கர்ப்ப காலமும்; சமகால மனித உறவுகளும்: ‘Wonder Women’ எனும் சினிமா யாருக்கானது?
'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘ஒண்டர் உமன்’ உண்மையிலேயே ஒரு வியத்தகு படைப்புதான். ஒரு மகப்பேறு காலப் பயிற்சி மையத்தில் வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட கர்ப்பிணிகளுக்கு இடையே நிகழும் நட்புறவும் உரையாடலும்தான் ‘ஒண்டர் உமன்’ படத்தின் மையம்.
திறமையும் அனுபவமும் வாய்ந்த ஒரு திரைப் படைப்பாளி தான் பகிர விரும்பவதை எந்த சமரசமும் இல்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவது என்பதே முழு வெற்றி. இதற்கு வழிவகுத்திருக்கிறது ஓடிடி தளங்கள் என்றால், அது நிச்சயம் மிகையில்லை. இதை உறுதியாகச் சொல்வதற்கு உரிய சமீபத்திய உதாரணம்தான் ‘ஒண்டர் உமன்’ (Wonder Women) என்ற மலையாள சினிமா.
ஆம், இயக்குநர் அஞ்சலி மேனன் வழக்கான திரைப்படத்துக்குரிய கதை சொல்லல் முறைகளை முற்றிலும் கண்டுகொள்ளாமல், சொல்லப்போனால் கதை என்ற ஒன்றே இல்லாத சினிமாவை திகட்டாத வகையில் தந்திருக்கிறார். திரையரங்க வெளியீட்டை மையப்படுத்தி இப்படத்தை அவர் எடுத்திருந்தால், நிச்சயம் நிறைய நிறைய சினிமா ஃபார்முலாக்களை பின்பற்றியிருக்க வேண்டியிருக்கும். 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘ஒண்டர் உமன்’ உண்மையிலேயே வியத்தகு படைப்புதான்.
Wonder Women படத்தில் அப்படி என்ன இருக்கு?
ஒரு மகப்பேறு காலப் பயிற்சி மையத்தில் வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட கர்ப்பிணிகளுக்கு இடையே நிகழும் நட்புறவும் உரையாடலும்தான் ‘ஒண்டர் உமன்’ படத்தின் மையம்.
பயிற்சியாளராக நதியா, அவரிடம் பயிற்சி பெறும் கர்ப்பிணிகளாக பார்வதி, நித்யா மேனன், பத்மபிரியா, அம்ருதா சுபாஷ், சயனோரா, அர்ச்சனா பத்மினி ஆகியோர். குழந்தை பிறப்பதற்கு முன்பே ‘சிங்கிள் மதர்’ ஆகும் பார்வதி, மாமியாரின் கண்காணிப்பில் வாழும் பத்மப்ரியா, தனது தொழில்ரீதியிலான நாட்டங்களுக்கு சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு தாய்மைக்கு முழுமுதற் முக்கியத்துவம் தரும் நித்யா மேனன், ஏற்கெனவே கலைந்த கருக்களால் மன அழுத்தங்களுக்கு ஆளாகி, கடைசி முயற்சியாக கருவை சுமந்து வரும் சற்றே வயதான கர்ப்பிணியாக அம்ருதா சுபாஷ், லிவ்-இன் ரிலெஷன்ஷிப் இணையருடன் வரும் சயனோரா, நதியாவின் மையத்திலேயே பணிபுரிந்துகொண்டு இரண்டாவது குழந்தையை சுமக்கும் அர்ச்சனா பத்மினி ஆகியோரை பார்வையாளர்களுக்கு மிக இயல்பாய் அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்.
ஆறு பேருக்கும் தனித்தனியாக ஃப்ளாஷ்பேக் காட்டப்படலாம் என்ற வழக்கமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படிச் செய்யும் வழக்கமான சினிமா பாணியை கடைப்பிடிக்காமல், காட்சிகளாலும் உரையாடல்களாலும் பார்வையாளர்களே தங்கள் மனத்திரைக்குள் அந்த ஆறு பேரின் பின்புலக் கதைகளை வடித்துக்கொள்ளும் ‘ஸ்பேஸ்’ கொடுத்த இயக்குநர் அஞ்சலி மேனனின் திரை ஆளுமை அதிசிறப்பு.
இந்த ஆறு பேரில் ஒருவர் மட்டும் மகாராஷ்டிரா. ஏனைய ஐந்து பேருமே தென்னிந்தியர்கள். ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநித்துவப்படுத்துபவர்கள். எடுத்த எடுப்பில் ‘இந்தி தேசிய மொழி அல்ல’ என்ற கலகக் குரலுடன் தொடங்கும்போது ‘ஆஹா... இது சமகால அரசியல் சினிமாவும் கூட’ என்று யோசிக்கத் தொடங்குவதற்குள் தன் மையப்பொருளுக்குள் புகுந்துவிடுகிறது படம்.
ஆம், பிரசவத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்; இந்தக் காலக்கட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை டாக்குமென்ட்ரி தன்மையில் அல்லாமல் பாடம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பயிற்சியினூடே அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் உணர்வுகள் வழியே பார்வையாளர்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
சில திடுக்கிடும் காட்சிகளின் வழியே புத்திக்கு உரைக்கும் வகையில் உறவுப் பாடம் எடுக்கப்பட்டிருப்பது தெறிப்பு ரகம். உதாரணமாக ஒரு காட்சி இங்கே...
பத்மப்ரியா, அவரது கணவர், மாமானார், மாமியார் நால்வரும் இரவு உணவருந்துகிறார்கள். அப்போது, அடுத்தநாள் கர்ப்பக்கால பயிற்சி வகுப்பில் கணவர்கள் பங்கேற்பதற்கான செஷன் இருப்பதை தன் கணவரிடம் சொல்கிறார் பத்மப்ரியா. அவரோ, “எனக்கு வேலை நிறைய இருக்கு. வக்கம்போல அம்மாவே கூட வருவாங்க...” என்கிறார். அப்போது, அந்தப் பகீர் ரக கேள்வியை தன் மகனை நோக்கி கேட்கிறார் அந்த அம்மா.
“இந்தக் குழந்தைக்கு அப்பா யாரு?”
மற்ற எல்லாரும் திடுக்கிடுகின்றனர். பார்வையாளரும்தான். கர்ப்பிணி மனைவியை கவனிக்கும் பொறுப்பை ஆணுக்கும் உணர்த்தும் வகையில் அந்தக் காட்சி அழுத்தமாக வடிவமைப்பட்டிருந்தது. இப்படித்தான் பல விஷயங்களை காட்சி - வசனத்தின் வழியாக மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரசவம் குறித்து தங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் ஜாலியாக விவாதிப்பது தொடங்கி, ஓர் உணவகத்தில் தனிமையில் அமர்ந்து பார்வதி சாப்பிடும் காட்சி வரை கர்ப்பக்கால விஷயங்களை பதிவு செய்த விதமும் அருமை.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையைத் தேர்ந்தெடுத்தாலும் குழந்தைப் பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் எப்படி அதை அணுக வேண்டும்? வேறு வழியின்றி மெட்டிரீயலிஸ்டிக் வாழ்வியல் சூழலில் சிக்கிக் கொண்டாலும், மகப்பேறு காலத்திலாவது பரஸ்பரம் அரவணைப்பின் தேவை ஏன்? கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணுக்கு கணவர், குடும்பத்தின் உறுதுணை எந்த அளவுக்கு முக்கியம்? - இப்படி பல கேள்விகளுக்கு வெகு இயல்பாக பதில் சொல்கிறது இந்தப் படம்.
குறிப்பாக, உளவியல் ரீதியான சிக்கல்கள், அவற்றிலிருந்து மீளும் வழிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்வதியின் கதாபாத்திரத்தை உன்னிப்பாக கவனித்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பழக வேண்டியதன் தேவை புரிபடும்.
மருத்துவமனையில் பிரசவம் நடக்கும்போது கர்ப்பிணியுடன் கணவரோ அல்லது வேறு ஒருவரோ அட்டெண்டர் ஆக உடன் இருக்கலாம் என்ற விதிமுறை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதை ஒரு பரபரப்பான சூழலில் காட்சியாக வைத்ததும் கவனிக்க வேண்டிய ஒன்று.
80ஸ் கிட்ஸ் திருமணமாகி குழந்தைப் பெற்றுக்கொள்ளும்போது, கர்ப்பக் காலத்தில் அவர்களுக்குத் துணையாக குடும்பங்கள் இருந்தனர். அவர்களை சரியாக கவனித்துக் கொண்டனர். கர்ப்பக் காலம் குறித்த புரிதலும் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆனால், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸுக்கு அந்த வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்பதே நடைமுறை உண்மை.
இத்தகைய இளம் தலைமுறையினர் மகப்பேறு காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறியவும், அறிய முற்படவும் இப்படம் நிச்சயம் துணைபுரியும்.
கர்ப்பிணிப் பெண்கள், அவர்களது கணவர்கள் - குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி நாம் ஒவ்வொருவருமே புரிதலுக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்காலம். என்ன, அஞ்சலி மேனனின் இந்தத் திரைக்கதையில் அனிச்சையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ‘எலைட்’ தன்மையை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டியிருக்கும்.
‘இவங்க வேற லெவல்’ - BTS இசைக் குழு மீது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஈர்ப்பு வந்தது எப்படி?