தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் சி.இ.ஓ., ஆக நேட்டிவ்லீட் இணை-நிறுவனர் சிவராஜா ராமநாதன் பொறுப்பேற்றார்!

நேட்டிவ்லீட் இணை நிறுவனர் சிவராஜா, ராமநாதன் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமையாக்க இயக்கத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
3 CLAPS
0

'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமையாக்க இயக்கத்தின்' (TANSIM) சி.இ.ஓவாக நேட்டிவ்லீட் இணை நிறுவனர் சிவராஜா ராமநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவர் நேட்டிவ்லீட் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமையாக்க இயக்கத்தின் (டான்சிம்) சி.இ.ஓவாக நேட்டிவ்லீட் இணை நிறுவனர் சிவராஜா ராமநாதன் நியமிக்கப்படுவதாக அண்மையில் அறிவித்தது.

ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிப்பதற்கான டான்சிம் தலைமை பொறுப்பில் இத்துறையில் அனுபவம் வாய்ந்த தொழில்முறையிலான தேர்ச்சி பெற்ற ஒருவரை நியமிக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அடுத்து நேட்டிவ்லீட் இணை நிறுவனர் சிவராஜா ராமநாதன் இந்த பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்த நியமனம் பரவலாக வரவேற்பைப் பெற்ற நிலையில் சிவராஜா ராமநாதன் ஜனவர் 5ம் தேதி டான்சிம் சி.இ.ஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Nativelead தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதன் முதலீட்டு பிரிவாக நேட்டின் ஏஞ்சல்ஸ் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரிவுகளை கொண்டுள்ள நேட்டிவ் லீட், 250க்கும் மேற்பட்ட ஏஞ்சல் முதலீட்டாளர்களை தனது வலைப்பின்னலில் கொண்டுள்ளது.

இதனிடையே, TANSIM சி.இ.ஓவாக சிவராஜா ராமநாதன் பொறுப்பேற்றுள்ளதை அடுத்து நேட்டிவ் லீட் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக நேட்டிவ் லீட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேட்டிவ் லீட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"டான்சிம் தலைமை பொறுப்பில், சிவராஜா ராமநாதன், தமிழத்தை உலக அளவில் ஸ்டார்ட் அப்’களுக்கான விருப்ப இடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட இருக்கிறார். மேலும், நேட்டிவ் லீட் செயல்பாட்டு மற்றும் சட்ட பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாகவும், இணை நிறுவனர் நாகராஜா பிரகாசம் அவரது இடத்தில் பொறுப்பேற்றுக்கொள்வார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த இடமாக மாற்றும் முயற்சியில் சிவராஜா ராமநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.