Msme நிறுவனங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை நிதி வழங்கும் 4 அரசாங்கத் திட்டங்கள்!
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நிதி பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் 4 முக்கிய அரசுத் திட்டங்களின் தொகுப்பு இது.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு காண்பதில் இந்நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ துறை 100 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. இந்நிறுவனங்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றன.
சிறு வணிகங்கள் தங்கள் வணிக செயல்பாடுகளை தக்கவைத்துக்கொள்ளவும் விரிவடையவும் முதலீடு அவசியமாகிறது. இந்த முதலீட்டை சிறு நிறுவனங்களால் எளிதில் பெற முடிவதில்லை. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்த சவால் மேலும் மோசமானது.
இந்தச் சூழலில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நிதி பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் 4 முக்கிய அரசுத் திட்டங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் (Credit-Linked Capital Subsidy Scheme - CLCSS)
2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொண்டு சந்தையில் சிறப்பாக போட்டியிட உதவவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வாங்கும் கடனில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வாங்கும் கடனுக்கு இது பொருந்தும்.
எஸ்.சி, எஸ்.எடி. பிரிவினரிடையே தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்கள் தலைமலையிலான எஸ்.எம்.இ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தர்காண்ட் போன்ற மலைப்பிரதேச மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற தீவுகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மானியம் கோருவதற்கு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்கள் (PLIs) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைக்கப்பட்ட நோடல் ஏஜென்சிக்கு ஆன்லைன் விண்ணப்பமாக முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். நோடல் ஏஜென்சியானது அந்த விண்ணப்பங்களை டிசி (எம்.எஸ்.எம்.இ) அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து மானியம் வழங்கப்படும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises – CGTMSE)
இத்திட்டத்தை இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) இணைந்து நிறுவியுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட குறு மற்றும் சிறு நிறுவனங்களும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையமில்லாமல் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற இத்திட்டம் உதவுகிறது.
சிறு நிறுவனங்கள் பெறும் கடனில் 85 சதவீதம் வரை பாதுகாப்பு உத்தரவாதத்தை இத்திட்டம் வழங்குகிறது. 5 லட்ச ரூபாய் வரையிலுமான கடன் தொகைக்கு இது பொருந்தும்.
10 லட்ச ரூபாய் முதல் 100 லட்ச ரூபாய் வரையிலுமுள்ள கடன் தொகையைப் பொருத்தவரை அனுமதிக்கப்படும் தொகையில் 50 சதவீதம் வரை உத்தரவாதம் வழங்கப்படும். பெண்களால் நடத்தப்படும் அல்லது பெண்களுக்கு சொந்தமான எம்.எஸ்.இ-க்களுக்கு 80 சதவீதம் வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற தகுதியான வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது வட்டார கிராமப்புற வங்கிகளைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme – PMEGP)
சிறு வணிகங்களை அமைத்து அதன் மூலம் நிலையான வேலை வாய்ப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்கிக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் மூலம் பலனடையலாம். அதேசமயம் தயாரிப்புத் துறையில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் பிராஜெக்டுகளுக்கும் வணிகம் அல்லது சேவை துறையில் 5 லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் பிராஜெக்டுகளுக்கும் அந்த நபர் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
உற்பத்தி தொழில்களுக்கு 25 லட்ச ரூபாய் வரையிலும் சேவை தொழில்களுக்கு 10 லட்ச ரூபாய் வரையிலும் வங்கிக்கடனுக்கு வழிவகை செய்யப்படுகின்றன. பொதுப்பிரிவின்கீழ், நகரப்பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 15 சதவீதமும் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி/சிறுபான்மையினர்/பெண்கள் போன்ற சிறப்புப் பிரிவின்கீழ், நகரப்பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25 சதவீதமும் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri Mudra Yojna)
இத்திட்டம் 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ள வங்கிகள் மூலம் மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.
சிஷு (Shishu) என்கிற பெயரில் 50,000 ரூபாய் வரையிலும் கிஷோர் (Kishor) என்கிற பெயரில் 50,000 ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையிலும் தருண் (Tarun) என்கிற பெயரில் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும் கடன் உதவி பெறலாம்.
10 லட்ச ரூபாய் வரை கடன் தேவையுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற வணிகங்கள்/நிறுவனங்கள் முத்ரா கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா