'மில் ஒன்றில் விற்கப்பட்டேன்; தொடர்ந்து 12 மணி நேரம் வேலை...’ – ஒரு கொத்தடிமையின் குமுறல்!
கோயமுத்தூரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் விற்கப்பட்ட ஜானகி தனது அசாதாரண வாழ்க்கைப் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
என் பெயர் ஜானகி. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு 19 வயதிருக்கும்போது என் குடும்பத்தினர் வற்புறுத்தி படிப்பை நிறுத்திவிட்டார்கள். வேலைக்குப் போகச் சொன்னார்கள். கோயமுத்தூரில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினேன்.
நல்ல வருமானம் கிடைக்கும். படிப்பைத் தொடரலாம். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிக்கலாம். இப்படி பல ஆசை வார்த்தைகள் காட்டினார்கள். எங்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்தான் என்னை வேலையில் சேர்த்தார். அவருக்கு 3,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.
என்னுடைய ஏழ்மை நிலையை நினைத்துப் பார்த்தேன். இந்த வாக்குறுதிகளை நம்பி வேலைக்கு செல்லத் தீர்மானித்தேன். ஆனால் மில்லிற்கு சென்றபோதுதான் உண்மை நிலவரம் தெரிந்தது.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டோம். அடிக்கடி இரவு நேரப் பணியும் இருக்கும். இவைதவிர வேலை செய்யும் சூழலும் ஆபத்தானதாக இருந்தது. இயந்திரங்களில் வேலை செய்யும்போது யாருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை.
ஹாஸ்டலில்தான் தங்கவேண்டியிருக்கும். அங்கு எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்காது. கிடைப்பதை சாப்பிடவேண்டும். அப்படிக் கிடைக்கும் உணவும் ஆரோக்கியமற்றதாக இருக்கும்.
அனைவருக்கும் பொதுவான கழிப்பறை. அதுவும் சுத்தப்படுத்தப்படாமல் முற்றிலும் சுகாதாரமற்றதாக இருக்கும்.
எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும். மாதவிடாய் சமயத்தில் வலியால் துடிப்பேன். சிறிது நேரம் ஓய்வு கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள். தொடர்ந்து வேலை செய்யக் கட்டாயப்படுத்துவார்கள்.
என் குடும்பத்தினருடன் பேச அனுமதி கிடைக்காது. வீட்டிற்கும் போக விடமாட்டார்கள். நாங்கள் பேசவேண்டும் என்று அனுமதி கேட்டால் ஹாஸ்டல் வார்டன் கோபப்படுவார்கள். தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள்.
வேலைக்கான கூலியும் மிகவும் குறைவு. அதைக் கொண்டு தப்பித்து வீடு திரும்பவும் முடியாது.
READ என்கிற நிறுவனம் கொத்தடிமைத்தனத்தையும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் எதிர்த்து போராடி வருகிறது. என்னைத் தேடிவந்த என் பெற்றோர் இந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்கள். போலீஸ் ஆதரவுடன் என்னை மில்லில் இருந்து மீட்டார்கள்.
இந்நிறுவனம் எனக்குப் பயிற்சி அளித்தது. நான் ஈரோடு மாவட்ட மகளிர் கூட்டமைப்பில் சேர்ந்தேன். சமூகம் நிலையான வளர்ச்சியை எட்டவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் இந்தக் கூட்டமைப்பில் தற்போது செயலாளராக இருக்கிறேன்.
மனிதக்கடத்தலில் இருந்து மீண்ட நான் ILFAT (India Leaders Forum Against Trafficking கம்யூனிட்டி லீடராக செயல்படுகிறேன். ஜவுளி மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடுகிறேன். பெண்கள் கடத்தப்பட்டு அவர்களது உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ILFAT அமைப்பில் பலர் இணைந்துள்ளோம். இங்குள்ளவர்கள் அனைவரும் கொத்தடிமைகளாக இருந்தோ அல்லது பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகியோ மீண்டவர்கள். மேலும் சிலர் கடத்தப்பட்டு செங்கல் சூலைகளில் வேலை செய்யவோ வீட்டு வேலைகள் செய்யவோ கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சிலர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார்கள். எங்களில் பலர் சிறு வயதிலேயே விற்கப்பட்டவர்கள்.
எங்களில் ஒவ்வொருவரும் சுரண்டப்பட்ட விதம் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் வறுமை, ஏமாற்றப்படுதல், சுரண்டப்படுதல் ஆகியவை எங்கள் அனைவருக்கும் பொதுவானவை.
”கொத்தடிமைகளான நாங்கள் அனைவருமே இன்னமும் நீதி கிடைக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். அனைத்து வகையான மனிதக் கடத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படவேண்டும்,” என்கிறார்.