தேர்வில் பூஜ்ஜியம் வாங்கிய இளம் பெண்ணைப் பாராட்டிய சுந்தர் பிச்சை!
தான் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் வாங்கியதை ட்விட்டரில் பதிவிட்ட பெண்ணை சுந்தர் பிச்சை எதற்கு பாராட்டினார் தெரியுமா?
கல்வியில் மதிப்பெண்கள் தான் எல்லாம் என்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் குவாண்டம் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய நிலையிலும், மனம் தளராமல் செயல்பட்டு இளம் பெண் ஒருவர் விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியாகி இருக்கிறார். இந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டவருக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பாராட்டும் கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சராபினா நான்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விண்வெளி இயற்பியல் துறையில் தற்போது பி.எச்.டி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று முன்னணி ஆய்வு விஞ்ஞானியாக திகழ்ந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன் சராபினா, தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது. இது தொடர்பான அனுபவத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
“4 ஆண்டுகளுக்கு முன், குவாண்டம் இயற்பியல் தேர்வில் நான் ‘0’ மதிப்பெண் பெற்றேன். என் முக்கியப் பாடத்தை மாற்றிக்கொண்டு, இயற்பியலுக்கு முழுக்கு போட வேண்டும் எனும் அச்சத்துடன் என் பேராசிரியரை சந்தித்தேன். இன்று, நான் முன்னணி விண்வெளி இயற்பியல் பி.எச்.டி ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன். இரண்டு ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) எல்லோருக்கும் கடினமானது தான். – மதிப்பெண்கள்; இது இல்லாயென்றால், போதிய தகுதி இல்லாதவர் என்று அர்த்தம் இல்லை,” என்று அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
குறைந்த மதிப்பெண்களால் துவண்டுவிடக்கூடாது என ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருந்த அவரது குறும்பதிவு, சக டிவிட்டர் பயனாளிகளை வெகுவாகக் கவர்ந்து விட்டது. சில மணி நேரங்களில் அவரது குறும்பதிவிற்கு 50 ஆயிரத்திற்கு மேல் லைக்குகள் குவிந்தன. மேலும் 10 ஆயிரம் முறைக்கு மேல் அந்த குறும்பதிவு ரீடிவீட் செய்யப்பட்டது.
இணையவாசிகளைக் கவர்ந்த இந்த குறும்பதிவு, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையையும் கவர்ந்தது. சராபினாவின் குறும்பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக,
“நன்றாகச் சொன்னீர்கள், ஊக்கம் அளிக்கிறது...” என சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்திருந்தார்.
சுந்தர் பிச்சையின் பாராட்டு, சராபினாவை நெகிழ வைத்துவிட்டது.
“ மிக்க நன்றி. இது உலகையே கொண்டு வந்துவிட்டது,” என அவர் சுந்தர் பிச்சை பாராட்டுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியிருந்தார்.
சராபினாவின் இந்த குறும்பதிவு தொடர்பாக மேலும் பலர் கருத்து தெரிவித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மதிப்பெண்கள் எல்லாமும் அல்ல, ஆர்வத்தை கைவிட்டு விடக்கூடாது எனும் வகையில் அந்த பதிவுகள் அமைந்திருந்தன.
’கல்லூரியில் முதல் செமிஸ்டரில் குறைந்த மதிப்பெண் வாங்கினேன். நான் பொறியியல் படிப்புக்கு ஏற்றவள் அல்ல என நினைத்தேன். இன்று செவ்வாய்க்கு செல்லும் இரண்டு விண்கலங்களை வடிவமைத்துள்ளேன்...’ என்று பென் கிச்சி என்பவர் தெரிவித்திருந்தார்.
“இயற்பியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினேன். இதை நினைத்து இன்றும் வெட்கப்படுகிறேன். ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு விண்கலம் அனுப்ப உதவிக்கொண்டிருக்கிறேன்,” என இன்னொரு டிவிட்டர் பயனாளி கூறியிருந்தார்.
இப்படி தொடரும் குறும்பதிவுகள், குறைந்த மதிப்பெண்களால் துவண்டுவிடாமல், கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம் என ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
தொகுப்பு: சைபர்சிம்மன்