Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மிஸ்.சென்னை மாடல், நடிகையாக இருந்த உபாசனா ஸ்ரீ இன்று வெற்றி தொழில் முனைவரான கதை!

மிஸ். சென்னையாக பட்டம் சூடியவர், சினிமா நடிகையாக திறமையைக் காட்டியவர், உதவி இயக்குநராக இருந்தவர் என ஊடகத்துறையில் பன்முகத் திறமையாளரான உபாசனா ஸ்ரீ, 27 வயதில் ஆண்டிற்கு ரூ. 2 கோடி டர்ன் ஓவர் செய்யும் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்.

மிஸ்.சென்னை மாடல், நடிகையாக இருந்த உபாசனா ஸ்ரீ இன்று வெற்றி தொழில் முனைவரான கதை!

Wednesday November 17, 2021 , 5 min Read

நடிகைகள் என்பவர்கள் வெறும் அழகு பதுமைகள் மட்டுமல்ல.. அவர்களுக்குள்ளும் ஆயிரம் தொழில் திறமைகள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பது வாழும் உதாரணமாக திகழ்கிறார் உபாசனா ஸ்ரீ.


மிஸ். சென்னை பட்டத்தை வென்ற பிறகு நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு இடையே, தனது இலக்கு தொழில்முனைவோர் ஆவதுதான் என்பதைத் தெளிவாக உணர்ந்து, இன்று சிறந்த செய்தி தொடர்பாளராக ’தஷ்யா அன்ட் கோ’ நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் படிக்கும் போதே ஆல்ரவுண்டர் மாணவியாக திகழ்ந்துள்ளார் உபாசனா. ஆனால் குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. அப்படி விளையாட்டாக கல்லூரி காலத்தில் கலந்து கொண்டதுதான் மிஸ். சென்னை ஆடிசன்.

Upasanashri

ஆனால், திறமைகளுக்கு எப்போதுமே அங்கீகாரம் கிடைக்காமல் போகாதில்லையா அப்படித்தான் தனது புத்திசாலித்தனமான பதிலாலும், அசர வைக்கும் நடனத்தாலும் நடுவர்களிடம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று 2014ம் ஆண்டு மிஸ்.சென்னை பட்டத்தைப் பெற்றுள்ளார் உபாசனா ஸ்ரீ.


வழக்கமாக இது போல் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வோருக்கு மாடலிங் மற்றும் சினிமா வாய்ப்புகள் வருவது வழக்கம்தான். அப்படித்தான் உபாசனாவிற்கும் திரைப்பட வாய்ப்பு அமைந்துள்ளது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே இயக்குநர் முருகதாஸின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு உபாசனாவிற்கு கிடைத்துள்ளது. நாயகன் கௌதம் கார்த்திக்கிற்கு தங்கை வேடம்.

“நடிப்பு எனது முழு நேரத் தொழில் கிடையாது என அப்போதே நான் தெளிவாக இருந்தேன். இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். கதை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் கவலை வேண்டாம் படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தேன். கூடவே அப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டே நிறைய விளம்பரப் படங்கள் நடித்தேன்,” என்கிறார்.

இதனால் எனக்கு ஊடகத்துறையில் நிறைய அனுபவத்தோடு, அறிமுகங்களும் கிடைத்தது. இண்டர்ன்ஷிப் செய்யும் போது தான், என்னால் ஒரே இடத்தில் இப்படி உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்.


இதற்கிடையே ஊடகத்துறையில் எனக்கிருந்த அறிமுகத்தால் நண்பர்களின் புதிய கடை திறப்பு மற்றும் கம்பெனி திறப்புகளுக்கு பிஆர் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. நானும் அடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 2016ல் 'Thashya and co'ஆரம்பித்தேன்.


'தஷ்யா' என்றால் 'ஆசிர்வாதம்'. எனது வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த நிறுவனம் எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். அதனால் தான் இப்படி ஒரு பெயர் வைத்துள்ளேன், என்கிறார் உபாசனா.


நண்பர்களைத் தாண்டி மற்றவர்களிடம் வாய்ப்புகளைப் பெற எல்லா இளம் தொழில்முனைவோர்களைப் போலவும் கடுமையாகவே போராடியிருக்கிறார் உபாசனா ஸ்ரீ.

upasana shree

“பொதுவாக சினிமாவில், அதிலும் குறிப்பாக நடிகைகளாக இருந்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் மீது அவ்வளவு சுலபமாக யாருக்கும் நம்பிக்கை வந்துவிடுவதில்லை. நடிகைகளுக்கு தனியாக திறமைகள் இருக்காது, அவர்கள் கவர்ச்சி காட்ட மட்டுமே தெரிந்தவர்கள் என்ற பொத்தாம் பொதுவான கருத்து நிறைய பேரிடம் உள்ளது. இதனால், என்னை நம்பி வேலையை ஒப்படைக்க பலரும் தயங்கினர். அவர்களின் மனநிலையை மாற்ற சிறிது காலம் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவர்களிடம் நம்பிக்கையை விதைக்க நான் பெரிதும் போராட வேண்டியிருந்தது. ஆனால் எனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் சீக்கிரமாகவே நல்ல பெயரைச் சம்பாதித்தேன்,” என தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார் உபாசனா.


ஹெல்த்கேர் பிஆர் தான் இவர் நிறுவனத்தின் சிறப்பம்சம். தென்னிந்தியாவின் பிரபல இருதய நிபுணர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு செய்தி தொடர்பாளராக உபாசனாவின் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி பல முன்னணி ஹோட்டல்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இவர்கள் தான் செய்தி தொடர்பாளராக உள்ளனர்.


வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக் கிடைக்க, உபாசனாவின் நிறுவனமும் விரிவடைந்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்தவர்கள் தற்போது திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களிலும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் வடக்கில் தனது நிறுவனத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தில் உபாசனா இருக்கிறார்.

“தினமும் ஒரு புதிய தொழிலைச் சார்ந்தவர்களைச் சந்திப்பது, அவர்களது சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வது என நகர்வதால், எனது தொழில் என்றுமே எனக்கு சலிப்பைத் தந்ததில்லை. மிகவும் பொறுப்பு நிறைந்த வேலையாகவே கருதுவதால், அதிக சிரத்தை எடுத்து ஒவ்வொரு செயலையும் செய்கிறேன். தலை சிறந்த மருத்துவராகட்டும், தொழிலதிபராகட்டும் அவர்களை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதைப் பற்றி எங்களிடம் ஆலோசிக்கின்றனர். நாங்கள் சொல்வதைத் தான் அவர்கள் செயல்படுத்துகின்றனர். எனவே, அவர்களது வளர்ச்சியில் எங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறோம்,” என்கிறார் உபாசனா.
actress upasana

நிறுவனங்களுக்கு மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களுக்கும் செய்தித் தொடர்பாளர்களாக இருந்து வருகிறது உபாசனாவின் நிறுவனம். பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவின் நிகழ்ச்சிகளுக்கு இவர்களது நிறுவனம் தான் செய்தித் தொடர்பு பணியைச் செய்துள்ளது.


“மாடல், நடிகையாக இருந்ததால் பலரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள் என்பது தான். இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் நிறைய நண்பர்களை அங்கு சம்பாதித்து வைத்திருக்கிறேன். சினிமாவை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்ற அளவிற்கு கசப்பான அனுபவம் எதுவும் எனக்கு அங்கு நேரவில்லை, எனும் அவர்,

“தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எனது ஆசையின் காரணமாகவே நடிப்பதை நிறுத்தினேன். அப்படியென்றால் இனிமேல் சினிமாவிலேயே நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்பது தான் எனது பதில். அதற்காக மீண்டும் முழுநேர நடிகையாக மாட்டேன். எனது தொழிலை மேலும் விரிவுப் படுத்தி, அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வது தான் எனது இலக்கு,” என எதிர்காலத் திட்டங்கள் பற்றி தெளிவாகப் பேசுகிறார்.

தொழில்முனைவோர்கள், விளையாட்டு வீரர்கள், பெர்சனல் பிராண்டிங் என தொழிலைத் தாண்டி பல சமூகசேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் உபாசனா. தொண்டு நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து வாரம் சுமார் பத்தாயிரம் பேருக்கு இலவச உணவளிக்கும் திட்டத்திலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.


கல்லூரிப் படிப்பை முடித்த போது எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் தனது தாயை இழந்துள்ளார் உபாசனா. அப்போது ஏற்பட்ட தீவிர மன அழுத்தத்தில் இருந்து நண்பர்கள் மற்றும் நல்ல புத்தகங்களின் துணையோடு வெளியே வந்திருக்கிறார். அதனாலேயே இப்போது மற்றவர்களுக்கு மனநலம் சார்ந்த கவுன்சிலிங் கொடுப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார்.


“உடல் நலம் மாதிரியே மனநலத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உடலுக்கு ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரைத் தேடி ஓடும் நாம், மன அழுத்தம், படபடப்பு போன்றவை கவனிக்காமல் கடந்து சென்று விடுகிறோம். அதனால் தான், சாதாரணமாக எல்லோருடனும் பேசி, சிரித்து வந்த நபர் திடீரென தற்கொலை போன்ற முடிவை எடுப்பதைப் போன்ற விபரீதங்களை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது. உளவியல் ரீதியாக பிரச்சினையைச் சந்திப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றுவது, வெயிலில் நிற்பது, தெரபிஸ்ட்களிடன் ஆலோசனை பெறுவது, வாழ்க்கை முறையை மாற்றுவது போன்றவற்றை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர முடியும்,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் உபாசனா.

சென்னையில் இயங்கி வரும் இவரின் நிறுவனத்தில் தற்போது ஏழு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டிற்கு இரண்டு கோடி டர்ன் ஓவர் செய்து வருகிறது தஷ்யா.

“வாய்மொழி விளம்பரம் மூலமாகவே இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம். எங்களது சேவை பிடித்துப் போய், ஒருவர் மற்றவர்களிடம் சொல்வதன் மூலமே புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்து வருகின்றனர். இந்தத் தொழிலில் யாரையும் போட்டி என நான் கருதுவதில்லை. எனக்கு என்ன சரியெனப் படுகிறதோ அந்தத் தொகையையே நான் பெற்றுக் கொள்கிறேன். இதனாலேயே எங்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் எப்போதும் உள்ளனர்.

”லாக்டவுனிற்குப் பிறகு பிஆர் மற்றும் பிராண்டிங் பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் மூடப்பட்ட பல நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு வருகின்றன. அச்சு ஊடகங்களைவிட சமூக ஊடகங்கள் மீது மக்களது கவனம் திரும்பியுள்ளது,” என்கிறார் உபாசனா.
with CM

மாரியப்பன் தங்கவேலு-வுக்கு பிஆர் பணிகள் செய்தபோது முதலமைச்சரை சந்தித்த படம்.

மருத்துவர்கள், பொறியாளர்கள் என கல்வியாளர்கள் நிறைந்த குடும்பச் சூழலில் இருந்து மாடலிங், சினிமா என ஊடகத்திற்கு வருவது அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை உபாசனாவிற்கு. ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார். ஆனால், பெற்றோரின் ஆதரவு அவருக்கு இருந்துள்ளது. காலப்போக்கில் தனது திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, தான் செல்லும் பாதை சரியானதுதான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.


இளம்பெண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால்,

“குடும்பச் சூழலுக்காக தங்களது கனவுகளை எப்போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பது முக்கியமான விஷயம். மற்றவர்களைச் சார்ந்து இயங்காமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலதாமதமாகி விட்டதே என எப்போதும் யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த வயதிலும் புதிய பாதையை நமக்காக அமைத்துக் கொள்ளமுடியும். இன்று நாம் ஒரு விசயத்தை ஆரம்பித்தால்கூட, நாளை அதில் புதிதாக ஏதாவது சாதிக்கமுடியும்.

மேலும், எந்தத் தடைகள் வந்தாலும், அதனை உடைத்து விட்டு, தங்களது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என தொழில்முனைவோர் ஆக வேண்டும் எனக் கனவில் இருப்பவர்களுக்கு அறிவுரைக் கூறுகிறார் உபாசனா.