரசு பணியமர்த்தும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக, முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவருமான நீட்டா அம்பானி,
“இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் இந்தியாவுக்கு, ஒவ்வொரு நாளும் எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவ ரிலையன்ஸ் கடமைப்பட்டுள்ளது. இதுபோன்ற கூடுதல் சுகாதார வசதிகள் தற்போதைய காலத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று. ஜாம்நகரில் அமையுள்ள இந்த இரண்டு மருத்துவமனையில் தரமான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். இந்த இக்கட்டான தருணத்தில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற நாம் தொடர்ந்து உழைப்போம். நாம் ஒன்றானால் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.