இளம் பெண்களிடம் ஷேவ் செய்து கொண்ட சச்சின் டெண்டுல்கர்!
எண்ணற்ற சாதனைகளை செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், அவருடைய வாழ்வில் முதன் முறையாக அடுத்தவரிடம் ஷேவ் செய்ததை பெருமையாக பதிவிட்டுள்ளார்.
விளம்பரங்கள் - பெரும் வலிமை வாய்ந்த தூண்டுகோல்கள்! ஆம்... அவை மனிதனின் ஆசையைத் தூண்டி வியாபாரத்தை அதிகரிக்கும் தூண்டுகோல்கள் மட்டுமில்லை. மனிதனின் சிந்தனை வளத்தை விரிவுப்படுத்தும் தூண்டுகோலாகவும் சமீப காலங்களில் திகழ்கின்றன. அதனால் தான், சமீப காலங்களில் எடுக்கப்பட்ட பெரும்நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்த விளம்பரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது கடந்தமாதம் 26ம் தேதி ஜில்லெட் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம்.
2 நிமிட ஓடும் வீடியோவின் முதல் பிரேமிலே உண்மைக் கதையை தழுவியது என்ற எழுத்துகளுடன் தொடங்குகிறது. 10 வயது என மதிக்கத்தக்க சிறுவன், தனக்குள்ளே பேசிக்கொண்டே அப்பாவுடன் சேர்ந்து சைக்கிளில் செல்கிறான். அச்சைக்கிள் ஒரு சலூன்கடை வாசலில் நிற்கிறது. சலூன் சென்று அமரும் அப்பாவின் அருகில் வரும் ஒரு பெண்,
‘ஷேவ் செய்யட்டுமா?’ என்று கேட்க, அதற்கு அச்சிறுவன் ‘அப்பா, ஒரு பொண்ணு எப்படி ஷேவிங் செய்ய முடியும்?’ என்று கேட்கிறான். ஒரு சிறு மெல்லிய சிரிப்புடன் அவனது அப்பா கூறினார்: ‘எப்படி ஒரு சவர கத்திக்கு ஆண், பெண் என்று வேறுப்படுத்தி பார்க்க தெரியும்?’ என்று கூறி, அப்பெண்ணிடம் வேலையை தொடங்க சொல்கிறார்.
அப்பெண்ணும் ஷேவிங் செய்து விட, ஆண் பெண் பேதமில்லை என்று அச்சிறுவன் உணர்ந்து கொண்டதாய் கபடமற்ற ஒரு சிரிப்பை வெளிப்படுத்துகிறான். இப்படியாக, முடிவடைகிறது அந்த வீடியோ.
யூடியுப்பில் அப்லோடு செய்யப்பட்ட வீடியேவை 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் தான், அச்சிறுமிகளை நேரில் சந்தித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களிடம் ஷேவிங்கும் செய்து கொண்டுள்ளார். அவர் ஷேவிங் செய்யும் புகைப்படத்துடன்,
“இது எனக்கு முதல் முறை. நீங்கள் அறிந்திராமல் இருக்கலாம். ஆனால், இது தான் முதல் முறை நான் பிறரிடம் ஷேவிங் செய்து கொள்வது. இன்று அந்த சாதனையும் உடைக்கப்பட்டது. இந்த பெண்களை சந்தித்து அவர்களிடம் ஜில்லெட் நிறுவனத்தின் கல்வி உதவித் தொகையை வழங்கியதில் பெருமை அடைகிறேன்,” என்று பதிவிட்டார்.
ரியல் ஸ்டோரி ஆப் ஜோதி & நேஹா..!
ஆன்லைன் உலகில் வைரலான இந்த பதிவின் மூலம் இரு தைரிய பெண்மணிகள் வெளிச்சத்துக்கு வந்னைர். ஆம், உத்திர பிரதேச மாநிலம் பன்வாரி கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான ஜோதி குமாரி மற்றும் அவருடைய சகோதரியான நேஹா (12) ஆகிய இருவரும் இணைந்து அவர்களது தந்தை நடத்திவந்த சலூன் கடையை வெற்றிகரமாக நடத்தி வரும் அவர்களின் வாழ்க்கையே விளம்பரமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருக்கும் சிறுமியர்களின் தந்தை கடந்த 2014ம் ஆண்டு திடீரென்று முடக்குவாதத்தால் பாதித்து படுக்கையாகிவிட, வருமானத்திற்கான அச்சாணியாய் இருந்த சலூன் கடையை மூட வேண்டியநிலை. அதுவும் நிகழ்ந்துவிட்டால், அன்றாட செலவுகளுக்கே குடும்பம் திக்கற்று அலைந்திருக்கும். ஆனால், அதை நிகழவிடவில்லை இப்பெண்கள். அப்பாவின் மருத்துவ செலவினங்களுக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும், சலூன் கடையை தொடர்ந்து நடத்த முடிவெடுத்தார் ஜோதி குமாரி.
“சின்ன வயசுல இருந்து அப்பாவுடன் கடைக்கு வந்து, அப்பா சவரம் செய்வதை பார்த்து தான் வளர்ந்தோம். ஆனால், இந்த கடையை நாங்களே நடத்துவோம் என்று நினைத்துகூட பார்த்தில்லை,” என்றார் ஜோதி.
சிறுவயதிலிருந்தே அப்பா முடிதிருத்துவதை பார்த்ததில், ஜோதி முடிவெட்ட மெதுவாய் கற்றுக் கொண்டார். பின், தங்கை நேகாவிற்கும் கற்றுக் கொடுத்தார். ஆனால், முடித்திருத்தல் கலையை கற்றுக் கொள்வதில் மட்டும் அவர்கள் சிரமங்களை சந்திக்கவில்லை.
ஆண் வேடமிட்டு சலூன் நடத்திய சகோதரிகள்!
இளம் பெண்களிடம் முடி திருத்தி கொள்வதில் வாடிக்கையாளர்களும் நம்பிக்கையற்று இருந்துள்ளனர்.
“இதில் சிலர் எங்களிடம் சரியான அணுகுமுறை கொண்டிருக்கவில்லை. அதனால், எங்களை யாரும் கண்டுபிடித்திடாதவாறு முழுமையாக எங்களது தோற்றத்தை மாற்றிக்கொண்டோம்,” என்று தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ஜோதி.
அதற்காக, அவர்களது முடியை ஆண்கள் போல் வெட்டிக் கொண்டு, ஆண்கள் அணியும் காப்புகளையும் வளையங்களையும் அணிந்து கொண்டு அவர்களது பெயரையும் தீபக் மற்றும் ராஜூ என்று மாற்றிக்கொண்டு தொடர்ந்து சலூனை நடத்தி வந்துள்ளனர். 100 குடும்பங்களை உள்ளடக்கிய கிராமத்தில் சிலர் மட்டுமே அவர்களை அறிந்தவர்கள். அதிலும், அவர்களது தோற்றத்தை முழுமையாய் மாற்றியபிறகு, அவர்கள் சகோதரிகள் என்பதை எவராலும் கண்டறியவில்லை. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கவில்லை.
காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு நண்பகலுக்கு பின் சலூனை நடத்தியுள்ளனர். அதன் மூலம் குடும்பத்திற்கான தேவையானதை செய்து கொள்வதுடன், தந்தையின் மருத்துவ செலவினையும் பார்த்து கொள்கின்றனர். உண்மையில், சலூனை இவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கியதற்கு பிறகே, சாதாரண கொட்டகையில் செயல்பட்டு வந்த சலூன் இன்று திருத்தும் நிலையமாக செயல்பட்டு வருகிறது. ஆம், நாளொன்றுக்கு 400ரூபாய் வருமானமாக ஈட்டுகின்றனர்.
சலூனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி மக்களிடம் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றபிறகு, அவர்களது உண்மையான அடையாளத்தை இருவரும் வெளிப்படுத்தி உள்ளனர்.
“நாங்கள் போதுமான நம்பிக்கையை பெற்றுவிட்டோம். இனி எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. இப்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நாங்கள் பெண்கள் என்பதை அறிவர்,” என்கிறார் ஜோதி.
தகவல் உதவி : The guardian and scroll.in