கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்கள் குடும்பத்துக்கு உதவிகள் அறிவித்த ரிலையன்ஸ்!
ஊழியர்களுடன் துணை நிற்கும் ரிலையன்ஸ் குழுமம்!
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மீண்டெழ பல்வேறு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகிறது.
தற்போது தங்களது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர்களின் குடும்பத்துக்கான பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் தான் அந்த அறிவிப்பு.
இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
"ரிலையன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. நமது அன்புக்குரியவர்களின் இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்யமுடியாது. எனினும், இந்த நேரத்தில் நமது நம்பிக்கையை மட்டும் வலிமையைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் உதவ வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது."
அதன்படி, கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த நம்முடைய ஊழியர்களின் குடும்பத்துடன் இந்த துயரமான நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் துணைநிற்கும்.
கொரோனாவால் நமது நிறுவன ஊழியர்கள் உயிரிழந்ததால் அவரின் குடும்பத்துக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியம் மாதந்தோறும் வழங்கப்படும்.
உயிரிழந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை இந்தியாவின் எந்த கல்வி நிறுனத்தில் படித்தாலும் அதற்குரிய கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்தப்படும். மேலும், நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.
அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நேரடி ஊதியம் பெறாத ஊழியர்கள் உயிரிழக்க நேர்ந்தால்,
அவர்களின் குடும்பத்துக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை 10 லட்ச ரூபாய் வழங்கும். ரிலையன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஊழியர்களே, இந்த கடினமான காலத்தில் நீங்கள் தனியாக இருப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். ரிலையன்ஸ் குழுமம் ஊழியர்கள் ஒவ்வொருவருடன் துணைநிற்கிறது," என்று குறிப்பிட்டுள்ளது.
தொகுப்பு: மலையரசு