2021: கனவுகளைத் துரத்தி தொழில் முனைவர் ஆகிய பெண்களின் கதை தொகுப்பு!
2021ம் ஆண்டில், கனவுகளுக்காக வேலையைத் துறந்து தொழில்முனைவோரான பெண்களைப் பற்றி யுவர்ஸ்டோரியில் வெளியான சக்சஸ் ஸ்டோரிகளின் தொகுப்பு.
காலத்தின் சூழ்நிலையால், மற்றவர்களின் நிர்ப்பந்தத்தால் ஏதோ ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து, அது சம்பந்தமான வேலையில் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர், ஒரு கட்டத்தில் துணிந்து தங்களது கனவுகளைத் தேடிப் போய் வெற்றியைக் கண்டடைந்திருக்கிறார்கள்.
அதிலும், குறிப்பாக பெண்களுக்கு இப்படியான வாய்ப்பு அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. ஆனாலும் போராடி இதுதான் தனக்கான துறை என, தன் கனவுத் துறையில் கால் பதித்து, அதில் வெற்றி எனும் தடம் பதித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட 'சாதனை அரசிகள்' பற்றி 2021ம் ஆண்டு தமிழ் யுவர்ஸ்டோரியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
1. மருத்துவத்தைக் கைவிட்டு தொழில்முனைவோரான சுதா!
கனவுகளுக்கு படிப்போ அல்லது சூழ்நிலையோ என்றுமே தடையாக முடியாது என நிரூபித்திருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுதா. மருத்துவம் படித்து முடித்து மருத்துவராக பணி புரிந்த இவர், தற்போது பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் கிருமிநாசினி ஜவுளிகளை தயாரிக்கும் சுவாஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கிருமிநாசினி (Anti microbial) படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், குளியல் மற்றும் சமையலறைத் துண்டுகள் என காலத்திற்கேற்ற, புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது சுதாவின் சுவாஸ். கொரோனா உர்ரடங்கு சமயத்தில் உதித்த புதிய யோசனையால், கிருமிநாசினி ஜவுளிகளைத் தயாரித்து அதனை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார் சுதா.
2. லாக்டவுனில் கற்ற கலை
லாக்டவுனில் பொழுதுபோக்கிற்காகக் கற்றுக் கொண்ட பேக்கிங் கலையையே, தனது புதிய தொழிலாக்கி மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார் முன்னாள் ஐடி ஊழியரான ஸ்டெபி. மதுரையைச் சேர்ந்தவரான இவர், எம்பிஏ பட்டதாரி ஆவார்.
கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக 'Fuffy bakes' என்ற பெயரில் தனது பேக்கரி தொழிலை ஆரம்பித்திருக்கிறார் ஸ்டெபி. வெறும் ரூ.2000 முதலீட்டில் வீட்டிலேயே ஆரம்பித்த இந்தத் தொழில் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. கேக்கில் ஒரு பகுதியில் பெரியவர்களுக்கு ஏற்றாற் போன்று ஸ்வீட் குறைவாக கஸ்டமைஸ் செய்து தருவது இவரது சிறப்பு. இதனாலேயே நிறைய வாடிக்கையாளர்கள் அவருக்கு கிடைத்து வருகின்றனர்.
”100 கேக்குகள் சொதப்பி குப்பையில் போட்டுள்ளேன். ஆனால், ஆறே மாதத்தில் 1000 கேக்குகளையும் விற்பனை செய்துள்ளேன்” என தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார் ஸ்டெபி.
Read Also: லாக்டவுனில் எடுத்த பயிற்சி; முயற்சி: கேக் தயாரிப்பில் மாதம் ரூ.50,000 ஈட்டும் ஐடி ஊழியர்!
3. ‘மாம்’களுக்கு உதவும் ஆப் உருவாக்கிய பத்மினி ஜானகி!
கர்ப்பிணிப் பெண்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் பேருததவியாக உருவாக்கப்பட்டது தான் பத்மினி ஜானகி-யின் 'Mind and Mom' ஆப். 2021 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப், மூலம் இதுவரை சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர்.
தனது கர்ப்பகாலத்தில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வைத்தும், மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளார் பத்மினி. பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சொந்த சேமிப்பு பணத்தை முதலீடாக போட்டு இந்தத் தொழிலில் அவர் இறங்கியுள்ளார்.
அதோடு பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றையும் தொடங்கி, அதனையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஜானகி.
Read Also: 6 மாதத்தில் 25,000 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்: ‘மாம்’களுக்கு உதவும் ஆப் உருவாக்கிய பத்மினி ஜானகி!
4. பல துறைகளில் ஜொலிக்கும் ஜொலிக்கும் இளம் தொழில்முனைவர்!
ரத்தன் டாடா, அப்துல் கலாம், இன்போசிஸ் நாராயண மூர்த்தி, ஆதி கோத்ரேஜ், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற எல்லோரின் பாராட்டையும் பெற்ற பெண், உலகப் புகழ் வாய்ந்த ஹார்வார்ட் பிசினஸ் ஸ்கூல் மாணவி, தொழில் ஞானம், படிப்பு, கலை, நடனம், எழுத்து, சினிமா இயக்கம்- இப்படி பல துறைகளில் நேர்த்தி கொண்ட திறமை, இவை அனைத்தையும் ஒருங்கேப் பெற்று அத்தனையையும் அழகாய் கொண்டு சென்று விருதுகளின் நாயகியாக வலம் வருகிறார் இளம் தொழில்முனைவோரான கவிப்ரியா.
ஹார்வேர்டு பல்கலைகழக மாணவியான இவர், சென்னையில், ‘Adding Smiles' என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூன்று பேர்களுடன் ஆரம்பிக்கப் பட்ட அதில், இன்று 97 ஊழியர்கள், 14க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
Read Also: சமூகம், தொழில், கலைத் துறை என ஜொலிக்கும் இளம் தொழில்முனைவர் கவிப்ரியா ஆனந்தன்!
5. ஆரோக்கியத்தை மீட்க கார்ப்பரேட்டை கைவிட்ட கிருத்திகா!
பொறியியல் பட்டதாரியான கிருத்திகா, ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். தான் கர்ப்பமான பொழுது குழந்தையின் எதிர்காலம், ஆரோக்கியம் குறித்த அவரது சிந்தனை தான், இன்று அவரை ஒரு தொழிலதிபர் ஆக்கி இருக்கிறது.
ஏற்கெனவே தொழில்முனைவில் ஆர்வம் இருந்த கிருத்திகா, வேலையை விட்டுவிட்டு பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு தனது ஐடி வேலையைத் துறந்து, ’ஆர்கானிக் பாசிடிவ்’ என்ற கம்பெனியைத் தொடங்கி பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், ஆர்கானிக் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கினார்.
ஓராண்டு தொழில் முயற்சியிலேயே மாத விற்பனை அளவு 5 லட்ச ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பதாக கூறுகிறார் கிருத்திகா.
Read Also: ஆரோக்கியத்தை மீட்க கார்ப்பரேட்டை கைவிட்ட கிருத்திகா- ஆர்கானிக் பொருட்களில் மாதம் 5 லட்சம் வர்த்தகம்!
6. இன்ஸ்டாவில் கலக்கும் நந்தினி!
கணவருக்கு நேர்ந்த விபத்து, தந்தையின் இழப்பு என வாழ்வில் நேர்ந்த கஷ்டங்களுக்கு மத்தியில் 'கஸ்டமைஸ்ட் ரெடிமேட் சாரீஸ்' என்ற பெயரில் புடவைகளுக்கு அப்கிரேட் வெர்ஷன் அளித்து பேஷன் துறையில் தனக்கென்ற அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இளம் தொழில்முனைவோரான நந்தினி.
பெற்றோரின் கட்டாயத்தால் பொறியியல் படிப்பை முடித்த நந்தினி, திருமணத்திற்குப் பிறகு தனது விருப்பமான துறையான பேஷன் டிசைனிங் கோர்ஸை படித்துள்ளார். தான் ஆசைப்பட்ட துறை என்பதால், படித்து முடித்த கையோடு, 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் 'youniche deckup' என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, இணையவழி தொழிலைத் தொடங்கினார்.
மாதம் சுமார் 25 புடவைகளை கஸ்டமைஸ் செய்து தந்து, அதன்மூலம் ரூ.35,000 முதல் 50,000 வரை சம்பாதித்து வருகிறார் நந்தினி.
Read Also: படித்தது பி.இ., பிடித்தது பேஷன் டிசைனிங்: ஆன்லைனில் தொழில் தொடங்கி இன்ஸ்டாவில் கலக்கும் நந்தினி!
7. பொழுதுபோக்கிற்காக கற்றது தொழில்முனைவோராக்கியது!
ஊரடங்கு சமயத்தில் வீட்டில் ஹாயாக செல்போன் மற்றும் டிவி என பொழுதைப் போக்காமல், டெரகோட்டாவில் அலங்கார நகைகள் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் பேஷன் டிசைனிங் கல்லூரி மாணவியான ஸ்மிருதி.
ஒன்பதாம் வகுப்பில் பொழுதுபோக்காக, தான் கற்றுக் கொண்ட கலையை, ஊரடங்கு சமயத்தில் கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தி தனது தொழிலாக மாற்றி ஸ்மிருதி வெற்றி கண்டிருக்கிறார். சமூகவலைதளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தான் ஸ்மிருதியின் வெற்றி சூத்திரம்.
“டெரகோட்டாவை நகைகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்கி விடக்கூடாது என யோசித்த போது தான், ஃபிரிட்ஜ் மேக்னட் செய்யும் யோசனை தோன்றியது. பிறந்தநாள், திருமணம் போன்றவற்றிற்கு அன்பளிப்பாக தர பலர் இதனை ஆர்டர் செய்கிறார்கள். வருமானத்தோடு தன்னம்பிக்கையும் தந்துள்ளது இந்தத் தொழி,ல்” என்கிறார் ஸ்மிருதி.
Read Also: லாக்டவுனில் ரூ.4.5 லட்சம் வருமானம்: டெரகோட்டா நகைத் தொழிலில் கலக்கும் கோவை மாணவி!
8. சவாலான பயோடெக் துறையில் சாதிக்கும் பெண் தொழில்முனைவர்!
பயோடெக்னாலஜியில் புதுமையான முயற்சி மூலம் தொழில்முனைவராக உயர்ந்து நிற்கிறார் டாக்டர். மேனகா மகேந்திரன்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, M.Sc மைக்ரோபயாலஜி அதனைத் தொடர்ந்து M.Phil மைக்ரோ பயோ டெக்னாலஜி முடித்து விட்டு சென்னையில் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியவர் மேனகா. கல்லூரி காலம் தொட்டே Product development பற்றிய எண்ணம் கொண்டவரான அவர், விடாமுயற்சி மற்றும் புத்திக் கூர்மையான செயல்பாட்டினாலும் வெற்றிகரமாக 8வது ஆண்டில் சிறந்த பெண் தொழில்முனைவராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
Read Also: சவாலான பயோடெக் துறையில் சாதிக்கும் பெண் தொழில்முனைவர் டாக்டர். மேனகா மகேந்திரன்!
9. தாய்பால் சோப், கரிசிலாங்கண்ணி காஜல்- நலங்கு மாவு பவுடர்!
2018ம் ஆண்டு 1000 ரூபாய் முதலீட்டில் நலங்குமாவு சோப், நலங்குமாவு பவுடர் என சொற்பமான தயாரிப்புகளுடன் 'லக்சாதிகா ஹெர்பல்ஸ்' எனும் பெயரில் வீட்டிலே தொழிலைத் தொடங்கிய லில்லி, 100க்கும் அதிகமான புரோடெக்டுகளுடன் காஸ்மெட்டிக் தயாரிப்பு தொழிலில், ஆண்டுக்கு ரூ1,00,000 வருவாய் ஈட்டுகிறார்.
எம்பிஏ முடித்து ஹெச் ஆராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தவர், திருமணம், குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு வேலையைத் தொடர இயலவில்லை. குழந்தைக்காக தயாரித்த நலங்குமாவிற்கு அக்கம்பக்கத்தாரிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, முறைப்படி சோப் தயாரிக்க கற்று அதனையே தன் தொழிலாக விரிவு படுத்தி வெற்றி கண்டுள்ளார் லில்லி.
ஃபேஸ்புக் மார்கெட்டிங், கல்லுாரிகளில் ஸ்டால் என தனது தொடர் முயற்சிகளால், வாரத்திற்கு 50 ஆர்டகள் பெற்று, மாதத்திற்கு ரூ.1,00,000 வரை லில்லி வருமானம் ஈட்டி வருகிறார்.
Read Also: தாய்பால் சோப், கரிசிலாங்கண்ணி காஜல்- நலங்கு மாவு பவுடர்: மாதம் 1 லட்சம் ஈட்டும் லில்லி!
10. தொழில்முனைவோராக மாறிய மாடல்!
மிஸ். சென்னையாக பட்டம் சூடியவர், சினிமா நடிகையாக திறமையைக் காட்டியவர், உதவி இயக்குநராக இருந்தவர் என ஊடகத்துறையில் பன்முகத் திறமையாளரான உபாசனா ஸ்ரீ, 27 வயதில் ஆண்டிற்கு ரூ.2 கோடி டர்ன் ஓவர் செய்யும் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்.
“குடும்பச் சூழலுக்காக தங்களது கனவுகளை எப்போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பது முக்கியமான விஷயம். மற்றவர்களைச் சார்ந்து இயங்காமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலதாமதமாகி விட்டதே என எப்போதும் யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த வயதிலும் புதிய பாதையை நமக்காக அமைத்துக் கொள்ளமுடியும். இன்று நாம் ஒரு விசயத்தை ஆரம்பித்தால்கூட, நாளை அதில் புதிதாக ஏதாவது சாதிக்கமுடியும்,” என தொழில்முனைவோர் ஆக விரும்புவோருக்கு உத்வேகம் கொடுக்கிறார் உபாசனா.
Read Also: மிஸ்.சென்னை மாடல், நடிகையாக இருந்த உபாசனா ஸ்ரீ இன்று வெற்றி தொழில் முனைவரான கதை!