‘நோக்கம்’ - தமிழ்நாடு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் ஆப் அறிமுகம்!
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘நோக்கம்’ என்ற மொபைல் போன் செயலி. இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘நோக்கம்’ என்ற மொபைல் போன் செயலி. இந்த செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப போன்களை பயன்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் தங்களுக்குத் தேவையான பாட குறிப்புகளை வீடியோ, ஆடியோ மற்றும் டெக்ஸ்ட் வடிவில் ஸ்மார்ட்போன் ஊடாக பெறுகின்றனர். அதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோக்கம் செயலி: தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், AIM TN என்ற யூடியூப் சேனலின் வழியே பயிற்சி சார்ந்த வீடியோக்களை பதிவு செய்து வருகிறது.
இந்த சூழலில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்காக நோக்கம் என்ற பிரத்யேக 'செயலி' ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (BPS), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆப்’இல் தினந்தோறும் பயிற்சி சார்ந்த காணொலிகள் அப்லோட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பயனர்கள் பார்க்கவும், அதற்கான பாடக் குறிப்புகளை (Notes) இதில் டவுன்லோட் செய்யவும் முடியும். மேலும், இந்த செயலியில் பயனர்கள் மாதிரி தேர்வுகளையும் (Model Test) எளிதில் மேற்கொள்ளலாம்.
பாடவாரியாக இந்த மாதிரி தேர்வுகளை பயனர்கள் மேற்கொள்ளலாம். இது தேர்வர்கள் தங்களது தேர்வுக்கான தயாரிப்பின் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும் என தெரிகிறது.
இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?
- நோக்கம் செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பயனர்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- செயலியை போனில் இன்ஸ்டால் செய்ததும் பயனர்கள் Sign Up செய்ய வேண்டும்.
- பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், பாலினம், மாவட்டம், மாநிலம் போன்ற விவரங்களை கொடுத்து பயனர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் மீண்டும் Sign In செய்து இந்த செயலியை பயன்படுத்தலாம்.
- இணைய இணைப்பின் உதவி கொண்டு இந்த செயலியை பயன்படுத்தலாம்.
என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?
- இந்த செயலியின் முகப்பு பக்கத்தில் தேர்வு வாரியங்களின் லிங்குகள், மாதிரி தேர்வு மேற்கொள்வதற்கான லிங்குகள் மற்றும் அண்மையில் அப்லோட் செய்யப்பட்ட பயிற்சி சார்ந்த வீடியோக்கள் கிடைக்கும்.
- பயனர்கள் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி என தங்களுக்கு தேவைப்படும் லிங்குகளை கிளிக் செய்தால் அதில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வரும் பாடம் (கோர்ஸ்) சார்ந்த விவரங்களை பெறலாம்.
- அந்த கோர்ஸ் சார்ந்த தேர்வு குறித்த நோட்டிபிகேஷன், பாடத்திட்டம், வீடியோ, பாட குறிப்புகள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்கள், மாடல் டெஸ்ட் குறித்து அட்டவணை, மாடல் டெஸ்ட் போன்றவற்றை ஒவ்வொரு லிங்கிலும் மேற்கொள்ளலாம்.
- தொழில்நுட்பம், நிர்வாகம், தமிழ், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம், கணிதம், வரலாறு, நடப்பு நிகழ்வுகள் என பாட வாரியாக வீடியோ மற்றும் நோட்ஸ்களை பயனர்கள் பெறலாம்.
- அதே போல, பயனர்கள் இதில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகளிலும் பங்கேற்கலாம். இதற்கான மதிப்பெண் உடனடியாக பயனர்கள் பெறவும் முடியும் என தெரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கலாம்
உங்க போனில் உள்ள ஆபத்தான ஆப்’களை கண்டறிந்து டேட்டாவை பாதுகாக்க உதவும் ‘BeVigil’
Edited by Induja Raghunathan