தண்ணி கேனு, கூழாங்கல்லு, வெட்டிவேர்: மனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு ஏசி
உடல்நலம் குறைந்து குணமடைந்துவந்த மனைவிக்காக தண்ணீர் கேன் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காது மலிவு விலையில் ‘ஈசி-ஏசி’ வடிவமைத்துள்ளார் மெக்கானிக் அக்தர் அலி.
’தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ - என்ற பழமொழியை கூறியே பேசத்தொடங்கிய அக்தர் அலி, அவரது உடல்நலக் குறைவுற்ற மனைவியின் ஏ.சி தேவையை பூர்த்தி செய்யவே, இந்த ஈசி- ஏசியை உருவாக்கியுள்ளார்.
திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் பஞ்சர் கடை நடத்திவருகிறார். ஆனால், அவர் மெக்கானிக் மட்டுமில்லை. மக்களின் பல பிரச்னைகளுக்கு எளிய தீர்வினை கண்டுபிடித்து வரும் கண்டுபிடிப்பாளர், தேடல்விரும்பி. ஆம், ஈசி-ஏசிக்கு முன்பாகவே,
பஞ்சராகினாலும் டையரை பதம் பார்க்காத ‘ஆன்ட்டி பஞ்சர் பவுடர்’ என்ற பவுடர், ஒரு வண்டி டயரிலிருந்து மற்றொரு வண்டி டயருக்கு காற்றை பரிமாற்றும் சாதனம், இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்கும் வகையில் வண்டியில் பொருத்தும் ஸ்விட்ச் என ஏழு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.
அதில், ஆறு படைப்புகள் குஜராத் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை நடத்தும் 11வது பைனியல் விருது போட்டிக்குள் நுழைந்துள்ளது. அக்கண்டுபிடிப்புகளுள் ஒன்றே ‘ஈசி-ஏசி’. அடிக்கும் 37டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 10டிகிரி செல்சியஸை குறைக்கிறது இந்த இயற்கை ஏசி.
“மிடில் கிளாஸ் ஃபேமிலி. தினமும் உழைத்தால் தான் மறுநாள் உணவு உண்ணமுடியும். அந்த சமயத்தில் மனைவி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது அப்புறம் அவரால், வெக்கையை தாங்க முடியவில்லை. ஏ.சி வாங்கணும்னு நிர்பந்தம் ஏற்பட்டது. இன்ஸ்டால்மென்டில் கூட ஏசி வாங்கிரலாம். ஆனா, அதுக்கு வீட்டுக்காரரிடம் கேக்கணும், கரண்ட் பில்லு எகிறும், முக்கியமா அதை பராமரிக்கனும். அதனால், நானே வெப்பத்தை தணித்து ரூமை கூலிங் ஆக்கும் கருவியை உருவாக்கலாம் என்ற முயற்சியில் உருவாகியதே இந்த ஈசி-ஏசி,” என்கிறார் அக்தர் அலி.
அக்தரின் இயந்திரம் தண்ணீர் கேனால் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கேனின் மேற்பகுதிக்குள் மூங்கில் கூடை பொருந்தும் அளவிற்கு மேற்பகுதி வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் கேனில் 12லிட்டர் தண்ணீர் நிரப்பி அதனுள் கூழாங்கற்கள், செங்கலும் வைத்துள்ளார். மேற்பகுதியில் உள்ள மூங்கில் கூடையில் வெட்டிவேர் சிறிதளவு நிரப்பி வைக்கபடுகிறது. கீழுள்ள கேனில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இம்மோட்டார் இயங்குகையில், மோட்டாரில் பொருத்தப்பட்டு உள்ள குழாயின் வழியாக கேனில் உள்ள நீரானது மேலேயுள்ள மூங்கில் கூடைக்குச் சென்று, அதிலுள்ள வெட்டி வேரை நனைத்து மீண்டும் கேனுக்குளே ஊற்றுகிறது. விளைவாக வெட்டிவேர் வாசத்துடன் குளிர்ந்த காற்று அறையை நிரப்புகிறது.
தொடக்கத்தில் அவருடைய தேவைக்காக ஒரு இயற்கை ஏசியை உருவாக்கியவர், இப்போது மக்களின் தேவையினையும் பூர்த்தி செய்ய ‘ஈசி-ஏசி’எனும் பெயரில் விற்பனைசெய்து வருகிறார். இதுவரை உள்ளூர், வெளியூர் என 100 பேருக்கு இந்த ஏசியை தயாரித்து கொடுத்துள்ளார். ஒரு தண்ணீர் கேன் கொண்ட ஏசி ரூ.2,500. இரண்டு கேன்கள் எனில் ரூ.3,500.
“சேலத்தில் இருந்து தண்ணீர் கேன்கள் வருகிறது. மூங்கில் கூடைகளுக்கு முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து செய்யச் சொல்லணும். இதில் டிரான்ஸ்போர்ட் செலவு தான் அதிகம். அறையில் பொருத்தும் போது, ஃபேன் காத்து அதில் அதிகம் விழுமாறு ஏற்பாடு செய்து வைக்கணும். மத்தப்படி, பிரச்னைனு ஏதுவும் வராது. இதுவரை 100 ஏசி செஞ்சுக் கொடுத்திருக்கேன்.
யாராச்சும் போன் பண்ணி, எப்படி செய்யுறது, என்ன குறைபாடுனு கேட்பாங்க. அவங்களுக்கும் சொல்லுவேன். மக்களுக்கு பயன்பாட இருக்கிறதுல சந்தோஷம்,” என்கிறார் அக்தர்.
தொழில் ரீதியாக மெக்கானிக்காக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் புத்தகங்களை படித்து, ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் புதுபுது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் அவர் ஸ்கூல் டிராப் அவுட் ஸ்டூடென்ட்.
“ஒன்பது வயதிலே அப்பா இறந்துட்டாங்க. அப்போதிருந்தே அம்மாவுக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை செய்து வந்தேன். கிடைக்கும் வேலையெல்லாம் செய்தேன். கடைசியா 1980ல் இந்த பஞ்சர் கடையை வைத்தேன்.” என்கிறார் அக்தர் அலி.
அடுத்து மலிவு விலையில் குடிநீரை சுத்திகரிக்கும் மிஷினை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள அக்தர் அலிக்கு நம் பாராட்டுகள், ஆல் தி பெஸ்டு!