2019 ’சாதனை அரசிகள்’ ஒரு ரீவைண்ட்!
அரசியல், சட்டம், அதிகாரம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் திறமையாலும் கடின உழைப்பாலும் வெற்றி கண்ட பெண் சாதனையாளர்களைப் பற்றிய ஒரு ரீகேப்.
ஆண்டுகள் பல கடந்தாலும் பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் எப்படி இருக்கிறது என்பதே வளர்ச்சிக்கான அடையாளம். சமூகப் புறக்கணிப்புகள், பாலின பாகுபாடுகளைக் கடந்து அரசியல், சட்டம், கலை, அதிகாரம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் ஏற்றம் கண்டு வருகின்றனர். 2019ம் ஆண்டில் சிறந்த பெண் வெற்றியாளர்களாக அடுத்து வரும் சந்ததியினருக்கு சிறந்த வாழும் உதாரணங்களாக இருப்பவர்களைப் பற்றிய ஒரு அலசல்.
கம்யூனிஸ்டுகளை தெறிக்க விட்ட ரம்யா சேச்சி
கேரள மாநிலம் ஆலத்தூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. 36 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் யார் நின்றாலும் நிச்சய வெற்றி என்று இருந்த நிலையை மாற்றி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் தனத பக்கம் திருப்பினார் ரம்யா ஹரிதாஸ்.
32 வயதாகும் ரம்யா, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெருமைப்படக்கூடிய எம்பி’ ஆகியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிதாஸின் மகள். இவரின் தாயார் ராதா டெய்லராக இருந்து கொண்டே காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். காங்கிரஸ் பரம்பரையில் இருந்து வந்த ரம்யா, பாட்டு பாடி வாக்காளர்களைக் கவர்ந்தார். விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் எளிமையோடு மக்களின் மக்களாக இருந்து தனது சேவை மனப்பான்மையை அவர்களுக்கு புரிய வைத்து மக்களவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டப்போராளி கனிமொழி மதி
உலக அரங்கம் வரை எதிரொலித்தது மதுரையை அடுத்த கீழடி அகழ்வாராய்ச்சியில் மண்ணிற்கு அடியில் கிடைத்த நாகரீக எச்சங்கள். மனித நாகரீகம் தோன்றிய வரலாற்றை தென்தமிழகத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது கீழடியில் கிடைத்த பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களும், கட்டமைப்புகளும்.
2016ம் ஆண்டில் கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆராய்ச்சித் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் கனிமொழி மதி. அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றதனால் தற்போது வரலாற்றையும் திருப்பிப் போடும் பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த ஆண்டில் உலகத் தமிழர்கள் மத்தியில் சிங்கப்பெண்ணாகத் தெரிந்தார் கனிமொழி மதி.
முதல் ஆதிவாசிப் பெண் கலெக்டர் ஸ்ரீதன்யா
கல்வியே பின்தங்கிய சமூகத்தை சமத்துவமான பாதைக்கு அழைத்து செல்ல வழிவகுக்கும். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சுரேஷ்- கமலம் தம்பதியினரின் 26 வயது மகள் ஸ்ரீதன்யா சிறு வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தவர். யூபிஎஸ்சி தேர்விற்காக டெல்லி செல்ல கூட காசு இல்லாமல் நண்பர்களிடம் கடன் வாங்கிச் சென்று வந்து அந்தக் கடனை கூலி வேலை செய்து அடைத்தவர். வறுமை இருந்தாலும் திறமையும், எளிமையும் ஸ்ரீதன்யாவை ஜெயிக்க வைத்துவிட்டது. 2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் 410வது இடம் பெற்று, கேரளாவைச் சேர்ந்த முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் என்ற முத்திரையை பதித்துள்ளார்.
முதல் பழங்குடியினப் பெண் பைலட் அனுப்பிரியா
மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஒடிசாவின் மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். வசிப்பதற்கு நல்ல வீடு கூட இல்லாத பாழைடைந்த வீட்டில் வசிக்கும் 27 வயது அனுப்ரியா மதுமிதா லக்ரா தனது பைலட் கனவை பாடுபட்டு நிறைவேற்றியுள்ளார்.
அனுவிற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர், பைலட் பயிற்சிக்காக கட்டணம் கட்டுவதற்குக் கூட பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியும், உறவினர்களிடம் உதவி கேட்டும் நிதியுதவி பெற்றும் பைலட் படிக்கை படிக்க வைத்துள்ளனர் அவரின் பெற்றோர்.
பிளாட்பார்ம் டூ ஸ்டார் அந்தஸ்து
சுக்கிரன் சுத்து போட்டுட்டா ஒருத்தருக்கு வாழ்க்கையில எந்த நேரத்துல எந்த ரூபத்துல எந்த வயசுல அதிர்ஷ்டம் அடிக்கும்னு தெரியாது. 59 வயது ரானுமோண்டல் மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் தனது வாழ்நாளை கழித்து வந்தார். ஒருநாள் அவர் நடைமேடையில் அமர்ந்து இந்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த போது அதை வீடியோ எடுத்த ஒருவர் ஃபேஸ்புக்கில் வெளியிட வியூஸ்களை அள்ளியது.
சமூக வலைதளங்களில் இவரது வீடியோ வைரலாக பாலிவுட்டில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது இதனால் ஒரே பாட்டில் அவரது வாழ்க்கையே மாறிப்போனது. மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர், இப்போது ‘ரனகாட்டின் லதா’ என்று அழைக்கப்பட்டு பிரபலமாகி வருகிறார்.
தங்கம் வென்ற தமிழக மங்கை
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 20 வயது இளம்பெண் இளவேனில் வாளறிவன், உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடலூரில் பிறந்த இளவேனில் 2 வயது முதல் குஜராத்தில் வளர்ந்து வந்துள்ளார். 13 வயதில் பொழுதுபோக்கிற்காக துப்பாக்கிச் சுடுதலைத் தொடங்கி பின்னர் அதுவே அவரை விளையாட்டு வீராங்கணையாக்கி விட்டது. இந்திய துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங்கின் பயிற்சியால் வெற்றிகளை குவிக்கத் தொடங்கிய இளவேனில், 2018ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
2019ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் பிரிவு போட்டியிலும் வென்று தங்க வாகை சூடி இருக்கிறார் இளவேனில். இதனைத் தொடர்ந்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் கடந்த ஆகஸ்ம் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீனியர் பிரிவில் பங்கேற்று அதிலும் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். ஜூனியர் பிரிவில் 2 தங்கப்பதக்கம், சீனியர் பிரிவில் 1 தங்கப்பதக்கம் என வாங்கிக் குவித்ததால் உலகத் தர வரிசைப் பட்டியலில் துப்பாக்கிச் சுடும் வீராங்கணைகள் பட்டியலில் 20 வயதிலேயே முதல் இடத்திற்கு முன்னேறிவிட்டார் இளவேனில்.