ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த ஆர்வலர்!
நொய்டாவைச் சேர்ந்த அனுராதா மிஷ்ரா தனது 16 வயது முதல் நாய்களைக் காப்பாற்றி வருகிறார். கைவிடப்பட்ட நாய்களுக்கும் காயமடைந்த நாய்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வருகிறார்.
நாய் மனிதனின் நல்ல நண்பன் என்கிறோம். ஆனால் அத்தகைய விசுவாசமான நண்பனை நாம் மரியாதையுடன் பராமரிக்கிறோமா? வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிக்களைத் தவிர்த்து சாலையில் காயம்பட்டு தனித்துவிடப்பட்ட நாய்கள் பராமரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. நொய்டாவைச் சேர்ந்த அனுராதா மிஷ்ரா நாய்களைப் பராமரிப்பதில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார். 38 வயதான இவர் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்களைப் பாதுகாத்துள்ளார். அதுமட்டுமின்றி Hope 4 Speechless Souls என்கிற அவரது தங்குமிடத்தில் காயம்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
அனுராதாவிற்கு 16 வயதிருக்கையில் நாய்கள் மீது அவருக்கு இரக்கம் ஏற்பட்டது. அப்போதிருந்து காயம்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவரிடம் அழைத்து செல்கிறார். அவர் Efforts For Good உடன் உரையாடுகையில்,
"பார்வையின்றியோ உடலில் குறைபாடுகளுடனோ அல்லது விபத்துகளால் முடங்கியோ அவதிப்படும் பல்வேறு நாய்களைப் பார்த்திருக்கிறேன். அவை படும் வேதனைகளில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் அவற்றை விடுவிக்க ஒரே ஒரு ஊசியை செலுத்தி நொடிகளில் கொன்றுவிடுவது மேல் என நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்போர் கருதுகின்றனர். இது வேதனையளிக்கிறது,” என்றார்.
அனுராதா நொய்டா கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் அறுவைசிகிச்சை செய்யவும் காயம்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு குடியிருப்பை ஏற்பாடு செய்தார்.
இருப்பினும் பலர் குடியிருக்கும் பகுதி என்பதால் நாய்களுக்கு பிரத்யேகமாக இடமளிப்பதற்கு அருகில் குடியிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி நாய்களுடன் வேறு இடத்திற்கு மாற்றலாகவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. 2014-ம் ஆண்டு நொய்டாவின் புறநகர் பகுதியில் ஒரு மனை வாங்கி ‘Hope 4 Speechless Souls’ என்கிற தங்குமிடத்தை நிறுவினார்.
கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிப்பது உன்னத முயற்சியாக இருப்பினும் இதற்கான செலவுகள் அதிகம். அனுராதா ’இண்டியன் வுமன் ப்ளாக்’ உடன் தெரிவிக்கும்போது,
”இதற்கு அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. நான் நண்பர்களையும் உறவினர்களையும் சார்ந்துள்ளேன். இதற்கு முன்பு நாய்களுக்கான பிரத்யேக உணவு மட்டுமே நாய்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான செலவு அதிகம் என்பதால் முட்டை, சாதம், சோயாபீன்ஸ் போன்றவற்றுடன் சிறிதளவு நாய் உணவையும் வழங்கத் தொடங்கினோம். தற்போது மக்களுக்கு எங்களது நிறுவனம் குறித்தும் பணி குறித்தும் தெரிய வருவதால் உதவியும் அதிகம் கிடைக்கிறது. மேற்கொண்டு உணவும் மருந்துகளும் தேவைப்படுகிறது,” என்றார்.
டெல்லியில் கைவிடப்பட்ட நாய்களை சிலர் மாமிசத்திற்காக கொல்வது குறித்தும் பகிர்ந்துகொண்டார். குளிர் அதிகம் இருந்த இரவில் தலையில் அடிபட்டு இறக்கும் நிலையில் இருந்த நாய் ஒன்றை அனுராதா மீட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார். பல இரவுகள் தூங்காமல் கண்விழித்து அந்த நாய்க்கு சிகிச்சையளித்து பராமரித்துள்ளார். இன்று அந்த நாய் நன்கு வளர்ந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA