சுந்தர் பிச்சை Vs டிம் குக் - இரண்டு ஐஐடி பொறியாளர்களை ‘இழுக்க’ நடந்த போட்டா போட்டி!
இந்திய ஐஐடிகளில் பயின்ற பொறியாளர்கள் இருவருக்காக சுந்தர் பிச்சை, டிம் குக் இடையே கடும் போட்டி நிலவிய தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐஐடி பட்டதாரிகளான இரண்டு பொறியாளர்களையும், அவர்களது சகா ஒருவரையும் தனது நிறுவனத்தில் சேருமாறு ‘தனிப்பட்ட முறையில் அணுகி’ இருக்கிறார் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. அதேநேரத்தில், அந்த திறமையாளர்களை தமது நிறுவனத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்.
இந்தியாவின் முதன்மை தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பட்டப்படிப்பு முடித்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் அவரது சகா ஒருவர் ஆகியோருக்கு அமெரிக்க தொழில்நுட்ப உயர் கார்ப்பரேட் நிறுவனங்களில் மேலதிகமான தேவை இருந்தது என்று கூறுவதோடு, இந்த மூவரையும் தங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்த ஆப்பிள் நிறுவன தலைமைச் செயலதிகாரி டிம் குக், கூகுள் நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரிடையே கடும் போட்டியே நிலவியது. ஏனெனில்...
செயற்கை நுண்ணறிவுத் துறை (Artificial Intelligence) பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவையும் அதிகரித்தபடியே உள்ளன.
Apple Inc-இன் தேடல் தொழில்நுட்பத்தை நவீனமயமாக்குவதில் முக்கியப் பங்காற்றிய சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகியோர், மைக்ரோசாப்ட் நிதியுதவி பெற்ற ChatGPT போன்ற சாட்பாட்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பமான பெரிய மொழி மாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த கடந்த ஆண்டு கூகுளில் இணைந்தனர் என்கிறது ‘தி இன்ஃபர்மேஷன்.’
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஐஐடி பட்டதாரிகளான இந்த இரண்டு பொறியாளர்களையும், அவர்களது சகாவையும் தனது நிறுவனத்தில் சேருமாறு 'தனிப்பட்ட முறையில் அணுகினார்', அதேநேரத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அவர்களை தன் நிறுவனத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தினார்,' என்று ‘தி இன்ஃபர்மேஷன்’ தகவல் தெரிவிக்கின்றது.
சீனிவாசன் வெங்கடாச்சாரி மற்றும் ஆனந்த் சுக்லா பின்னணி
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பு, சுக்லா 2001ல் ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பி.டெக். பட்டம் பெற்றார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணிபுரிந்த சுக்லா, வெங்கடாச்சாரி மற்றும் பேக்கர் ஆகியோருடன் இணைந்து ’லேசர்லைக்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியது.
2018-ல் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த சுக்லா, அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு கடந்த நவம்பரில் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
வெங்கடாச்சாரி 1996-ஆம் ஆண்டு சென்னை- ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சுக்லாவைப் போலவே, வெங்கடாச்சாரியின் வாழ்க்கைப் பாதையும் கூகுளில் பல ஆண்டுகள் (6 ஆண்டுகள்) பணிபுரிவதாகவும், அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிவதாகவும் அமைந்தது. இவர் கடந்த அக்டோபரில் பொறியியல் துணைத் தலைவராக கூகுள் நிறுவனத்திற்குத் திரும்பினார்.
பேக்கரும் ஆப்பிளை விட்டு வெளியேறி வெங்கடாச்சாரி மற்றும் சுக்லாவுடன் கூகுளுக்குத் திரும்பினார். கூகுளுக்கு அவர்கள் மீண்டும் சென்றது, கூகுளுடன் போட்டியிடும் ஆப்பிள் நிறுவனத்தின் முயற்சிகளுக்குத் தடையாக பேரிடியாக இறங்கியது.
ஏனெனில், கூகுளுக்குப் போட்டியாக தேடல் எந்திர திறன்களை வடிவமைக்கும் திட்டம் கொண்ட ஆப்பிளுக்கு இந்த ஐஐடி பொறியாளர்கள் கூகுளுக்கு மீண்டும் சென்றதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாக ‘தி இன்ஃபர்மேஷன்’ கூறுகிறது.
இந்திய ஐஐடிகளில் பயின்ற பொறியாளர்கள் இருவருக்காக உலகின் முன்னணி நிறுவனங்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டது தொழில்நுட்ப உலகில் கவனம் ஈர்த்துள்ளது.
'என்னுடன் தமிழிலே பேசினார்; மறக்க முடியாத 16 நிமிட சந்திப்பு’ - சுந்தர் பிச்சை உடன் செல்வமுரளி உரையாடியது என்ன?
Edited by Induja Raghunathan