தன் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பெண்மணி!
கேரளாவை கழிவுகளற்ற பசுமையான பகுதியாக மாற்றுவதற்கான குடும்பஸ்ரீ திட்டத்தின் ஹரிதா கர்மா சேனாவின் தீவிர உறுப்பினரான ரைனா ஏ சுமார் 550 வீடுகளுக்குச் சென்று தானே கழிவுகளைச் சேகரிப்பதுடன் பிளாஸ்டிக்கினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
கடந்த இருபதாண்டுகளில் நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலகமே பிளாஸ்டிக் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு தனிநபர்களும் நிறுவனங்களும் உதவ முன்வருவதைப் பார்க்கமுடிகிறது.
கேரளாவின் காசர்கோடு பகுதியின் புல்லூர் பெரிய பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆர்வலரான ரைனா ஏ தனது கிராமத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் கேரளாவை கழிவுகளற்ற பசுமையான பகுதியாக மாற்றுவதற்கான குடும்பஸ்ரீ திட்டத்தின் ஹரிதா கர்மா சேனாவின் தீவிர உறுப்பினராக இருப்பதால் சுமார் 550 வீடுகளுக்குச் சென்று தானே கழிவுகளைச் சேகரிக்கிறார்.
வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் கழிவுகள் சேர்ந்ததும் ரைனாவை அழைத்து தெரிவிக்கின்றனர். உடனே ரைனா அங்கு சென்று கழிவுகளைச் சேகரிக்கிறார். Edex Live உடன் அவர் கூறும்போது,
“எந்த நேரமாக இருந்தாலும் நான் சென்று கழிவுகளை சேகரிக்கிறேன். மாலை 5 அல்லது 6 மணியாக இருந்தாலும் ஒரே ஒரு நபர் அழைத்தாலும் நான் செல்கிறேன்,” என்றார்.
முறையான கழிவு மேலாண்மை மூலம் தன்னைச் சுற்றியுள்ள பகுதியையும் தனது சமூகத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பதே ரைனாவின் நோக்கம்.
அவர் கூறும்போது,
”நான் என்னைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துகிறேன். நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். என்னுடைய பணி மூலம் மக்களுக்கு சேவை செய்ய முடிந்து, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவ முடியுமானால் நான் ஏன் அதில் ஈடுபடக்கூடாது? இதை எனக்கான ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறேன்.
"நீங்கள் எங்களது பகுதியைப் பார்வையிட்டால் உங்களால் ஒரு பிளாஸ்டிக் துண்டைக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு சுத்தமாக வைத்துள்ளோம்,” என்றார்.
பிளாஸ்டிக் மாசு பிரச்சனையின் அபாயகரமான விளைவுகளைப் புரிந்துகொண்ட பிறகே ரைனா புல்லூர் பெரிய பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரியார் பஜாரை சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வலராக இணைந்துகொண்டதாக ’மாத்ருபூமி’ ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான ரைனா வழக்கமான நாளில் வீடுகளில் இருந்து 14 மூட்டை வரை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கிறார். ஒரு வார காலம் சேகரித்த பிறகு கழிவுகளை பிரித்தெடுத்து கழிவு சேகரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
இந்த முயற்சி எவ்வாறு தொடங்கியது? எட்டாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாத ரைனா குழந்தைப் பருவத்தில் பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளார். 16 வயதில் இவருக்கு திருமணம் முடிக்கப்பட்டு குடும்ப பொறுப்புகளை சுமக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
”எனக்கு திருமணம் முடிந்ததுமே என் வாழ்க்கை சோகமயமானது. என் கணவருக்கு நிலையான வருவாய் இல்லை. சூழலை முழுமையாக புரிந்துகொள்வதற்கு முன்பே குடும்பப் பொறுப்பை சுமக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்,” என்று Edex Live உடன் தெரிவித்துள்ளார் ரைனா.
தற்போது வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்கீழ் பணியாற்றும் ரைனாவால் ஓரளவிற்கு தனது குடும்பத்தைப் பராமரிக்க முடிகிறது. பணி முடிந்த பிறகு மாலை நேரங்களில் தனது கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் நோக்கத்திற்காக பணியாற்றுகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA