‘லாபம் முக்கியமல்ல; மனித மதிப்புகளுக்கு மரியாதை’ - ‘முக்தி’ ஆப் உருவாக்கிய திருச்சி இளைஞர்!
குடும்ப மூத்தவர்களின் தனிமையை போக்கி அவர்களின் நிகழ்காலத்தை எதிர்கால தலைமுறைக்கான அழகான தருணங்களாக மாற்றித் தருகிறது திருச்சியைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் ஸ்ரீவத்சனின் முக்தி செயலி.
இந்தியாவின் வளர்ச்சி என்பது தொழில்முனைவர்களின் புதிய சாதனைகள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் புதிய சிந்தனைகள், அதிநவீன தொழில் திட்டங்களைச் சார்ந்து இருக்கிறது. முதல்தலைமுறை இளம் தொழில்முனைவர்களின் சிந்தனைத் திறன் ஸ்டார்ட் அப் யுகத்தில் வியக்க வைக்கும் புதிய தீர்வுகளைத் தருகிறது.
குழந்தைகள், பெரியவர்களுக்கென பல ஸ்டார்ட் அப்கள் குவிந்து கிடக்கும் நிலையில் முதியோர்களுக்கென அவர்களின் நலனையும் அடுத்த தலைமுறைக்கான பல நிதர்சன வாழ்க்கைக் கதைகளையும் பகிரும் தளத்தை உருவாக்கி இருக்கின்றனர் உயிர்மெய் இன்போடெக் இணை நிறுவனர்கள் ஸ்ரீவத்சன் மற்றும் லக்ஷனா பத்மநாபன்.
வாழ்க்கைக்கான முன் உதாரணங்களை வெளியில் தேடாமல் நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினரையே உந்துதலாக நாம் ஏன் கொள்வதில்லை. அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரியாததே நம் மூத்த குடிகளை நாமே போற்றாமல் மறந்ததற்கு முக்கிய தடையாக உள்ளது.
இந்தத் தடையை எப்படி போக்கலாம் என்கிற திருச்சி இளைஞரின் சிந்தனையில் உருவானதே 'முக்தி' செயலி. ஸ்டார்ட் அப் மற்றும் செயலி யுகத்தில் கேட்பதற்கே புதுமையாக இருக்கும் இந்த ஆப்-இன் செயல்பாடு குறித்து அதன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீவத்சன் யுவர் ஸ்டோரி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் படித்ததும் அங்கேயே தான். இளநிலை கணிப்பொறியியல் முடித்து விட்டு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். தொழிலில் மேன்மையடைய உயர்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து மார்க்கெட்டிங் & எச்ஆரில் எம்பிஏ படித்து முடித்தேன். உயர்படிப்பு முடித்துவிட்டு 2013ம் ஆண்டில் நிறுவனங்களுக்கு சிசிடிவி பொருத்தி அதனை ஜிபிஎஸ் கருவியோடு இணைக்கும் பணியை விநியோகிஸ்த உரிமை பெற்று செய்து வந்தேன்.
”விநியோகிஸ்தர் என்பதால் அதில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. இதனால் அதனை விட்டுவிட்டு-வில் சீனியர் விற்பனை மேலாளராக பணியில் சேர்ந்தேன். 2014 முதல் வெவ்வேறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்களில் பணியாற்றி அனுபவம் பெற்றேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில் சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என்கிற எண்ணம் தோன்றியது,” என்கிறார் ஸ்ரீவத்சன்.
ஊக்கம் தந்தவரின் மரணம் ஏற்படுத்திய தாக்கம்
2017ல் என்னுடைய மாமா ஒருவர் திடீரென இதய அடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். மிகப்பெரிய பதவியில் இருந்தார் நல்ல பெயரும் புகழும் பெற்றிருந்தார், ஆனால், துரதிஷ்டவசமாக அவருடைய சொந்த முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் இன்சூரன்ஸ் விவரங்கள் எதையுமே அவருடைய மனைவியிடம் கூட சொல்லவில்லை. இதனால் அவரின் நிதி நிலைமை குறித்த எந்த விவரங்களும் அவருடைய குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவரே இப்படி இறந்துவிட்டார் என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. என்னுடைய மாமா என்பதைத் தாண்டி எனக்கான உந்துதலாக அவர் இருந்தார், நான் முதலில் தொடங்கிய தொழிலுக்கு பெற்றோரே சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவர் தான் முதலீடு கொடுத்து தொழிலைச் செய்யுமாறு உத்வேகம் தந்தார். திடீரென அவர் இறந்து போனது ஒரு பெரும் அதிர்வை என்னுள் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், 2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நம்மைச் சுற்றி இருந்த பலரும் திடீரென நம்மை விட்டு பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய ஸ்டார்ட் அப் திட்டத்தை ஏன் செயல்முறைக்கு கொண்டு வரக்கூடாது என்று அதனை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினேன் என்று சொல்கிறார் இந்த முதல் தலைமுறை தொழில்முனைவர் ஸ்ரீவத்சன்.
2021 ஜூலையில்
என்கிற இணையதளத்தை பதிவு செய்து இதனை ஒரு post missed messenger சேவையாகத் தொடங்கினேன். அதாவது, ஒருவர் பதிவு செய்யும் செய்தி அவர் இறந்த பின்னர் குடும்பத்தினரை சென்றடையும் வகையிலான திட்டத்தை அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் செயலியாக வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தேன்.இன்சூரன்ஸ் மற்றும் வங்கித் துறையில் எவ்வளவு பணம் கேட்பாரற்று இருக்கிறது என்று 2021ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், அதற்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாக பதில் கிடைத்தது. பெரும்பாலானவர்கள் தங்களின் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாததாலேயே அவர்களின் இறப்புக்குப் பின்னர் கூட சேமித்த தொகையானது அவர்களுடைய குடும்பத்தினரை சென்றடைவதில்லை. இதோடு நானும் சொந்த வாழ்வில் இதே அனுபவத்தை பெற்றிருந்ததால் இந்தச் செயலி மூலம் சில குடும்பங்களாவது பயனடையலாம் என்கிற எண்ணத்திற்கு உயிரோட்டம் கொடுத்தேன், என்கிறார்.
எதிர்பார்த்த பயனர்கள் இல்லை
பிரத்யேகமாக மூத்த குடிமக்களுக்காக ஆன்ட்ராய்டு போன் பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “முக்தி” செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் விதத்தில் அறிமுகம் செய்தேன். ஒருவர் பதிவு செய்யும் செய்தி அவர் மறைவுக்குப் பின்னர் அவர் சொல்லும் குடும்ப உறுப்பினரிடம் சென்றடையும் என்பதே முதன்மை வசதியாக இந்தச் செயலியில் வழங்கப்பட்டது.
2022 மார்ச் மாதம் வரையில் எந்த முன்னேற்றதும் இல்லை எனக்குத் தெரிந்த 25 பேரைத் தவிர வேறு யாரையும் செயலி சென்றடையவில்லை. ஏன் இந்த பின்னடைவு என்று மீண்டும் ஒரு ஆய்வு செய்தேன், அதற்கே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.
“முதலில் வழங்கிக் கொண்டிருந்த அந்த வசதி மட்டுமே போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கூடுதலாக புகைப்படங்களை பகிரும் தளம் ஒன்றையும், தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்கள் இன்சூரன்ஸ், உயில் சார்ந்து தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேள்விகளாக Chatboxல் கேட்டால் அதற்கான தீர்வை நிபுணர்களிடம் இருந்து நாம் கேட்டு பதிலளிக்கும் ஒரு தளமாக வடிவமைத்திருந்தோம். துரதிஷ்டவசமாக இந்த வடிவமைப்புகள் எதுவுமே போதுமான வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரவில்லை. விளம்பரம் செய்த அளவிற்கான பதிவிறக்கர்களைப் பெறவில்லையே என்ற நிலையே மீண்டும் இருந்தது.”
எனினும், சோர்ந்து போகவில்லை என்னதான் குறைபாடு என்று மறுபடியும் ஒரு ஆராய்ச்சியை செய்யத் தயாரானேன். விளம்பரத்திற்காக அதிக தொகையை செலவிட்டு பின்னர் கவலைப்படாமல் குறிப்பிட்ட இடைவேளையில் சுதாரித்துக் கொண்டதால் மார்க்கெட்டிங்கிற்கு வீண் செலவு செய்யாமல் மறுஆய்வின் போது எங்களின் டார்கெட் ஆடியன்ஸான மூத்த குடிமக்களிடம் கருத்துகளை மட்டும் கேட்காமல் பலரை நானே நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவை என்ன என்பதைக் கேட்டேன்.
ஆன்லைன் மீட்டிங், முதியோர் கூட்டங்களில் நேரில் பங்கேற்று கருத்துகளை கேட்டல் என சுமார் 80 பேரிடம் நானே நேரடியாக கருத்துகளைப் பெற்றேன். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் சரியானதாகவே இருந்தது. நானே இல்லாத போது அவர்களுக்கு நான் என்ன செய்தி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை என்று ஒரு சாராரும், என்ன விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய மனதிற்கு தென்படவில்லை என்று ஒரு சாராரும் கூறி இருந்தனர்.
"இவர்கள் எல்லோருக்குமே என்னுடைய செயலி பிடித்திருக்கிறது. ஆனால், அதில் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்குப் புரியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் இதன் பயன்பாட்டை ஏற்றுக் கொள்ள என்ன மாற்றம் செய்யலாம் என்ற அடிப்படையில் செயல்படத் தொடங்கினேன்."
வயதானவர்களின் வாழ்க்கைக் கதை
தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது, ஒவ்வொருவரும் வாழ்வில் சாதித்த கடந்து வந்த கஷ்டங்கள் என பல நிகழ்வுகள் இருக்கிறது. ஒருவர் வாழ்க்கைக்கான முன்உதாரணமாக பிரபலமானவர்களைப் பின்பற்றும் நாம் ஏன் நம் குடும்பத்திலேயே இருப்பவர் அதை விட அதிகம் படைத்திருக்கும் சாதனையையும் கடின உழைப்பையும் பொருட்படுத்துவதில்லை என்ற எண்ணம் தோன்றியது.
ஒரு கூட்டுக்குடும்ப கட்டமைப்பை உடையாமல் வைத்துக் கொள்வதே ஒரு மிகப்பெரிய சாதனை தான், அப்படி இருக்கையில் அவர்களின் வாழ்க்கைக் கதையை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் கொண்டு செல்வதில்லை.
"அவர்களுக்கும் அதனை எப்படி பகிர்வது என்று தெரியவில்லை நமக்கும் கேட்க நேரமில்லை. இந்த இடைவேளையை எப்படி சரிசெய்யலாம் என்று யோசித்து எங்களுடைய முக்தி தளத்தை வாழ்க்கைக்கதைகளைப் பகிரும் தளமாக மாற்றினோம்," என்று முக்தி பரிணாம வளர்ச்சி பெற்ற விவரத்தை பகிர்கிறார் ஸ்ரீவத்சன்.
புதுப்பொலிவுடன் மறுஅறிமுகம்
லோகோ, இணையதள புத்தாக்கத்துடன் செயலியின் நிறத்தையும் மாற்றினேன். அதனுடன் செயலியில் கூட ஒரு சரியான வடிவமைப்பு இல்லாமல் இருந்ததால் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு பெட்டகம் போல கடந்த கால நினைவுகளை டிஜிட்டல் டைரியில் பகிர்ந்து கொள்வதற்கு My Box என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தினேன், அதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பிப் பார்க்கலாம்.
நிகழ்காலத்தை இணைக்கும் விதமாக ஒத்த கருத்துடையவர்கள் விவாதிக்கும் ஒரு இடம் வேண்டும் என்பதற்காக Chat box என்கிற ஒரு பிரிவை உருவாக்கினேன். அவர்கள் மறைவுக்குப் பின்னர் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை பதியும் இடமாக Black box என்கிற ஒரு பிரிவை ஏற்படுத்தினேன். ஒருவர் மனதில் இருக்கும் விஷயத்தை பதிவு செய்து வைத்துக் கொண்டு அவரின் இறப்புக்குப் பின்னர் அவர் சொல்லும் நபரிடம் அந்தத் தகவலானது பகிர்ந்து கொள்ளப்படும்.
இத்தனை கூடுதல் அம்சங்களுடன் 2023ம் ஆண்டு மே 28ம் தேதி முக்தி ரீபிராண்ட் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களில் சுமார் 200 செயலி பதிவிறக்கங்களையும் 80க்கும் மேற்பட்ட ஆக்டிவ் பயனாளர்களையும் பெற்றுள்ளேன்.
முக்தி செயலியின் பயனாளர்கள் வயதில் மூத்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்பதால் அவர்கள் அந்த அளவிற்கு டெக்னாலஜி அதிகம் பயன்படுத்துபவர்களாக இல்லை. எனவே, அவர்களின் இடர்பாடுகளை களையும் விதமாக செயலியை பதிவிறக்கம் செய்த உடனேயே வரவேற்று தொலைபேசியில் அழைத்து அவர்களிடம் பேசுவது, அவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் நேரடியாக பதில் பெறும் வகையிலான ஆன்லைன் ஆலோசனைக் கூட்டங்களை மாதமொரு முறை நடத்துவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆரோக்கியம், இன்சூரன்ஸ் சார்ந்த சந்தேகங்கள், வங்கிச் சேவைகளில் மூத்த வயதினருக்கு இருக்கும் சலுகைகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு நிபுணர்கள் விளக்கும் வகையில் ஆன்லைன் கூட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
சரிவில் இருந்து வளர்ச்சி
மாதச்சந்தா என்கிற முறையில் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Chat box, My box, Black boxல் தகவல்களை பதிவு செய்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. அதுவே பிளாக் பாக்ஸில் ஒரு வீடியோ அல்லது புகைப்படம் பகிர விரும்பினால் ஆண்டுக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு value added serviceஆக ஆன்லைன் கூட்டங்கள், பயிலரங்கங்களில் பங்கேற்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
செயலியை என்னுடைய திட்டமிடலுடன் செயல்பாட்டுக் கொண்டு வர சொந்த சேமிப்பு பணம் மட்டும் போதாது என்பதால் வென்ச்சர் கேபிடல் அணுகலாம் என்று முடிவு செய்தோம், ஆனால் அதுவும் கைகூடவில்லை. VC, நிகழ்வுகள், போட்டிகள் என எதிலுமே டாப் லிஸ்டில் முக்தி வரவில்லை. சில விருதுகள், பின்னர் சுரேஷ் சம்பந்தனின் ஐடியா பட்டறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ள ஸ்டார்ட் அப் வரிசையில் முக்தி இடம்பெற்றிருந்தது.
இந்தியா முழுவதிலும் இருந்து இப்போது முக்திக்கான பயனர்கள் உள்ளனர். அடுத்தகட்டமாக மெட்ரோ சிட்டிகளில் இதன் பயன்பாட்டை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். முக்திக்கான எண்ணம் தோன்றியதில் இருந்தே சொந்த முதலீட்டிலேயே தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் செயலி குறித்த எண்ணத்தை வெளிப்படுத்திய போது என்னுடைய மனைவி அவரிடம் இருந்த சேமிப்புகள் முதற்கொண்டு அனைத்தையும் கொடுத்து எனக்கு பக்கபலமாக இருந்தார். அவர் முக்தியின் இணை நிறுவனராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். செயலியின் செயல்பாடுகளை அவர் மேற்பார்வை செய்கிறார், மார்க்கெட்டிங் தொடர்பானவற்றில் என்னுடைய பங்களிப்பு உள்ளது என்று சொல்கிறார் ஸ்ரீவத்சன்.
சுமார் 10 லட்சம் ரூபாய் சொந்த முதலீட்டிலேயே முக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2021 முதல் பகுதி நேரமாக மட்டுமே முக்திக்கான பங்களிப்பை செய்து கொண்டிருந்தேன், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதனை முழுநேரப் பணியாக எடுத்துச் செய்யத் தொடங்கி இருக்கிறேன். வென்ச்சர் கேபிட்டல் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்பதை ஒரு சவாலாக ஏற்று செயல்படத் தொடங்கி இருக்கிறேன்.
மூத்தவர்களுக்கான ஆன்லைன் தளம்
முக்தி வாழ்க்கைக் கதையை பகிரும் தளமாக மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் மூத்தகுடிமக்களின் ஆன்லைன் communityயாக செயல்பட வேண்டும் என்பதே இலக்கு.
“அண்மையில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று 100ல் 50 மூத்த குடிமக்கள் தனிமையை உணர்வதாகக் கூறுகிறது. இவர்களில் 30 பேருக்கு கவுன்சிலிங் அல்லது ஏதாவது ஒரு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் தனிமையை உணரும் ஒரே வயதுடையவர்களை இணைக்கும் ஒரு தளமாக முக்தி இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்காக உள்ளது. பயனர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கும் வகையில் டெக்னாலஜி லாக் செய்யப்பட்டுள்ளது. பயனர் குறிப்பிடும் nomineeக்கு மட்டுமே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்காலத்தில் உயிரிழந்தவர்களுடன் நேரடியாக பேசுவதைப் போன்ற உணர்வை virtual reality மூலம் அளிக்கும் வசதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் எடுக்கும் செல்பிகள், வீடியோக்கள் அனைத்தும் My Box-இல் சேமித்து வைத்தால் அடுத்த தலைமுறைக்கு ஒரு வரலாற்று பொக்கிஷமாக இருக்கும்.
எங்களுடைய தலைமுறையில் யாருமே தொழில்முனைவராக இல்லை. எனினும், எனக்கு சிறு வயது முதலே அது ஒரு ஆசையாக இருந்தது. நம்மால் முடிந்தது ஒருவருக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு தொழில்முனைவைத் தேர்ந்தெடுத்தேன்.
“நிச்சயமாக முக்தி செயலி வெற்றியை தேடித் தரும் என்பதில் 200 சதவிகிதம் உறுதியுடன் இருக்கிறேன். லாபம் என்பதைத் தாண்டி என்னுடைய செயலி என்ன மதிப்பை கொடுக்கிறது என்பதே என்னுடைய மைய நோக்கம். குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்களுக்கு நம்மால் முடிந்த மதிப்புமிக்க விஷயத்தை எப்படி கொடுக்க முடியும் என்பதை இந்தச் செயலி நிவர்த்தி செய்கிறது என்பதிலேயே என்னுடைய செயலியின் வெற்றி இருக்கிறது,” என்று மகிழ்கிறார் ஸ்ரீவத்சன்.
‘முதியோர்களின் உற்ற நண்பன்’ - ரத்தன் டாடா முதலீட்டில் தொடங்கப்பட்ட Goodfellows