'ஒரு கதாப்பாத்திரத்தில் பொருந்த என் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன்'– சுஷ்மிதா சென்!
‘ஆர்யா’ வெப் தொடரில் நடிக்கும் சுஷ்மிதா சென் தன்னுடைய சுவாரஸ்யமான பயணம் குறித்து ஹெர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.
கடந்த காலத்தை நினைவுப்படுத்திப் பார்ப்பதும் இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் எப்போதுமே மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கும்.
1994-ம் ஆண்டு இந்தியாவில் முதலில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றார் சுஷ்மிதா சென். மிஸ் யுனிவர்ஸ் என அவரது பெயர் உச்சரிக்கப்பட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கும் திகைப்பிற்கும் அளவே இல்லை. அப்போது அவருக்கு 18 வயதிருக்கும்.
சுஷ்மிதா சென் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பசுமை மாறாமல் நினைவுகூர்ந்து சிரிக்கிறார். அன்றைய தினம் இந்தியா முழுவதும் வெளியான அனைத்து செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியில் இவரது புகைப்படமே இடம்பெற்றிருந்தது. சுஷ்மிதா அந்தப் புகைப்படங்களில் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு சிரிக்கிறார்.
சுஷ்மிதா சென்னிற்கு 45 வயதாகிறது. சமீபத்தில் இவரது வெப் சீரிஸ் ‘ஆர்யா’ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஆர்யா’ மூலம் என் இத்தனை கால உழைப்பிற்கும் காத்திருப்பிற்கும் பலன் கிடைத்தது போல் உணர்கிறேன். 40 வயதுடைய ஒரு நடிகரால் இதைத்தான் சாதிக்கமுடியும் என்கிற வரையறையைத் தகர்த்தெறிந்தது போல் உள்ளது,” என்கிறார்.
இந்தி திரைப்படத் துறையில் சுஷ்மிதாவால் வெற்றி பெறமுடியவில்லை. இங்கு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட அணுகுமுறை இருந்து வருவதால் துணிச்சலான, சுய அடையாளம் கொண்ட நடிகைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை.
இருப்பினும் ஓடிடி தளங்கள் அதிகரித்து வருவதால் பொழுதுபோக்கு என்கிற அம்சம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல புதிய, நேர்மறையான மாற்றங்களைப் பார்க்கமுடிகிறது.
ஓடிடி தளங்கள் வருகையால், பல காலமாக கவனிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத திறமைகள் பெருமளவு வெளிப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார் சுஷ்மிதா. அவருக்கு திருப்தியளிக்கக்கூடிய ஒரு பிராஜெக்டை ஒப்புக்கொள்வதற்கு முன்பு பல வாய்ப்புகளுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
“வழக்கமான, போரிங் கதாப்பாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இத்தனை நாள் காத்திருந்தாலும் பரவாயில்லை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லவேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன்,” என்கிறார் சுஷ்மிதா.
‘ஆர்யா’ தொடரில் சுஷ்மிதா சென், ஆர்யா சரீன் என்கிற கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். நடுத்தர வயது பெண்மணியாக நடித்திருக்கிறார். குழந்தைகளின் அம்மாவாகவும் மனைவியாகவும் இந்தக் கதாப்பாத்திரத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
“வளர்ந்த குழந்தைகள் மூன்று பேரின் தாயாக நடித்திருக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்ததால் நான் எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆர்யா செக்ஸியான பெண்தான்,” என்கிறார் சுஷ்மிதா.
சுஷ்மிதா சென் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்திற்கு பொருந்துவார் என்பதை இந்தி பொழுதுபோக்கு துறையால் பல காலமாகவே நிர்ணயிக்கமுடியவில்லை. அதுமட்டுமின்றி இவர் ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிடப்பட்டார். சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அதே ஆண்டு ஐஸ்வர்யா ராயும் உலக அழகி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆர்யா, வெப் தொடரில் சுஷ்மிதா நடித்துள்ளது சுய அடையாளத்தை விரும்பும் ஒருவர் தனக்கான பாதையை நிர்ணயித்துக்கொண்டால் நிச்சயம் முன்னேறி செல்லமுடியும் என்பதை உணர்த்துகிறது.
“ஒரு கதாப்பாத்திரத்தில் பொருந்தவேண்டும் என்பதற்காக என்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக நான் நடந்துகொண்டதில்லை. இந்த அணுகுமுறை எனக்கு பலனளித்தது. இதற்கான விலையை நான் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதையும் நான் அறிவேன். அதிகம் ஆராயப்படாத ஒரு பாதையை நாம் தேர்வு செய்யும்போது அதற்கான விலையை நிச்சயம் நாம் கொடுக்கவேண்டும்,” என்கிறார்.
மேலும் எளிதாகக் கிடைக்கும் விஷயங்களில் தனக்கு எப்போதும் விருப்பம் இருப்பதில்லை என்கிறார் சுஷ்மிதா.
“ஒன்றைப் பெறவேண்டும் என்கிற உந்துதல் பிறக்கும் விஷயங்களே எனக்குப் பிடிக்கும். அதை அடைவதற்காக விரும்பி போராடுவேன்,” என்றார்.
இன்று சமூக வலைதளங்களில் எத்தனையோ இளைஞர்களுக்கு சுஷ்மிதா உந்துதலாக இருக்கிறார். இதற்கு இவரது அடையாளமே காரணம். ’மிந்த்ரா ஃபேஷன் சூப்பர்ஸ்டார்’ நிகழ்ச்சியில் ஃபேஷன் டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா உடன் இணைந்து சுஷ்மிதா சென் நடுவராகத் தேர்வாகியுள்ளார்.
“நீங்கள் சமூக வலைதளங்களில் மற்றவர்களுக்கு உந்துதலாக இருப்பீர்களானால் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வலிமை உங்களிடம் இருக்கிறது என்றே அர்த்தம்,” என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
“நீங்கள் யார் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் சுயத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்” என்றார்.
24 வயதிருக்கும்போதே பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக்கொண்டதாகட்டும், தன்னைக்காட்டிலும் வயது குறைவான ஒருவருடன் டேட்டிங் செய்வதாகட்டும் சுஷ்மிதா அந்தந்த வயதிற்குரிய செயல்பாடுகளில் எப்போதும் ஈடுபட்டதில்லை.
“என்னுடைய தீர்மானங்கள் எதுவுமே மற்றவர்களை சந்தோஷப்படுத்த இருக்காது. என்னால் அந்த முடிவுகளுடன் வாழமுடியும் என்பதாலேயே அத்தகைய முடிவுகளை எடுக்கிறேன்,” என்கிறார் சுஷ்மிதா.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: ஸ்ரீவித்யா