'இமிடேஷன்’ ஜுவல்லரி மூலம் ‘ரியல்’ லாபம் – அசத்தும் சென்னை பெண் தொழில்முனைவர்!
35 வாட்ஸ்அப் க்ரூப், 1500 ரீசெல்லர்ஸ், ரூ.1.5 லட்சம் மாத வருவாய் என பம்பரமாகச் சுழலும் ஆனந்தி, எப்படி வர்த்தகம் செய்கிறார் என தெரிந்து கொள்ளுங்கள்.
பிரிக்க முடியாதது எது? ஒருவேளை திருவிளையாடல் தருமியிடம் இந்தக் கேள்வியை மீண்டும் கேட்டால் பெண்களும் ஆபரணங்களும் என்று பதிலளிக்க வாய்ப்புண்டு. அந்த அளவிற்கு பெண்களுடன் ஆபரணங்கள் என்றென்றும் ஒன்று கலந்தது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிலும் பெண்களுக்கு ஆபரணங்கள் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம். உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றில் எத்தனையோ மாற்றங்கள் வந்து சேர்ந்திருந்தாலும் பாரம்பரிய நகைகளுக்கு என்றுமே மவுசு உண்டு.
தங்க நகைகள் அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி முதலீடாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் நகைகளை வாங்கும்போது தங்களது விருப்பத்தில் சமரசம் செய்து, நகைகளின் வடிவமைப்பு பிடித்திருந்தாலும் கற்களுடன் இருக்கும் நகைகள், அதிக சேதாரத்துடன்கூடிய நகைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர்.
எனவே அவர்களது விருப்பதை பூர்த்தி செய்துகொள்ள குறைந்த விலையில் இமிடேஷன் நகைகள் வாங்கிக் கொள்கின்றனர். இவை தங்க நகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. இந்தத் துறையில் இருக்கும் வணிக வாய்ப்பை நன்கு உணர்ந்ததால் தான், அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆனந்தி.
ஹோம்ப்ரூனர் ஆனது எப்படி?
ஆனந்தி எம்.எஸ்.சி பட்டதாரி. இவரது குழந்தைக்கு 3 வயதாகிறது. திருமணத்திற்குப் பிறகு வணிக முயற்சியில் ஈடுபட விரும்பினார். கல்லூரி நாட்களில் இவர் விதவிதமாக அணியும் நகைகள் பலரைக் கவர்ந்துள்ளது. நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இவரது ரசனையைப் பாராட்டியுள்ளனர். எனவே இந்தப் பகுதியில் செயல்பட விரும்பினார். ஆன்லைனில் இமிடேஷன் ஜுவல்லரி விற்பனை செய்யத் தீர்மானித்த ஆனந்தி ASA Online Boutique தொடங்கினார்.
“முதல்ல ஆறு பேர்களோட வாட்ஸ் அப் குழு ஆரம்பிச்சேன். சமூக வலைதளங்கள்ல பகிர்ந்துகிட்டேன். அப்படியே வாடிக்கையாளர்கள் அதிகமானாங்க. ஆரம்பத்துல மூன்று சப்ளையர்கள் மட்டுமே இருந்தாங்க. இப்போ நேரடியா 160 சப்ளையர்ஸ் இருக்காங்க. அப்டேட் கொடுக்கதான் நேரம் இல்லை,” என்கிறார் பரபரப்பாக இயங்கி வரும் ஆனந்தி.
இவரது உறவினர்கள் பலரும் ASA பெயரிலேயே வாட்ஸ் அப் குழுக்களை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் ஆர்டர்களின் மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர். இப்படியாக வாட்ஸ் அப்பில் ஒரு குழுவை அமைத்துத் தொடங்கப்பட்ட இவரது வணிக முயற்சி இன்று 35 வாட்ஸ் அப் குழுக்களுடன் 1500-க்கும் மேற்பட்ட மறு விற்பனையாளர்களுடனும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டவர்கள் பலரும் இவரது நகைகளில் ஆர்வம் காட்டியதால் முறையாகப் பதிவு செய்து ஏற்றுமதியும் செய்து வருகிறார்களாம்.
வருவாய்
புடவை வியாபாரத்துடன் ஒப்பிடுகையில் இமிடேஷன் நகைகள் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் ஆனந்தி.
இவர் இந்த வணிகம் மூலம் முதல் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 9 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். இரண்டாம் ஆண்டில் வருவாய் 16 லட்சத்தைக் கடந்துள்ளது. மாத வருவாயாக 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஈட்டப்படுவதாகத் தெரிவிக்கிறார்.
இமிடேஷன் ஜுவல்லரி வணிகத்தைப் பொறுத்தவரை நேரடியாகத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் அதிக லாபம் ஈட்ட முடிவதாகக் குறிப்பிடுகிறார் ஆனந்தி.
கடைகளில் வாங்கும் விலையுடன் ஒப்பிடும்போது நேரடியாக விற்பனையாளர்களிடம் வாங்கி விற்பனை செய்யும்போது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே பொருள், அதே தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கும் சிறந்த மதிப்பு கிடைக்கிறது.
திருமண நிகழ்வுகளில் மணமகளுக்கான ஆபரணங்கள் வாடகைக்கு கொடுப்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம் என்கிறார்.
“பெண்கள் தங்களுக்கு தெரிஞ்சவங்களை குழுவா சேர்த்து இந்த பிசினஸை முறையா நடத்தினாங்கன்னா மாத வருவாயாக 10 ஆயிரத்துலேர்ந்து 15 ஆயிரம் வரைக்கும் தாராளமா சம்பாதிக்கலாம்,” என்கிறார்.
ஆனந்தி முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தி இந்த வணிகத்தை நடத்தி வருகிறார்.
மறு விற்பனையாளர்கள்
நம்பகத்தன்மையுடன் செயல்படுவதால் கிட்டத்தட்ட 200-300 மறு விற்பனையாளர்கள் தன்னிடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்து வருவதாக ஆனந்தி தெரிவிக்கிறார். இதுதவிர அவ்வப்போது தேவை இருக்கும்போது மட்டும் வாங்கும் மறு விற்பனையாளர்களும் உள்ளனர்.
சப்ளையர்கள்
ஆனந்தி சென்னை, பெங்களூரு, மும்பை என பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி விற்பனை செய்கிறார்.
“வாடிக்கையாளர்களுக்கு இணையாக சப்ளையர்களை திருப்திபடுத்தறது முக்கியம்ன்னு நான் நினைப்பேன். ஏன்னா வாடிக்கையாளர்களைவிட, சப்ளையர்கள்கூடதான் நாங்க ரொம்ப தூரம் பயணிக்கவேண்டியிருக்கும். அவங்களோட சப்போர்ட் எங்களுக்கு ரொம்ப முக்கியம்,” என்கிறார் ஆனந்தி.
சந்திக்கும் சவால்கள்
“நிறைய மறு விற்பனையாளர்கள் போலியான குரூப் உருவாக்கி எங்க விலையை தெரிஞ்சுப்பாங்க. எங்க விலையைவிட குறைந்த விலையில சில பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்கள் வாங்க விடாமல் செஞ்சிடுவாங்க. அதோட அந்த பணத்தை கலெக்ட் பண்ணிகிட்டு குரூப்பை பிளாக் பண்ணிட்டு போயிடுவாங்க,” என்று தன் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
உடனடியாக தங்கள் ஆர்டரை ட்ராக் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை என்பதே அவரது கருத்து.
சில பொருட்கள் சேதமடைந்தால் உடனே அவற்றைத் திரும்ப எடுத்துக்கொண்டு மாற்றிக்கொடுக்கவேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்பாக இருக்கும். ஆனால் விற்பனையாளர்களுக்கு பார்சலை அன்பாக்ஸ் செய்த வீடியோவை அனுப்புவது உள்ளிட்ட சில செயல்முறைகளுக்குப் பின்னரே அது சாத்தியப்படும் என்கிறார்.
கடின உழைப்பு
ஆனந்தி இந்த நிலையை எட்டக் கடினமாக உழைத்துள்ளார். கடின உழைப்பிற்கு ஏற்றவாறே பலன் கிடைக்கும் என்பது இவரது திடமான நம்பிக்கை.
வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்கள் பெறுவது, விற்பனையாளர்களிடம் ஆர்டர் செய்வது, ஆர்டர்களை முறையாக ட்ராக் செய்வது, மறு விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, கணக்குகளை நிர்வகிப்பது என பம்பரமாகச் சுழல்கிறார் ஆனந்தி.
குழந்தை வளர்ப்பு, குழந்தையின் படிப்பு, உணவு, உறக்கம் என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் எத்தனையோ தியாகங்கள் செய்த பின்னரே வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் எட்டப்பட்டதாக விவரிக்கிறார்.
“என் கணவர் எனக்கு பக்கபலமா இருக்காரு. குழந்தையை பார்த்துக்கறதோட பிசினஸ்லயும் ரொம்ப சப்போர்டிவா இருக்காரு,” என்று கூறி முடித்தார் ஆனந்தி.
கடின உழைப்புமும் ஆர்வமும் இருந்தால் வெற்றியை வசப்படுத்தமுடியும் என்று பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார். இவரது வளர்ச்சியைக் கண்டு இவரது உறவினர்கள், நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள் என பலரும் இந்த வணிகத்தில் களமிறங்கி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தொழில் தொடங்கும் அனைவருமே வெற்றியடைந்து, லாபம் ஈட்டி, உச்சத்தை எட்டி விடுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான சக்சஸ் ஃபார்முலாவைக் கண்டறிந்து அவற்றைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஆனந்தி போன்றோரே உதாரணம்.
ஃபேஸ்புக் பக்கம்: ASA Boutique
கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா