6 மகள்கள்; அனைவரும் மருத்துவர்கள்: கோழிக்கோடு அஹமது குட்டியின் கதை!

ஆறு முறை தந்தையின் கனவை நனவாக்கிய மகள்கள்!

6 மகள்கள்; அனைவரும் மருத்துவர்கள்: கோழிக்கோடு அஹமது குட்டியின் கதை!

Saturday October 23, 2021,

3 min Read

சில நேரங்களில் உண்மை புனைக்கதைகளை விட வித்தியாசமானது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதாபுரத்தைச் சேர்ந்த அஹமது குன்ஹமத் குட்டி மற்றும் அவரது மனைவி ஜைனா அகமது விஷயத்தில் இது உண்மையாகியுள்ளது.


ஜைனா அஹமது ஆறு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, ​​அஹமதுவும், ஜைனாவும் விரக்தியடையவில்லை. மாறாக அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அஹமது ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவர் தனது மகள்களுக்காக ஒரு வாழ்க்கையை கற்பனை செய்யத் தொடங்கினார்.


அந்த கற்பனையில் ஒன்று ’தன் மகள்களை சமுதாயத்திற்கு சிறப்பாக சேவை செய்ய வைப்பதும் மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வைப்பதும்.' அவரின் அந்த கனவு நினைவாக மாற அதிக நேரம் எடுக்கவில்லை. தம்பதியினரின் ஆறு மகள்களும் தங்கள் படிப்பில் படு சுட்டியாகவே இருந்தனர். அந்த படிப்பாள் அவர்கள் வாழ்க்கையில் மேம்பட்டதுடன், தங்கள் பெற்றோர்களின் கற்பனையையும் நினைவாக்கினர்.

ahmed kutty

ஆம், அஹமது குட்டியின் 6 மகள்களில் நான்கு மகள்கள் மருத்துவர்களாக ஆகியுள்ளார். பாத்திமா (39), ஹஜ்ரா (33), ஆயிஷா (30), ஃபைசா என முதல் நான்கு மகள்கள் ஏற்கனவே மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இப்போது அஹமது குட்டியின் மீதமுள்ள இரண்டு மகள்களும் மருத்துவம் படித்து வருகின்றனர். அஹமது குட்டியின் ஐந்தாவது மகள் ரைஹானா சென்னையில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் நிலையில் , கடைசி மகள் அமீரா பெங்களூரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வருகிறார்.


இப்படியாக மகள்கள் ஆறு பேரும் அஹமது குட்டி கனவை நனவாக்கி உள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யமாக, பாத்திமா, ஹஜ்ரா, ஆயிஷா மற்றும் ஃபைசா ஆகியோரின் கணவர்களும் மருத்துவர்கள் தான். டாக்டர் ரிஷாத் ரஷீத், டாக்டர் அஜ்னாஸ் முகமது அலி, டாக்டர் அப்துரஹ்மான் பதியத் மணபட் மற்றும் டாக்டர் அஜாஸ் ஹாரூன் ஆகியோர் அந்தப் பகுதிகளில் பிரபல மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

மருத்துவர்கள்

அஹமது குட்டியின் மனைவி ஜைனா அவருக்கு உறவினர் தான். அவரை திருமணம் செய்தபோது, ஜைனாவுக்கு 12 வயதுதான். திருமணத்துக்கு பிறகு ஜைனா, அஹமது குட்டி குடும்பம் சென்னையில் வியாபாரம் செய்து வந்தது. முதல் மகள் பிறந்த பிறகு, அஹமது குட்டி தனது மனைவி மற்றும் மகளுடன் கத்தார் சென்றார், அங்கு அவர் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.


குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியவுடன், அஹமது குட்டியின் மனைவி ஜைனாவும், தங்கள் மகள்களுடன் அமர்ந்து குறிப்பாக அவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலத்தைப் பற்றி பல விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார்களாம். அப்படி தான் அவர்களின் ஆசையை மகள்கள் மனதில் விதைத்திருக்கிறார்கள்.


கிட்டத்தட்ட 35 வருடங்கள் கத்தாரில் வேலை செய்த பிறகு, தம்பதியினர் தங்கள் மகள்களுடன் கேரளா திரும்பினர். சுமார் இரண்டு ஆண்டுகள் கேரளாவில் வசித்த நிலையில், அஹமது குட்டி நெஞ்சு வலியால் ஏற்பட்டு இறந்துள்ளார். அந்த நேரத்தில், அவரின் இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணமாகி இருந்துள்ளது. அதன்பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜைனா, தனது மகள்களை மருத்துவ படிப்புகளைத் தொடர ஊக்குவித்து ஊக்கப்படுத்தியதோடு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.


அஹமது குட்டியின் மகள் ஹஜ்ரா,

என் அப்பாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. அவர் ஒரு டாக்டராக முடியாதபோது, ​​தனது சகோதரனை டாக்டராக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவரது சகோதரர் ஆசிரியராகிவிட்டார். எனவே, அப்பா இயற்கையாகவே எங்களில் ஒருவர் மூலம் தனது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார்.

“அவர் விருப்பத்துக்கு ஏற்ப எங்கள் மூத்த சகோதரி பாத்திமா எம்பிபிஎஸ் தேர்வு செய்தார். பின்னர், மருத்துவரான பாத்திமா எங்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் எங்கள் மற்ற சகோதரிகளையும் மருத்துவத்திற்கு செல்லத் தூண்டியது. ஆனால், இதற்குப் பின்னால், எல்லாமே எங்கள் பெற்றோரின் ஆலோசனைதான்.
doctors
”உண்மையில், எங்கள் ஆறு பேரில் மூன்றாவது சகோதரி ஆயிஷா சட்டம் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் எனது பெற்றோர்கள் தான் மருத்துவம் படித்து முடித்த பிறகு சட்டம் படித்துக்கொள்ள சொல்ல அவரும் இறுதியில் மருத்துவம் தேர்வு செய்து படித்தார்," என்றுள்ளார்.

இதனிடையே, ஆறு மகள்களில் இரண்டாவது மகளான ஹஜ்ரா மட்டும் பிடிஎஸ் படித்திருக்கிறார். மற்ற அனைவரும் எம்.பி.பி.எஸ் படித்திருக்கின்றனர். பாத்திமா தற்போது அபுதாபியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஹஜ்ரா வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பியுள்ள நிலையில், தனது ஃபிஜி படிப்பை தொடர திட்டமிட்டுள்ளார். ஆயிஷா கொடுங்கல்லூரில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அதே நேரத்தில் பைஷாவும் அவரது கணவரும் கொச்சியில் வேலை செய்து வருகின்றனர்.


ஒரு கனவு ஒருமுறை அல்ல, ஆறு முறை நினைவாகி இருக்கிறது. இதற்கு முழு முதற் காரணம், அஹமது குட்டி மட்டுமே. இந்த ஆறு சகோதரிகளும், தங்கள் தந்தை அப்பா அஹமது குட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் இல்லை. ஆனால் இந்த ஆறு பேரும் அஹமது குட்டியை உருவத்தை தங்கள் இதயங்களில் சுமக்கிறார்கள்.


தகவல் - newindianexpress | தொகுப்பு: மலையரசு