நாட்டு நாய்களை நீங்கள் தத்தெடுத்து வளர்க்க 5 காரணங்கள்!
வெளிநாட்டு நாய்களை விட நாட்டு நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது மிகவும் ஏற்றதாக இருக்கும்.
இந்தியாவுக்கு உரிய நாட்டு நாய்கள் நட்பானவை மற்றும் அன்பு மிக்கவை என்றாலும், வெளிநாட்டு நாய்கள் அளவுக்கு செல்லப்பிராணிகளாக அவை விரும்பி வளர்க்கப்படுவதில்லை. எனினும், நாட்டு நாய்கள் செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு ஏற்றவை என்பதற்கான முக்கியக் காரணங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் தெரு நாய்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இந்திய துணை கண்டத்திற்கு உரியவை என்பதால் இவற்றால் இங்குள்ள கடும் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியும். அதே நேரத்தில், செல்லப்பிராணி வர்த்தகத் துறை தார்மீகத்திற்கு விரோதமான முறையில் நாய்களை குட்டி போட வைத்து வளர்த்து, அதிக விலைக்கு விற்கிறது.
நாட்டு நாய்கள் நட்பானவை என்றாலும் தெருக்களில் திரிவதால், கொஞ்சம் மூர்கமாக இருப்பதோடு, அறிமுகம் இல்லாதவர்களை நோக்கிக் குலைக்கின்றன.
விலங்கு பாதுகாப்புச் சட்டம்
இந்நிலையில், அதிகரிக்கும் விழிப்புணர்வு காரணமாக பலரும் நாட்டு நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கத்துவங்கியுள்ளனர். வெளிநாட்டு கலப்பு நாய்கள் நம்நாட்டு பருவ நிலையில் பாதிக்கப்பட்டு, அவற்றின் ஆயுள் காலம் குறைகிறது.
குடியிருப்புகளில் வளர்க்கப்படும் பீகில்ஸ் மற்றும் பாசெட் போன்ற நாய்கள் உண்மையில் வேட்டை நாய்களாகும். அவற்றுக்கு செயல்பாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே நாய்களை வளர்க்கும் போது அவற்றின் இயல்பு, வாழ்வியல் மற்றும் பராமரிப்புக்கான பட்ஜெட்டை மனதில் கொள்ள வேண்டும்.
பரவலாக அலட்சியம் செய்யப்படும் நாய்கள் வளர்ப்பு நாய்களாக இருக்க மிகவும் ஏற்றவை என்பதற்கான காரணங்கள் இவை:
பருவநிலை
நாட்டு நாய்கள் இயற்கையாக பரிணாம முறையில் உருவாகி வளர்ந்தவை. இந்த மண்ணிற்கு உரியவை என்பதால் இங்குள்ள வெப்ப நிலையை சமாளிக்கக் கூடியவை. இந்தியச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை.
ஆரோக்கியம்
மற்ற நாய்களை விட நாட்டு நாய்கள் மிகவும் ஆரோக்கியமான்வை. அவற்றின் உயரம் 64 செமீ வரை இருக்கலாம் மற்றும் 12 முதல் 20 கிலோ வரை எடை கொண்டிருக்கலாம். இந்த நாய்கள் உடல் பருமன் கொள்வதில்லை. இவை வழக்கமான செயல்பாடுகள் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் வளர்கின்றன,
பயிற்சி
இவற்றை பயிற்சி அளிக்க அதிக செலவு ஆவதில்லை. இந்த நாய்களை வளர்ப்பதற்கான செலவும் குறைவு. அவற்றின் சருமத்தை பராமரிப்பதும் எளிதானது.
விழிப்பானவை
இவை தெருக்களிலேயே வாழ்ந்து பழகியதால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும்.
புதிய இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. எளிதாகப் பயிற்சி அளிக்கலாம். இவற்றை நன்றாகப் பழக்கி வைக்கலாம்.
அன்பானவை
இவை தங்கள் பிரதேசத்தை அறிந்தவை என்பதால் காவல் பணிக்க்கு மிகவும் ஏற்றவை. மேலும், இவற்றின் புத்திசாலித்தனம் மற்றும் நட்பான குணம், விசுவாசம் ஆகியவை குடும்பத்தினருக்கு நெருக்கமானவை.
ஆங்கிலத்தில்: விருந்தா கார்க் | தமிழில்: சைபர் சிம்மன்