‘கிரிப்டோ நாணய’ பரிவர்த்தனை மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்
2 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் கிர்ப்டோ நாணயங்கள் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி விதித்தத் தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன், அனிருதா போஸ், ராமசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச், ரிசர்வ் வங்கியின் உத்தரவு; அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என தெரிவித்து, உத்தரவை ரத்து செய்தது.
2018 ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி கிரிப்டோ நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய தடை விதித்ததையடுத்து, 2 ஆண்டுகள் கழித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தடையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கிரிப்டோ நாணய துறைக்கு நீதிமன்ற உத்தரவு ஆசுவாசம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தடைய எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐ.ஏ.எம்..ஏ.ஐ), கிரிப்டோகரன்சி வழக்கமான நாணயமாக கருத முடியாது இவை பரிவர்த்தனை ஊடகம் மட்டுமே என்று வாதிட்டிருந்தது.
இந்த சங்கத்தின் மனுவில், ஒரு சில கிரிப்டோ எக்சேஞ்ச்களும் இணைந்திருந்தன. கிரிப்டோ நாணயங்களில் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பல்வேறு இடர்களை அறிந்து செயல்படுமாறு, பயனாளிகள் மற்றும் இந்த வகை நாணயங்களை வைத்திருப்பவர்களை ரிசர்வ் வங்கி எச்சரித்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
நாட்டில் பண பரிவர்த்தனை முறையை பாதித்துவிடும் என்பதால், கிரிப்டோ நாணயங்கள் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
எனினும், கிரிப்டோ நாணயங்கள் தடை செய்யப்படாத நிலையில், அவற்றில் பரிவர்த்தனை செய்வது சட்டப்பூர்வ பரிவர்த்தனை என ஐ.ஏ.எம்.ஏ.ஐ வாதிட்டது.
இந்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை, கிரிப்டோ நாணயங்களை அகழ்வு செய்வது, வைத்திருப்பது, விற்பனை செய்வது மற்றும் பரிவர்த்தனை செய்வதை தடை செய்ய உத்தேசிக்கும் மசோதாவை அண்மையில் தயார் செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரியில், இந்தியாவில் கிரிப்டோ நாணயங்கள் சட்டப்பூர்வமான பரிவர்த்தனை நாணயம் அல்ல என அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
தமிழில்: சைபர்சிம்மன்