குப்பை பொறுக்குபவர் டூ பிரபல ஃபோட்டோகிராபர்: விக்கி ராயின் எழுச்சியூட்டும் பயணம்!
மிக ஏழ்மையான பெரிய குடும்பத்தில் பிறந்த விக்கி ராய், 11 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி குப்பை பொறுக்கி சம்பாதித்து, பின் தன் போட்டோகிராபி ஆர்வத்தினால் இன்று பிரபல புகைப்படக்கலைஞராக உயர்ந்துள்ளார்.
விக்கி ராய் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து 6 சகோதர சகோதரிகள் உடன் வளர்ந்தார். ஏழ்மையான நிலை மட்டுமின்றி தாயின் கொடுமை, மற்ற குழந்தைகளுடன் விளையாடக் கூட முடியாத சூழலில் இருந்தார் இவர். பெற்றோர்கள் வேலை தேடி செல்லும்போது தன் தாத்தா பாட்டியின் பார்வையில் வளர்ந்தார்.
வீட்டை விட்டு வெளியேற்றம்...
இது போன்ற கொடுமைகளை அனுபவித்த விக்கி 1999ல் 11 வயதாக இருந்தபோது தனது மாமாவிடமிருந்து 900 ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார். மேற்கு வங்காளத்தில் இருந்து ரயில் ஏறி டெல்லி வந்து சேர்ந்தார். வீட்டை விட்டு தைரியமாக வெளியேறினாலும் டெல்லி வந்து சேர்ந்து இடம் புரியாமல் ரயில் நிலையத்தில் அலைந்துக்கொண்டு இருந்த விக்கியை அங்கிருத்த தெருவோரக் குழந்தைகள் SBT இல்லத்தில் சேர்த்தனர்.
ஆனால் அந்த இடமும் அவரை பூட்டி தான் வைத்தது, முன்னேற்றத்திற்கு எந்த வழியையும் காட்டவில்லை. அதனால் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து இராண்டாம் முறையாக ஓடிவந்து ரயில் நிலையத்தில் சந்தித்த குழந்தைகளுடன் இணைந்து குப்பை பொறுக்கச் சென்றார்.
“பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து ரூ.5க்கு விற்பேன் ஆனால் போலிஸ் அடிப்பார்கள், ரயில் நிலையத்தில் இருக்கும் ரௌடிகள் அடித்து பணத்தை பிடுங்குவர். அதன் பின் ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தேன். அங்கு SBT தன்னார்வலரை சந்தித்தேன், உள்ளே அடைத்து வைக்காமல் பள்ளிக்கு அனுப்பும் SBT காப்பகங்கள் உள்ளது. நீ படிக்க வேண்டும்,” என்றார்.
SBTக்கு திரும்பிய பின் மாறிய வாழ்க்கை
அங்கு சென்று பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பில் 48 சதவீதம் மட்டுமே எடுத்தார், விக்கிக்கு படிப்பு வரவில்லை என்று கணினி மற்றும் டிவி பழுதுபார்க்கும் பயிற்சி நிலையத்தில் அவரை ச்சேர்த்தனர். அங்கு தான் விக்கி மாற்றம் ஏற்பட்டு கேமராவுக்கு அறிமுகமானார். அங்கு ஃபோட்டோகிராபியில் பயிற்சிபெற்று இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த இருவரை சந்தித்தார். அப்போது தன் வாழ்வில் மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை உணர்திருக்கமாட்டார் விக்கி.
அதன் பின் SBTக்கு ஆவணப்படம் எடுக்க வந்த பிரிட்டிஷ் ஃபிலிம்மேக்கர் டிக்சி பென்ஜமினை சந்தித்து அவருக்கு துணை புகைப்படக்காரராக சேர்ந்து தனது ஃபோட்டோகிராபி பயணத்தை தொடங்கினார் விக்கி ராய்.
விக்கிக்கு ஆங்கிலம் முழுமையாக புரியவில்லை என்றாலும் கேமரா புகைப்பட பற்றினால் டிக்சி சொல்லிக்கொடுத்த அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொண்டார். பிளாஸ்டிக் கோடக் கேமராவை பயன்படுத்திக்கொண்டிருந்த விக்கிக்கு SLR கேமிராவை வாங்கிக் கொடுத்தார் டிக்சி.
கனவு நனவானது...
18 வயது நிரம்பியப்பின் SBT யின் உதவியோடு வெளியேறி தனியாக தன் வாழ்வை பார்த்துக்கொள்ள துவங்கினார் விக்கி. SBT தவிர வேறு வாழ்க்கைக்கு பழக்கமாகாத இவர் மனவலிமையோடு புது வேலையை தேடிச் சென்றார்.
பிரபல ஃபோடோகிராஃபர் அனை மான் இடம் துணையாளராக சேரச் சென்றார். குறைந்தது 3 வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உடன் விக்கியை சேர்த்துக்கொண்டார் அனை மான்.
அனை மான் சிறந்த ஆசிரியராக இருந்து அனைத்தையும் விக்கிக்கு கற்றுத்தந்தார். அவருடன் இணைந்து பணிக்காக பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பறந்துள்ளார் விக்கி. SBT இடம் இருந்து ரூ.27000 கடன் பெற்று Nikon F80 கேமிராவை வாங்கினார். மாதம் ரூ.500 என்று கடனையும் அடைத்தார்.
அதன் பின் 18 வயதிற்குள் இருக்கும் தெருப் பிள்ளைகளை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று 2007 இல் அவர்களை புகைப்படமெடுத்து ’Street Dreams’ என்ற கண்காட்சி ஒன்றை நடத்தினார். பிரிட்டிஷ் கமிஷனின் உதவியோடு இதை லண்டன் தென் ஆப்ரிக்காவிற்கு கொண்டு சென்று பல புத்தகங்களை விற்றார்.
“இந்த வெற்றிக்குப் பின் நான் ஒரு ஃபோட்டோகிராபராக வளர்ந்துவிட்டேன் என்ற எண்ணம் வந்துவிட்டது. அப்பொழுது அனை மான் என்னை அழைத்து கண்காட்சிக்கு முன்பிருந்த தன்னடக்கம் இப்பொழுது இல்லை, இது தவறு என புரியவைத்து என் துவக்கக் காலத்தை எனக்கு நினைவூட்டினார்,” என்றார் விக்கி.
அதன் பின் அனை மானுடன் பெரிய ப்ரோஜெக்ட்களில் பார்ட் டைமில் பணியாற்றினார். அதன் பின் அனை மான் விக்கியை அதிக மரியாதையுடன் நடத்தியதோடு தனக்கு சமமான நண்பராக விக்கியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பெரிய கனவுகள்
Street Dreams வெற்றியை தொடர்ந்து 2008ல் மற்றொரு பெரிய அடியை எடுத்து வைத்து முன்னேறினார் விக்கி. மேபாக் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய போட்டியில், ராம்சந்திர நாத் அறக்கட்டளை அவரது படைப்புகளை பரிந்துரைத்தது, அதன் மூலம் 2009 ஆம் ஆண்டில் சர்வதேச புகைப்படம் எடுத்தல் மையத்தில் நடைபெற்ற ஆறு மாத பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று புகைப்படக்காரர்களில் விக்கியும் ஒருவர். இதனால் அவருக்கு உலக வர்த்தக மையம் (WTC) தளத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டது.
“நான் வீட்டை விட்டு வெளியேறியதற்கான அர்த்தத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். என் வாழ்க்கைக்கு பலன் கிடைத்தது...” என்கிறார் விக்கி
அவரது பணிகள் WTC 7 இல் காட்சிக்கு வைக்கப்பட்டன, மேலும் எடின்பர்க் டியூக் விருதை வென்றதோடு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் எட்வர்டுடன் மதிய உணவு உண்ணவும் அழைக்கப்பட்டார்.
நன்றிகடன்
உலகளவில் பல வெற்றிகளை பார்த்தபின்பும் முழுமை அடையாததுபோல் உணர்ந்தார் விக்கி. சந்தன் கோம்ஸ் உடன் இணைந்து போட்டோ லைப்ரரி ஒன்று அமைத்தார், 500க்கும் அதிகமான புத்தகங்களை அதற்கு தானமாக அளித்தார். பின்தங்கிய மாணவர்களுக்கு ஃபோட்டோகிராபி பட்டறைகளையும் நடத்தினார். தனது மென்டர்கள் போல் தான் வளர்ந்து வரும் ஃபோட்டோகிராபர்களை துணையாளராக வைத்துக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்.
மீண்டும் கிடைத்த குடும்பம்
ஜனவரி, 2013ல் விக்கி ராய் நேஷனல் ஜியாகிரபி சேனல் (என்ஜிசி) ஏற்பாடு செய்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அப்போது அவரை கண்டறிந்த அவரது குடும்பம் அவரிடம் தொடர்புக்கொண்டது. தாங்கள் அவரை கண்டு மிகவும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தனர்.
“நான் யாரையும் வீட்டை விட்டு வெளியேற ஊக்குவிக்க மாட்டேன், வீட்டை விட்டு ஓடும் அனைவருக்கும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு கிடைக்காது, என்னுடைய இந்த நிலைக்கு வழிகாட்டிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்பொழுது எனது குடும்பத்திற்கு நல்ல வீட்டை நான் அமைத்து தர வேண்டும்,” என முடிக்கிறார் விக்கி ராய்.
ஆங்கில கட்டுரையாளர்: Nelson Vinod Moses | தமிழில்: மஹ்மூதா நௌஷின்