கடைசி நொடியிலும் கணவன் உயிரைக் காப்பாற்றப் போராடிய மனைவி: கலங்க வைக்கும் காட்சிகள்!
உயிர் சுவாசம் கொடுத்தும் பலனில்லாமல் போன சோகம்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சமீபத்தில் இதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்த கணவனுக்கு உயிரிழக்கும் முன் மனைவி உயிர் சுவாசம் கொடுத்து காப்பாற்ற நிகழ்ந்த சம்பவம் நெஞ்சை உருகவைக்கும் விதமாக அமைந்தது.
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பிரிவு 7 இல் வசிபவர் ரேணு சிங்கால். இவரின் கணவர் ரவி சிங்கால் (47) கொரோனா காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி (எஸ்.என்.எம்.சி) மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார் ரேணு. தனது இல்லத்திலிருந்து ரேணு சிங்கால் ஒரு ஆட்டோ எடுத்து மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
ஆனால், வரும் வழியிலேயே அவரின் கணவர் மூச்சுத் திணறல் காரணமாக தவிக்க, வாய் மூலம் புத்துயிர் சுவாசம் கொடுக்க முயன்றார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு வெளியே ஒரு ஆட்டோவுக்குள் ரவி தனது மனைவி ரேணு மடியில் இறந்தார். கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாமல் ரேணு அந்த இடத்திலே கதறி அழுதிருக்கிறார்.
ரேணு கதறும் காட்சிகளும், கணவனுக்கு உயிர் சுவாசம் கொடுக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
உயிர் போகும் இறுதி நிமிடத்தில் தனது கணவரை எப்படியாக பிழைக்க வைக்க வேண்டும் என்று கடைசி நிமிடம் வரை ரேணு போராடிய காட்சிகள் நெட்டிசன்களை பரிதாப பட வைத்துள்ளது.
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக நகரங்களில் பெருவாரியாக நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது. மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக தற்போது பல நாடுகள், பல தனியார் நிறுவன முதலாளிகள், பல்வேறு பொதுமக்கள் உதவி வருகின்றனர். அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.