Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'சர்வைவர் தொடர்' - வருங்காலக் கணவரால் இழைக்கப்பட்ட அநீதி; வேதனையை பகிரும் சரிஃபா!

மனித கடத்தலை துணிந்து எதிர்த்து போராடும் சரிபா!

'சர்வைவர் தொடர்' - வருங்காலக் கணவரால் இழைக்கப்பட்ட அநீதி; வேதனையை பகிரும் சரிஃபா!

Wednesday August 25, 2021 , 2 min Read

இந்த வார சர்வைவர் தொடரில், சரிஃபா என்ற பெண் தனது வருங்காலக் கணவரால் இழைக்கப்பட்ட அநீதியில் சிக்கித் தப்பித்து மற்றவர்களுக்கும் எப்படி ஆதரவளித்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார்.


”என் பெயர் சரிபா கதுன், எனக்கு 23 வயது. நான் மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாவில் உள்ள ஸ்வரூப் நகர் தொகுதியில் வசிக்கிறேன். எனக்கு 20 வயதாக இருந்தபோது, ​​சரஜித் மோண்டல் என்ற ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் எங்களின் பக்கத்து கிராமமான கோல்போகரில் வசித்து வந்தார். அந்த சந்திப்பில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. நான் அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில், கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு மாணவி என்பதால் கல்லூரிக்கு செல்வதை விடுத்து அவரை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், சரஜித் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்.


திருமணத்திற்காக என் வீட்டில் இருந்த ரூ.80,000 ரொக்கம் மற்றும் 30 கிராம் தங்கத்தை எடுத்துவரச் சொன்னார். அவர் கூறியபடியே, நாங்கள் அதனை எடுத்துக்கொண்டு மும்பை சென்றோம். இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது தான் எனக்கு அந்த கொடூரம் நடந்தது. என்னை திருமணம் செய்துகொள்பவராக சொன்னவரே என்னை ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதன்பிறகு இரண்டு மாதங்கள் என்னை வாங்கியவர்களால் சிறைபிடிக்கப்பட்டேன்.


அந்த சமயத்தில் நான் விற்கப்பட்ட நபரால் கற்பனை செய்ய முடியாத உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களை அனுபவித்தேன். ஒரு நாள் அங்கிருந்து தப்பித்து ஹவுரா செல்லும் ரயிலில் ஏறிவிட்டேன். கையில் ஒரு பைசா கூட இல்லை. பணம் இல்லை என்றாலும், நான் கஷ்டப்பட்டு என் கிராமத்தை அடைந்தேன். ஒரு வழியாக எனது கிராமத்தை அடைந்தாலும், நிம்மதியாக இருக்க முடியவில்லை. கிராமத்தினரால் ஒருவித பாகுபாட்டிற்கு ஆளானேன். யாரும் என்னுடன் பேசுவதற்குகூட விரும்பவில்லை.

சர்வைவர் தொடர்

அவர்களின் பாகுபாடு எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், சுயமரியாதை உணர்வு இல்லாமல் என்னை மிகவும் மனச்சோர்வடையச் செய்தது. ஆனால் அந்தத் தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் எனது அம்மா மட்டுமே. அவரின் ஆதரவுடன், நான் கோல்போக்கரில் உள்ள உள்ளூர் ஆதரவுக் குழுவான சேவா சதனை அணுக முடிவு செய்தேன். அந்த மையத்தில் தான் எனது வேதனைகளை புரிந்துகொண்ட ஆலோசனை கொடுத்த, ரெபேக்கா கட்டூனை சந்தித்தேன். அவரின் மூலமாக எனது பயம் அகன்றது. முதல் முறையாக, நடந்தது எதுவுமே என் தவறு அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன்.


என்னைப்போல் பலர் இதுபோன்ற வேதனைகளை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இதுபோன்ற கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க முடிவெடுத்தேன். அதன் விளைவு, இன்று மனிதக் கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் உதவும் அமைப்பான பிஜோயினியில் நானும் ஒரு அங்கம். இந்த அமைப்பால் நான் பயிற்சி பெற்றேன். பயிற்சி எனது நம்பிக்கையையும் செயல் திறனையும் அதிகரித்துள்ளது.


இப்போது என்னால் தப்பிப்பிழைத்தவர்களுடன் அதிக நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்கவும், அவர்களின் உரிமைகளைப் பெறவும், கடத்தலைச் சுற்றியுள்ள களங்கத்தை தைரியமாக சமாளிக்கவும் உதவ முடிகிறது. என் வாழ்க்கையின் குறிக்கோள், என்னை கஷ்டப்படுத்தி, என் நம்பிக்கைக்கு இரையாக்கிய நபரை தண்டிப்பதாகும். நான் பெற்ற வலியை யாரும் அனுபவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கடத்தலில் இருந்து தப்பியவர்களுடன் இணைக்கப்பட்ட எதிர்மறை ஸ்டீரியோடைப்களை மாற்றுவதில் நான் தீவிரமாக இருக்க விரும்புகிறேன்.


சமூகத்தில் கருப்பு பக்கமாக இருக்கும் மனிதக் கடத்தலை ஒழிக்கவும், நீதிக்காகவும், என்னைப் போல உயிர் பிழைத்தவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராட நான் கடத்தலுக்கு எதிரான இந்திய தலைமை மன்றத்தில் (ILFAT) சேர்ந்துள்ளேன்," என்று விவரிக்கிறார்.