கேரளாவில் பிளாஸ்டிக்கை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தி சாலைகள் அமைக்கும் முயற்சி!
மாநில அரசாங்கத்தால் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுசித்வா மிஷனின்கீழ் கேரளாவில் மறுசுழற்சிக்கு உட்படுத்த இயலாத 9,700 டன் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு இதுவரை 246 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மாசு விலங்குகளையும் நீர்வாழ் உயிரினங்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் சேர்க்கப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது
பிளாஸ்டிக் கழிவுப் பொருளாக பார்க்கப்படும் நிலையில் இதை திறம்பட பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்தை கேரளா உருவாக்கியுள்ளது.
இந்த மாநிலம் உணவுப் பொருட்களை சேமிக்க உதவும் பிளாஸ்டிக் டப்பாக்கள், அப்புறப்படுத்தக்கூடிய டயாப்பர்கள், பாட்டில் மூடி போன்ற மறுசுழற்சிக்கு உட்படுத்தமுடியாத 9,700 டன் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 246 கிலோமீட்டர் சாலை அமைத்துள்ளது.
கேரளாவை சுத்தமான பசுமையான மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுசித்வா மிஷனின் (Suchitwa Mission) ஒரு பகுதியாக இந்த சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுசித்வா மிஷனின் ரெஞ்சித் அப்ரஹாம் இந்த முயற்சி குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
”கழிவுகளை முறையாக நிர்வகிப்பதில் கேரளா எப்போதும் முன்னோடியாகவே திகழ்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கேரளாவின் ஃபவுண்டேஷன் தினத்தன்று இந்தியாவின் கழிவுகளற்ற முதல் மாநிலமாக கேரளாவை மாற்றுவோம் என்று கேரளா அறிவித்தது. இதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு ஓராண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதிருந்து கேரளாவில் கழிவுகள் உற்பத்தியை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
முதல் கட்டமாக கேரளாவின் ராஜகிரி கல்லூரியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி பாலிமரைஸ் செய்யப்பட்ட சாலை 300 மீட்டர் தொலைவிற்கு போடப்பட்டது. இதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கேஜிங் பொருட்கள், கேப், இதர அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டது.
இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பிறகு இது குறித்த தகவல் காட்டுத்தீ போன்று பரவியது. இதைக் கண்டு உந்துதல் பெற்ற முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் இந்த முயற்சியை மற்ற இடங்களிலும் செயல்படுத்த விரும்பினார்.
இதன் நுட்பங்களையும் செயல்படுத்தும் முறையையும் புரிந்துகொள்ள பஞ்சாயத்து கவுன்சில் பொதுப் பணித் துறையை அணுகியது.
இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதும் பஞ்சாயத்து தரப்பில் சாலையில் தார் போடுவதற்கு பிட்டுமென் உடன் துண்டாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தத் துவங்கியது. இதற்காக தினமும் 500 கிலோ பிளாஸ்டிக்கை துண்டாக்கக்கூடிய திறன் கொண்ட இயந்திரம் நிறுவப்பட்டதாக ’ப்ளஸ் அப்ரோச்’ தெரிவிக்கிறது.
துண்டாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொதுப் பணித் துறைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தத் துறை சாலை கட்டுமானத்திற்கு அதைப் பயன்படுத்திக்கொள்கிறது. இதுவரை இந்த பஞ்சாயத்து கிலோ 20 என்கிற வீதத்தில் 800 கிலோ பிளாஸ்டிக்கை விற்பனை செய்துள்ளது. ரெஞ்சித் இது குறித்து மேலும் விவரிக்கையில்,
“இதுமட்டுமல்லாது இந்த மாநிலத்தில் 'குடும்பஸ்ரீ’ என்கிற அமைப்பையும் அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் தொழிலாளிகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீடாகச் சென்று மறுசுழற்சிக்கு உட்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கின்றனர். பிளாஸ்டிக்கை துண்டாக்குவதற்கான உள்கட்டமைப்பிலும் மாநில அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. வளங்களை மீட்டெடுக்கும் சுமார் 418 அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கழிவுகள் முறையாக வகைப்படுத்தப்பட்டு மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத கழிவுகள் எளிதாக சேகரிக்கப்படும்,” என்று என்டிடிவி தெரிவிக்கிறது.
இந்த செயல்முறைகளுக்கு உதவ ஒவ்வொரு ப்ளாக்/கிராமம்/கிராம பஞ்சாயத்தில் இருந்தும் பெண்கள் நியமிக்கப்படுவதை மாநில அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. ’ஹரிதா கர்ம சேனா’ என்றழைக்கப்படும் இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அவற்றை வகைப்படுத்துகின்றனர்.
இத்தகைய முயற்சிகள் வாயிலாக பிளாஸ்டிக் திறம்பட மறுசுழற்சி செய்யப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள்வதில் மற்ற மாநிலங்களுக்கு கேரளா முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA