தினமும் 10,000 கப் டீ, காபி டெலிவரி: டீ பிசினஸில் கலக்கும் மதுரை ‘பைலைட்’ இளைஞர்!
க்யூஆர் கோட் கொண்ட பிளாஸ்க், எரிப்பொருளை சேமிக்க டெலிவரி பாய்களுக்கு பக்கவான ரூட் மேப் என தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் டீ தொழிலையும் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது கப் டைம்.
டீ, காபி என்பது இந்தியர்களின் இன்ஸ்டன்ட் எனர்ஜி பானம். பணிபுரிபவர்களுக்கோ சோர்வினை கலைத்து புத்துணர்ச்சியை வழங்கும் அரும்பானம். அதற்காக, அலுவலக இடைவெளியில் குட்டி டீ பிரேக் எடுத்துக் கொள்ள ஊழியர்கள் வெளியே செல்வதால், பணிப் பாதித்து நேரவிரயமாகிறது. அலுவலத்திற்குள்ளே டீ, காபி வழங்கினாலும் அதை நிர்வகிப்பதில் அலுவலகங்களுக்கு தலைவலியாக உள்ளது. ஒரு கப் டீ, காபியில் நிலவும் இப்பிரச்னையை ஒரு வணிகக்கடையின் உரிமையாளராக இருந்து கவனித்து வந்தார் பிரபாகரன் வேணுகோபால்.
கடை உரிமையாளராக அவர் சந்தித்த சவாலும், கடை ஊழியர்களது நிலையையும் தீர்க்க முடிவெடுத்தார். ஆனால், இந்த பிரச்னை அவரது கடையோடு நின்றிடவில்லை. டீ, காபி டெலிவரித்துறை சரிவர ஒழுங்குபடுத்தப்படாததாக இருந்தது. பிரேக் டைமில் டேபிளுக்கு சுடச்சுட டீ, காபியை கொண்டுவர முடிவெடுத்தார். இது என்ன பிரமாதம்... டீ கடைகளே இந்த பணியை செய்கின்றனரே என்று தோன்றலாம். தெரு தெருவிற்கு இருக்கும் டீக் கடைகள், அந்த பகுதியை சுற்றி அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு டெலிவரி செய்கின்றன. ஆனால், யாரும் பிரபாகரன் போன்று யாரும் சிந்திக்கவில்லை, கப் டைம் போன்று பிராண்ட் ஆகவும் மாறவில்லை. சக்சஸ்புல் பிசினஸ் மாடலாக கப் டைம் மாறியதுடன், ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் சிறந்த ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க அரசு வழங்குகிற ரூ10 லட்சம் நிதி தொகையை பெறும் ஸ்டார்ட் அப்களுள் ஒன்றாகவும் தேர்வாகியுள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கப் டைம்' சப்ஸ்கிரிப்ஷன் முறையில் டீ, காபியினை வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்களுக்கு டெலிவரி செய்யும் தனித்துவமான கான்செப்டில் இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். க்யூஆர் கோட் கொண்ட பிளாஸ்க், எரிப்பொருளை சேமிக்க டெலிவரி பாய்களுக்கு பக்கவான ரூட் மேப் என தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீ தொழிலையும் வெற்றிக்கரமானதாகியுள்ளார் பிரபாகரன்.
"எங்களது குடும்பத் தொழில் நகை வியாபாரம். பைலட் ஆக வேண்டும் என்பது என்னுடைய பேஷன். என்னுடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல், குடும்பத்தாரும் பைலட் டிரைனிங் முடிக்க என்னை அனுமதித்தனர். ஆனால், ஒரு நிபந்தனை வைத்தனர். அதாவது, 5 ஆண்டுகளுக்கு என்னுடைய பேஷனை தொடர்ந்தாலும், மீண்டும் குடும்பத் தொழிலுக்குள் வரவேண்டும். அமெரிக்காவில் பைலட் டிரைனிங் முடித்துவிட்டு பைலட் டிரைனராக பணிபுரிந்தேன்.
எனக்கு கொடுக்கப்பட்ட காலமும் அதற்குள் முடிவடைந்தது. ஊருக்கு வந்து குடும்பத் தொழிலை கவனித்து வந்தேன். அப்போது கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலை, மாலை இருவேளையும் டீ, காபி வழங்குவதில் சிக்கல் இருந்ததை கவனித்தேன். டீ, காபி வாங்குவதற்கு கடையின் ஊழியரே செல்ல வேண்டிய நிலையிருந்தது. அதனால், வேலை பாதிக்கப்பட்டது, நேரம் வீணாகியது. ஊழியர்களும் சுழற்சி முறையில் எவரேனும் ஒருவர் சென்று டீ,காபி வாங்கிவருவது அவர்களுக்கும் விருப்பமற்ற செயலாக இருந்தது. எங்களது கடையில் மட்டும் இந்த சிக்கல் இல்லை. பெருவாரியான கடைகளிலிலும் இதே நிலை தான். சில கடைகளில் இந்த வேலையை செய்வதற்காகவே பணியாளை அமர்த்தியிருந்தனர்.
சில காபி கடைகளில் நேரடியாக அவர்களே டெலிவரி செய்தாலும், குவாலிட்டி மற்றும் குவான்டிட்டியில் குறை இருந்தது. தொடக்கத்தில் சிறு விஷயமாக தோன்றியது. ஆழ்ந்த சிந்திக்கையில், டீ, காபி டெலிவரித் துறை ஒழுங்கப்படுத்தபடாததாக இருந்தது. அலுவலகங்களுக்கும், காபி கடைகளுக்கும் இடையே இருந்த இடைவெளியை சரிச்செய்ய எண்ணிய போது தோன்றியது தான் கப் டைம்.
தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு, களத்தில் இறங்கி நிலவிய சிக்கல்களை பற்றி அறிந்து ஒரு புரிதலுக்கு வந்தேன். பெர்பெக்ட்டான டீ, காபியை கொண்டு வர அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது. சந்தைக்கு இத்தொழில் புதிது என்பதால், முன்னெடுத்த ஒவ்வொரு அடியிலும் நிறையப் பாடங்கள் காத்திருந்தன. அனைத்தையும் கற்றுத்தேர்ந்து கப் டைமிற்கு சரியான செயல்வடிவம் கொடுக்க, காலமும், பணமும் அதிகம் தேவைப்பட்டது. இது ஒரு புறமிருக்க குடும்பத்தார் தவிர, மற்ற அனைவரும் இது தேவையா என எதிர்மறையாக பேசினர்.
'நீங்க வானத்தில் பறப்பீங்கனு மேல பார்த்திட்டு இருந்தா, இப்படி வந்து நிக்குறீங்க'னு வெளிப்படையாக கூறினர். சரியான பாதையில் செல்கிறோம் தான் என்று நினைத்தாலும் நெகட்டிவ் வைப்ஸ் சோர்வடைய செய்தது. மனந்தளாராமல் சுவையான, சூடான காபியை அலுவலகங்களுக்கும், கடைகளுக்கும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பிளாஸ்கில் டெலிவரி செய்திட முடிவு செய்தேன்.
காபி, டீயின் ரெசிபி தொடங்கி மிஷினரி, டெலிவிரி வண்டி வரை அனைத்திற்கும் எது சிறந்தது என ஆய்வு செய்து மேம்படுத்தினேன்.
10கப் டூ 10,000 கப் டெலிவரி!
தொடக்கத்தில் 10 கப்கள் என்ற எண்ணிக்கையிலே சப்ளை செய்யத் தொடங்கினோம். கஸ்டமர்களின் பரிந்துரை மூலம் நிறைய ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தது. 10 கப்பில் ஆரம்பித்து இன்று ஒரு நாளுக்கு 10,000 டீ, காபிகளை டெலிவரி செய்கிறோம். வழக்கமான முறையில் பாலை கொதிக்க வைக்காமல், பெரிய பாய்லர்களில் நீராவியில் வேக வைத்தல் முறையில் பாலைக் காய்ச்சுகிறோம்.
அதேபோல், சந்தையில் கிடைக்கும் டீ,காபிப் பொடிகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. சிக்மங்களூரிலிருந்து காபிக் கொட்டைகளை கொள்முதல் செய்து, நாங்களே அவற்றை வறுத்துக் கொள்வோம். மொத்தமாக சேமித்து வைக்காமல், தேவைப்படும் போது ஃப்ரஷ்ஷாக காபி பவுடர் அரைத்து கொள்வோம். அதே போல் தான் டீ மற்றும் மசாலா டீக்கு தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்து, டீத் துாள் அரைப்போம்" என்று விவரித்து கூறினார் பிராபகரன்.
உணவுச் சந்தையைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் பாதிவெற்றி. அந்த வகையில், பணி இடைவேளையில் சூடான, சுவையான டீ, காபியை சரியான நேரத்தில் குடிக்கும் போது பணியாளர்கள் அடையும் புத்துணர்ச்சி கப் டைம்மிற்கு கிடைத்த வெற்றியாகியது.
பொதுவாக டீ, காபி போடுவதற்கு கடைகளில் டீ மாஸ்டர் இருப்பார். பெரிய ஓட்டல்களில் செஃப் இருப்பார். ஆனால், கப் டைமில் யார் வேண்டுமானாலும் அன்றைய நாளுக்கான டீ மாஸ்டர் ஆகிவிடுகிறார்கள். ஆம், கைப்பக்குவத்தை கையடுக்க புத்தகமாக மாற்றிவிட்டார் பிராபகரன்.
எவ்வெளவு டிகிரி செல்ஷியஸில் பால் கொதிக்க வேண்டும். பாலின் கொதி நிலை எவ்வளவு இருக்கும் போது டீத் துாள் போட வேண்டும். எவ்வளவு டீத் துாள் போட வேண்டும் என டீயை தயாரிப்பது சிஸ்டமெட்டிக்காக நடக்கும் வகையில் வரையறைப் படுத்தியுள்ளார். அதனால், எத்தனை லிட்டர் டீ, காபி செய்தாலும், தினமும் தரத்தில் வித்தியாசமின்றி கொடுக்கிறார்கள். இதை அவர்கள் 'செஃப்லேஸ் கிச்சன்' என்று அழைக்கிறார்கள்.
வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்றிட தரத்தில் ஏற்ற, இறக்கமில்லாத் தன்மை அவர்களுக்கு கைக் கொடுத்தது. கப் டைமின் கிச்சன் செயல்முறை மட்டும் வாவ் சொல்ல வைக்கவில்லை. குக்கிங்கில் மட்டுமின்றி பேக்கிங், டெலிவரியிலும் சிஸ்டமெட்டிக்காக இயங்கும் வகையில் வழிவகைச் செய்துள்ளார்.
"டீ, காபிகளை 1/2 லிட்டர், 1லிட்டர் பிளாஸ்குகளில் டெலிவரி செய்கிறோம். தொடக்கத்தில் பிளாஸ்க்குகளை மீண்டும் கலெக்ட் செய்வதில் குழப்பம் நீடித்துவந்தது. வெளியேறும் பிளாஸ்குகள் திரும்பிவராத நிலையில் இருந்தது. அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு பிளாஸ்க்கும் ஒரு க்யூஆர் கோட்டை செட் செய்தேன். அதில், பிளாஸ்க்கில் உள்ள பொருள் என்ன?, யார் அதை டெலிவரி செய்கிறார்? யாருக்கு அது டெலிவரி செய்யப்படுகிறது? போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும். இதன்மூலம் பிளாஸ்குகள் காணாமல் போவது குறைந்தது.
ஒரு டெலிவரி ஆள் 40முதல் 50 பிளாஸ்குகளை டெலிவரி செய்வார். உரிய நேரத்தில் பிளாஸ்க்கை டெலிவரி செய்ய வேண்டும், அதே நேரம் வண்டிக்கான எரிப்பொருள் செலவையும் குறைக்கவேண்டும். அதற்காக டெலிவரி பாய் கம்பெனியில் இருந்து புறப்பட்டு பிளாஸ்குகளை டெலிவரி செய்துவிட்டு மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடும் வகையில் ரூட் மேப்பை தயாரித்து வைத்துள்ளோம்.
டெலிவரிக்கு எந்த வண்டி பயன்படுத்தலாம்?, அதை எப்படி வடிவமைக்கலாம்?, போக்குவரத்துக்கான எரிப்பொருள் செலவினத்தை எப்படி குறைப்பது? பிளாஸ்க்கை பாதுகாப்பது, டீ, காபியின் பெர்பெக்ட் ரெசிபியை கொண்டு வந்தது என அனைத்தையும் ஆராய்ந்து மேம்படுத்துவதற்கு 5 முதல் 8 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். அது தான், கப் டைமை முழுமையான பிசினஸ் மாடலாக மாற்றி, வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியது.
தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமையாக்க இயக்கத்தின் (TANSIM) மூலம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், விதை மானிய நிதியை வழங்குவதற்கு TANSEED எனும் திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஸ்டார்ட்-அப்களின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து ஊக்குவிக்கும் வகையில் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. ஏற்கனவே, அரசாங்கத்தால் 60 நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்-அப்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக உள்ளது கப் டைம்.
அத்துடன் பெண் தொழில்முனைவோர்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புதுமையாக்க இயக்கத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
இதுவரை மதுரையில் மட்டும் இயங்கி வந்த நிலையில், பிரான்சைஸ் முறையில் தமிழகம் முழுவதும் கப் டைமை கொண்டுச் சேர்க்கும் அடுத்தக்கட்டமாக நகர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.