இன்று முதல் பிளாஸ்டிக் இல்லா இந்தியா: மாற்றுப் பொருள்கள் என்னென்ன பயன்படுத்தலாம்?
பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஓர் முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு, மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஓர் முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சூழ்நிலைகளில், காலகட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் இந்த தடை அக். 2ஆம் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா உரையாற்றிய பிரதமர் மோடி இது குறித்து நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதில், 2014ம் ஆண்டு காந்தியடிகளின் 145வது பிறந்த தினத்தையொட்டி, ’தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல போல,
நிகழாண்டு வரும் அக். 2ம் தேதி காந்தியடிகளின் 150 பிறந்தநாளை முன்னிட்டு, நாம் அனைவரும் இணைந்து பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை நாடு தழுவிய மிகப் பெரிய இயக்கமாகவும் முன்னெடுக்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, அனைத்து மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என அனைவரும் களமிறங்கி, முழுவீச்சில் பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கைகளில் முழுகவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கிராம, நகர, மாநகராட்சி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருள்கள் குறித்த கண்காட்சி என நாடே ஓர் முக்கிய சாதனையை நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
இனி இதில் நம் பங்கு என்ன என்பது குறித்து நாம் பார்ப்போம். இதுவரை ஹாயாக கையை வீசிக் கொண்டு கடைக்குச் சென்று, பொருள்களை வாங்கி ஓர் கேரிபேக்கில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த நாம், இனி ஞாபகமாக வீட்டில் இருந்தே ஓர் துணிப் பையை எடுத்துக் கொண்டு போகவேண்டும். இது நமக்கு புதுப்பழக்கம் என்பதால் அடிக்கடி மறந்துவிட்டு கடைக்குப் போன பின் மண்டையை சொறிந்து கொண்டு நிற்காமல் இருக்க,
நாம் வீட்டில் இருக்கும்போதே நமது இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் ஒன்றிரண்டு துணி அல்லது கட்டைப்பிடி பைகளை எப்போதும் போட்டு வைப்பதை வழக்கமாகக் கொள்ளலாம். அது நமக்கு அவசர நேரத்தில் பை கொடுக்கும், ஸாரி, கை கொடுக்கும்.
அரசின் முயற்சிக்கு உறுதுணையாக வியாபாரிகளும், வணிகர்களும் தங்களின் ஓத்துழைப்பை நல்கத் தொடங்கியுள்ளனர். ஆம், பூக்கடைகளில் பாலித்தீன் கவர்களில் பூக்களை கட்டிக் கொடுக்கும் பழக்கத்துக்கு பதிலாக மீண்டும் வாழை இலைகளில் பூக்களை பொட்டலம் கட்டத் தொடங்கிவிட்டனர். சில இடங்களில் தாமரை இலைகளும் தலைகாட்டுகின்றன.
இனிப்பகங்களில் அல்வா வைத்துத்தர பயன்படுத்திய பாலித்தீன் துண்டு பேப்பர்களுக்கு பதிலாக தற்போது வாழை, மந்தாரை, தாமரை, தேக்கு மர இலைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன என்பது மகிழ்ச்சிகரமான தகவல். சில கடைகளில் இனிப்புகள் ஓலைப்பெட்டிகளில் கட்டிக் கொடுக்கப்படுகின்றன என்பது சிறப்பு.
கையேந்திபவன் முதல் சாதாரண உணவகம் முதல் தட்டில் பாலித்தீன் கவர் விரித்து உணவு பரிமாறிய காலம் மலையேறி, தற்போது அவர்களும் இந்த இலைகள் அல்லது பாக்குமரத் தட்டுகளுக்கு மாறிவிட்டனர். கடைகளில் பார்சல் கட்டக்கூட தற்போது பாலித்தீனுக்கு பதிலாக சில்வர் காகிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில உணவகங்கள் இன்னும் ஓர்படி மேலே போய், பாத்திரங்கள் மற்றும் பைகளை கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கி பிளாஸ்டிக் ஓழிப்பை ஊக்கிவிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக கண்ணாடி, பீங்கான் குவளைகள் ஜொலிக்கின்றன. சில இடங்களில் பேப்பர் கப்களும் பயன்படுத்தப்படுகின்றன.
முக்கியப் பிரச்னையாக இருந்த குடிநீர் வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக அனைத்து இடங்களிலும் கண்ணாடி பாட்டில்களும், சில இடங்களில் மண் கலயங்களிலும் குடிநீர் வழங்கப்படுவது பாரம்பரியத்தை மீட்டெடுத்ததுபோல் உள்ளது.
ஏன், இனி நம் தேசியக் கொடி உள்ளிட்ட அனைத்து கொடிகளும் கூட பிளாஸ்டிக்கில் இருக்கக் கூடாது. துணியிலோ அல்லது பேப்பரிலோ தான் இருக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான ஜவுளிக் கடைகள் கூட தங்களது வாடிக்கையாளர்களுக்கு அழகிய வண்ணங்களில் காகிதப் பைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். சில நகைக்கடைகளில் வேலைப்பாடமைந்த சணல் பைகளும் வழங்கப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு பையை மறந்துவிட்டு பழைய ஞாபகத்தில் வருபவர்களுக்கு வசதியாக ஆங்காங்கே கட்டைப்பிடி பைகளும் விற்கப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே இனி ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதில்லை என அறிவித்துள்ளது. இதேபோல, ஏர் இந்தியா விமான நிறுவனமும் தனது பயணிகளுக்கு பிளாஸ்டிக் குவளைகளுக்கு பதிலாக பேப்பர் கப்களையே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
விதிவிலக்காக பால், தயிர் உள்ளிட்ட பால்பொருள்கள் மற்றும் மாத்திரை போன்ற பொருள்கள் மட்டுமே நமக்கு அத்தியாவசியப் பொருட்களாக இருப்பதால் இந்த கடும் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தன.
அரசின் இந்த தீவிர பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கை என்பது சுற்றுச்சூழல் சார்ந்த விஷயம் என்பது ஓர்புறம் இருந்தாலும், இதன் மூலம் சணல், துணி, கட்டைபிடி பை, பேப்பர் கப் தயாரிப்பு போன்ற தொழில்களும், பாக்குமரத் தட்டு, தாமரை, மந்தாரை, வாழை இலைகள் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களும், மண்பாண்டங்கள், மண் குவளைகள் தயாரிப்பு என ஏராளமான சிறு குறு தொழில்களில் வளர்ச்சிக்கு மறைமுகமாக பேருதவி புரிந்துள்ளது என்பது முக்கியமானது.
பொதுமக்களாகிய நாமும் நமது பங்காக, ஆங்காங்கே பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை வீசாமல், நமது வீடு தேடிவரும் துப்புரவு பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து வழங்கவேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்து, இறுதியில் நிறுத்திவிடவேண்டும்.
பிளாஸ்டிக் ஓழிப்பை ஓவ்வொரு தனி மனிதனும் முதலில் தனது வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். வீட்டில் உள்ள பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஓழித்துவிட்டால், நாட்டில் உள்ள பிளாஸ்டிக் தானாகவே ஓழிந்துவிடும்.