கூகுள் ஆதரவளிக்கும் நிறுவனத்தில் முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்?
300 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய பேச்சுவார்த்தை!
இந்திய பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு துறைகளில் தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. Just dial போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்த ரிலையன்ஸ், தற்போது இந்திய மொபைல் துறையின் உள்ளடக்க வழங்குநர் நிறுவனமான Glance InMobi Pte-ல் பங்குகளை வாங்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 300 மில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த Glance InMobi Pte நிறுவனம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் ஆதரவுடன் வழிநடத்தப்பட்டு வருகிறது. இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Glance InMobi 2019ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கூகுள் உடன் இணைந்து செல்போன் பயனாளர்களுக்கு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது. பிரபல ஷார்ட் வீடியோ ஆப் தளமான ’ரோபோசோ' ஆப்பை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம் தினசரி 130 மில்லியன் செயலியில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், இதன் ரோபோசோ ஆப் ஒரு டஜன் இந்திய மொழிகளில் ஷார்ட் வீடியோக்களை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரிலையன்ஸ் தனது நிறுவனங்களின் சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் அணுகலை மொபைல் போன் பயனாளர்களுக்கு வழங்க முடியும் என்று நம்புகிறது. என்றாலும் இந்த இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன.
ஒருவேளை முதலீட்டைத் தொடர வேண்டாம் என்று ரிலையன்ஸ் முடிவு செய்யலாம் என்றும் ஒருசிலர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு ரிலையன்ஸ் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் முயற்சியின் ஒரு பகுதியாக குறைந்த விலை ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ரிலையன்ஸ் உடன் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. மேலும் இந்த திட்டத்தில் 4.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது.
கூகுள் - ரிலையன்ஸ் கூட்டணியில் இந்த மாத தொடக்கத்தில் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பே இந்த செல்போன் அறிமுகப்படுத்தப்பட இருந்த நிலையில் செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: லைவ்மிண்ட் | தொகுப்பு: மலையரசு