காசு செலவு பண்ணாம மார்க்கெட்டிங் செய்ய முடியுமா?
வித்தியாசமாக யோசித்தால் ஜீரோ காஸ்ட்டில் கூட விளம்பரங்கள் செய்து கொள்ளமுடியும் அதுதான் Zero Rupee Marketing.
Zero Rupee Marketing
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விளம்பரங்களால் தான் முடியும். விளம்பரங்கள் என்றவுடன் நம் எண்ணங்கள் கொசுவர்த்திச் சுருளாய் சுற்றி அந்தக்காலத்து ஒனிடா டிவி விளம்பரத்தையும், பிரிண்ட் செய்த நோட்டீஸ்கள் கொடுப்பத்தையும் தான் நம் கண் முன்னே நிறுத்தும்.
இது போன்ற விளம்பரங்கள் செய்ய ஆகும் தொகையை கணக்கிட்டே நிறைய பேர் தங்கள் பிராண்ட்டிற்கு விளம்பரங்கள் செய்து கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், வித்தியாசமாக யோசித்தால் ஜீரோ காஸ்ட்டில் கூட விளம்பரங்கள் செய்து கொள்ளமுடியும்.
உதாரணமாக :
நேச்சுரல்ஸ் நிறுவனம், அப்பாக்கள் தங்கள் மகள்களுக்கு ஹேர் ஸ்டைலிங் செய்துவிடும் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கான விளம்பரங்களை ஷோஷியல் மீடியா மூலமே செய்தார்கள். பொதுவாக ஹேர் ஸ்டைல் என்றாலே அம்மாக்கள் தான் என்ற கான்செப்ட்டை உடைக்க தன்னுடைய லிட்டில் பிரின்சஸ்களுடன் நிறைய அப்பாக்கள் கலந்து கொண்டார்கள். அதன் மூலம் தங்களுடைய பிராண்டை அதிக வாடிக்கையாளர்களிடம் நேச்சுரல்ஸ் நிறுவனம் கொண்டு சென்றது.
ஜீரோ காஸ்ட் மார்கெட்டிங்க் டெக்னிக்ஸ் :
பிளானிங் :
- பட்ஜெட் ஜீரோ என்பதால் உங்களுடைய பிளானிங் ஸ்ட்ராங்காக இருக்கணும். உங்களுடைய கஸ்டமர்கள் யார்?
- எத்தனை நாளுக்கு ஒரு முறை உங்களுடைய பிராண்ட் பொருள்கள் அவங்களுக்கு தேவைப்படும்?
- எந்த பிரச்னையை உங்களுடைய பிராண்ட் தீர்த்து வைக்கப் போகிறது என்பதை கணக்கிட்டு விளம்பரங்களை தொடங்கணும்.
உங்களின் பிராடெக்ட் பற்றி தெளிவான புரிதலை வைத்துக் கொண்டு அதன் பின் கஸ்டமர்களை ஷோஷியல் மீடியாக்களின் வாயிலாக அணுகும் போது ஈஸி டூ ரீச்சாக இருக்கும்.
உங்களுடையது குழந்தைகளுக்கான ஆர்கானிக் எனர்ஜி டிரிங்க் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய காஸ்டமர்கள் பெற்றோர்கள் தான்.
நீங்கள் உங்கள் எனர்ஜி டிரிங்க் பொருள்களை வாங்குங்கள் என்று விளம்பரத்தைத் தொடங்காமல், கடைகளில் கிடைக்கும் எனர்ஜி டிரிங்க்களால் குழந்தைகளுகளின் ஹார்மோன்களில் என்ன மாற்றங்கள் வரும்?என்பது போன்ற தகவல்களுடன் தொடங்கி, தினமும் இது சார்ந்த கருத்துக்களை ஷோஷியல் மீடியாக்களில் பேச ஆரம்பியுங்கள். அதன் பின் இந்த கெமிக்கல்களுக்கு மாற்றாக உங்களின் ஆர்கானிக் பிராண்டை விளம்பரம் செய்யும் போது நிறைய கஸ்மர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
உதாரணமாக :
என்னுடைய பிசினஸ் மார்கெட்டிங் சார்ந்தது என்பதால் '365 Days of Marketing' என்ற ஆன்லைன் கேம்ப்பெயின் நடத்தினேன். அதன் மூலம் ஷோஷியல் மீடியாவில் தினமும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டேன். அதில் மார்கெட்டிங் துறையில் நான் நிபுணர் என்பதை எந்த செலவும் இல்லாமல் நானே வெளிப்படுத்தி, என்னுடைய பிசினஸ்ஸை ஈவெண்ட், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் என அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றேன். இதில் எந்த நிர்பந்தமும் கட்டாயமும் இல்லாமல் எனக்காக வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
உங்களின் ஃபார்முலா :
A.I.D.A என்று மார்கெட்டிங் டெக்னிக்கில் ஒரு ஃபார்முலா இருக்கிறது.
A - AWARENESS
I - INTEREST
D- DESIRE
A- ACTION
உங்கள் பிராண்ட் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு கொடுத்தல், உங்களின் பொருள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை கஸ்டமர்களின் மனதில் விதைத்தல், பொருளை வாங்கும் எண்ணத்தைக் கொண்டு வருதல், வாங்கச் செய்தல். இப்படி படிப்படியாக விளம்பரம் செய்யும் போது ஜீரோ காஸ்ட் மார்கெட்டிங் ஈஸியான சக்சஸ்சை கொடுக்கும்.
கஸ்டமர்களை உருவாக்குவது :
உங்களின் பொருள் பற்றி ஷோஷியல் மீடியாக்களில் அடிக்கடி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உங்கள் பொருள் பற்றிய சிந்தனையை மக்களின் மனதில் ஏற்படுத்துங்கள். உங்களின் பொருளை வாங்கும் எண்ணம் கொண்ட ஒருவருக்கு தொடர்ந்து நீங்கள் விளம்பரங்கள் செய்யும் போது உங்களின் பொருளை நீங்கள் வாங்க வைக்க முடியும்.
நீங்கள் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி ஆன்லைனில் தேடினால் அந்த பொருளை உங்களை வாங்க வைக்கும் நோக்கத்துடன் உங்களின் எல்லா ஆன்லைன் ஆக்டிவிட்டியிலும் விளம்பரம் செய்து, அந்தப் பொருளை வாங்க வைக்கும் உத்தியை தான் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களும் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் செய்கிறது.
இது போன்ற விளம்பரங்களின் மூலம் நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அவர்களைத் தொடர்ந்து தக்க வைக்க அவ்வப்போது ரீமைண்டர்கள் கொடுத்து அவர்களை கனெக்ட்டிலேயே வைத்திருப்பது அவசியம்.
ஈவென்ட்கள் நடத்துவது :
இந்த கொரோனா நேரத்தில் எல்லோருக்குமே ஆன்லைன் வகுப்புகள் பழக்கமான ஒன்றாகிவிட்டது எனவே. உங்களின் பொருளுடன் தொடர்புடைய ஈவென்ட்கள், வெபினார்கள் போன்றவற்றை நடத்தலாம். அதில் சில அடிப்படைத் தகவல்களை பகிர்ந்து கொண்டு இன்னும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு அடுத்தகட்டமாக கட்டணங்களுடன் கூடிய வெபினார்கள் நடத்தலாம்.
உதாரணமாக:
சென்னையைச் சேர்ந்த ஒரு பேபி போட்டோகிராஃபர் தான் போட்டோகிராஃபி துறைக்கு வந்தது பற்றி அடிக்கடி சமூகவலைகளில் பகிர்ந்து கொள்வார். தன்னைப் போன்று பேபி போட்டோகிராபஃர் ஆகும் ஆசை கொண்ட அம்மாக்களுக்கு இலவச வெபினார் நடத்தினார். அதில் பேபி போட்டோகிராஃபி பற்றிய எல்லாக் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, போட்டோகிராஃபி பயிற்சி வகுப்புகள் பற்றி கூறி அன்றைய ஈவென்ட்களில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வகுப்பில் இணைவதற்கான ஆஃபர்களும் கொடுத்தார். இதன் மூலம் தனக்கான வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொண்டார்.
ரெஃப்ரல் மார்கெட்டிங் :
உங்களுடைய பொருள்களை பயன்படுத்திய ஒருவரிடம் அவரின் நண்பர்கள் வட்டத்திற்கும் உங்களின் பொருளை அறிமுகப்படுத்தச் சொல்லலாம். அப்படி அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைத்தால் பரிந்துரை செய்தவருக்கு அடுத்த முறை ஏதேனும் ஆஃபர்கள் வழங்கலாம்.
ஸ்வீகி, ஜோமேட்டோ போன்ற நிறுவனங்களின், நீங்கள் கொடுத்த லின்க் மூலம் யாரேனும் ஒருவர் அந்த ஆப்பினை டவுன்லோட் செய்து அவர்கள் செய்யும் முதல் ஆர்டர்களுக்கு உங்களுக்கு ஏதேனும் ஆஃபர்கள் கிடைப்பது போன்ற டெக்னிக்ஸ். இதை உங்களின் பிராண்டிலும் நீங்கள் ஃபாலோ செய்ய முடியும்.
வாய்வழி விளம்பரம் :
உங்களுடைய பிராண்ட் நன்றாக இருக்கிறது. என்று ஒருவர் இன்னொருவரிடம் வாய்வழியாக சொல்லும் தகவல் கூட உங்களின் பொருளுக்கான விளம்பரம் தான். அதற்காக உங்கள் பொருளின் தரம், டெலிவரம் நேரம் என எல்லாவற்றையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். கஸ்டமர்களின் சுமூகமான உறவு இருந்தாலே வாய்வழி விளம்பரம் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை பெறமுடியும்.
சலுகைகள் :
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், சில மணிநேரத்திற்கு மட்டுமே இந்த சலுகை, போன்ற சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் உங்களின் லாபத்தின் அளவு தான் குறையும். ஆனால் அதிக பொருள்களை அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதன் மூலம் நிரந்தர லாபத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
(கட்டுரையாளர்: சக்திவேல் பன்னீர்செல்வம். இவர் ஒரு மார்கெட்டிங் வல்லுனர் மற்றும் the6.in நிறுவனர். இவரைப் பற்றி மேலும் அறிய, தொடர்பு கொள்ள: Sakthivel Pannerselvam)