அஜித், விஜய் முதல் ‘PS 1’ வரை - தியேட்டருக்கு இழுக்கும் உத்தியா இந்த ‘வசூல்’ அப்டேட்ஸ்?!
இன்று படம் ரிலீஸாகி மூன்று முதல் ஏழு நாட்கள் மட்டுமே ஈட்டும் லாபம் படத்தின் வெற்றியை குறிப்பதாக மாறிவிட்டது. இதனால் தயாரிப்பு நிறுவனங்களே வசூல் பற்றி வெளியிட்டு மக்களை தியேட்டருக்கு படம் பார்க்க வைக்க ஒரு உத்தியாக இதை பயன்படுத்துகிறார்கள்.
காலத்துக்கு ஏற்றவாறு விளம்பர உத்திகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு, திரைத்துறையும் விதிவிலக்கு அல்ல. மக்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பதுதான் வர்த்தக நோக்கு மிகுந்த திரைப்படத் தயாரிப்புகளின் பெரும் சவால்.
அதேபோல், எதன் தாக்கத்தில் ஒரு படத்தைப் பார்க்கலாம் என மக்கள் தீர்மானிப்பதற்கான வழிமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. தற்போது, இந்த இரண்டையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளியாக நிற்கிறது ‘பாக்ஸ் ஆபிஸ்’, ‘வசூல்’ அப்டேட்டுகள்.
சில பத்திரிகைகளின் விமர்சனங்களுக்காக காத்திருந்து, அவற்றின் அடிப்படையில் தியேட்டரில் படம் பார்க்க முடிவு செய்த காலமும் இருந்தது. அதெல்லாம் இப்போது கீழடி காலமாகிவிட்டது. நண்பர்கள், உறவுகளின் பரிந்துரைகள், நல்ல விமர்சனங்கள் போன்றவற்றை எல்லாம் கடந்து, ஒரு படத்தின் வசூல் நிலவரம் என்பதும் ஒரு படத்தைப் பார்க்கத் தூண்டும் அம்சமாகிவிட்டது.
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், அஜித் - விஜய் கோலோச்சத் தொடங்கிய பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் வசூல் நிலவரம் குறித்த விவாதம் எழத் தொடங்கியது. இதற்குப் பின்னால் ரசிக உளவியலும் உள்ளதை மறுக்க முடியாது.
எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் காலகட்டத்தில், ‘யார் கெத்து?’ என்று அவர்களின் ரசிகர்கள் போட்டி போடுவதற்கு சில அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான், ஒரு படம் எத்தனை நாள் தியேட்டர்களில் ஓடுகிறது என்பதைக் கணக்கிடுவது.
ரஜினியின் ‘தளபதி’யா, கமலின் ‘குணா’வா... எது சில்வர் ஜூப்ளி எனப்படும் 175 நாட்களுக்குத் தியேட்டர்களில் ஓடுகிறதோ, அதுதான் மகத்தான வெற்றிப் படம். ‘எங்க தலைவர் படம் 200 நாள் ஓடிச்சு... உங்க ஆளு படம் வெறும் 125 நாள் தான்’, ‘எங்க தலைவர் படம் அஞ்சு தியேட்டர்ல 150 நாள்... உங்க ஆளு படம் ஒரே ஒரு தியேட்டர்ல, ஒரே ஒரு ஷோ ஓட்டி 175 நாள் ஓடுச்சு. அதனால, நாங்க தான் கெத்து’ - இப்படியேல்லாம் டேட்டாக்களைச் சுட்டிக்காட்டி போட்டி போட்டனர் ரசிகர்கள்.
இந்த டேட்டா போட்டிகளையே அனைத்து தரப்பு மக்களையும் தியேட்டருக்குள் இழுக்கும் உத்தியாக அப்போது திரைத்துறை பயன்படுத்திக் கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளில் வெளிவரும் விளம்பரங்களில் 50-வது நாள், 100-வது நாள், 125-வது நாள், 150-வது நாள், 175-வது நாள் என்று கொட்டை எழுத்துகளில் பதியப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும் மக்கள், ‘இத்தனை நாள் ஓடுதுன்னா, இது பார்க்கக் கூடிய படம்தான்’ என்று தீர்மானித்து தியேட்டருக்குச் செல்வதுண்டு.
காலம் மாறியது. வியாபார போக்குகளும் மாறின. ‘அன்று 100 நாட்கள் ஓடினால்தான், அது லாபம் ஈட்டும் படம்’ என்ற நிலை மாறி, இன்று படம் ரிலீஸாகி மூன்று முதல் ஏழு நாட்கள் மட்டுமே ஈட்டும் லாபத்தை நிர்ணயிக்கும் கால அளவாக மாறிவிட்டது. இந்தச் சூழலில்தான் எத்தனை நாள் ஓடியது என்ற நம்பர் போட்டிக்குப் பதிலாக அஜித் - விஜய் ரசிகர்கள் எவ்வளவு கோடி ரூபாய் வசூல் செய்தது என்ற தொகையை அளவீடாக்கி சமூக வலைதளங்களில் கெத்துச் சண்டை போட ஆரம்பித்தனர்.
இதுவே, அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் தொற்றிக் கொண்டன. இத்துடன் பாலிவுட், ‘பான் இந்தியா’ படங்களின் 100 கோடி, 1000 கோடி கிளப்களின் போக்கையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம்.
மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் உத்தி
முன்பெல்லாம் திரை வர்த்தகர்களும், திரைப் பத்திரிகைகளும், சினிமா சார்ந்த செய்தி வலைதளங்களும்தான் பாக்ஸ் ஆபிஸ் - வசூல் அப்டேட்டுகளைத் தந்துகொண்டிருந்தனர். ஆனால், சமீப காலமாக ஒரு படத்தின் தயாரிப்பு நிறுவனமே தினசரி வசூல் நிலவரத்தை அதிகாரபூர்வமாகவே வெளியிட்டு வருவதை கவனிக்கலாம்.
‘தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ.15 கோடி, இந்திய அளவில் ரூ.20, உலக அளவில் ரூ.35 கோடி’ என்றெல்லாம் பிரித்துப் பிரித்து தனித்தனியாகவே அதிகாரபூர்வ அப்டேட்டுகள் வருவதைப் பார்க்கிறோம்.
சமீபத்திய உதாரணம், லைகா நிறுவனம் வெளியிட்டு வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் அப்டேட். இந்தத் தொகை என்பது லாபக் கணக்கா என்று கேட்டால், இல்லை என்பதே சரியான பதில். விநியோகம், வரி உள்பட பல செலவினங்களைக் கழித்து நிகர லாபம் என்று பார்த்தால், இந்த வசூலுக்கும் சரியான லாபத்துக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கும் என்பது தெளிவு.
ஆனாலும், பல கோடிகளை வசூலிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதும், மிக எளிதான விளம்பர உத்திதான் என்பதில் ஐயமில்லை. அன்று ‘எத்தனை நாட்கள் ஓடின’ என்பது வெகுஜன மக்களை எப்படி தியேட்டருக்கு அழைத்துச் சென்றதோ, அதேபோல் இன்று ‘எவ்வளவு கோடி வசூல்?’ என்பதும் தியேட்டருக்கு மக்களை இழுக்கும் உத்தியாகவே திகழ்கிறது.
‘இத்தனை கோடி கலெக்ட் பண்ணுதுன்னா இந்த படத்துல ஏதோ இருக்குப்பா’ என்ற மனநிலைக்கு மக்களைக் கொண்டு சென்று, தியேட்டருக்கு வரழைக்கவே இந்த வசூல் நிலவரங்கள் தூண்டுகின்றன என்றால் அது மிகையில்லை.
இந்தப் போக்கு குறித்து யோசிக்கும்போது, 1991-லேயே சென்னையில் ஒரு முன்னோடி அனுபவம் இருந்ததை நினைவுகூர முடிகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அர்னால்டு நடித்த ‘டெர்மினேட்டர் 2’ படமானது சென்னை - அலங்கார் (அப்போது எல்ஐசி பில்டிங்கை ஒட்டி அமைந்திருந்தது) தியேட்டரில் ஓராண்டுக்கும் மேலாக அரங்கு நிறைந்து ஓடியது நினைவுக்கு வருகிறது. அப்போது, தினமும் தினத்தந்தி நாளிதழில் வரும் விளம்பரத்தில், டெர்மினேட்டர்- 2 படத்தின் வசூல் நிலவரம் துல்லியமாக இடம்பெறும். ஏன் இப்படி போடுகிறார்கள் என்று பள்ளிக் காலத்தில் நினைத்ததுண்டு.
அப்போ புரியலை... இப்போ புரியுது...!
முதல் நாளில் ரூ.80 கோடி | பாக்ஸ் ஆபீஸில் ‘பொன்னியின் செல்வன்’ வசூல் வேட்டை!