‘20 ஆண்டுகளில் கட்டிடங்களால் அதிக கார்பன் வெளிப்பாடு ஏற்படும்’ - ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் தகவல்!
2040-ம் ஆண்டில் சென்னையில் 230 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் வெளிப்பாடு இருக்கும் மற்றும் கட்டடங்களின் செயல்பாடுகளுக்காக 75 சதவீத ஆற்றல் பயன்படுத்தப்படும் என சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி, ஆய்வாளர்கள், சென்னையில் அடுத்த 20 ஆண்டுகளில் வேகமான நகரமயமாக்கல் காரணமாக கட்டுமானங்கள் மற்றும் கட்டிட செயல்பாடுகளில் இருந்து மொத்தமாக 231.9 மில்லியன் டன் அளவுக்கு கரியமில வாயு (Co2) வெளியாகும் என கணித்துள்ளனர்.
கட்டிடங்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறினால் சென்னையில் கரியமில வாயு வெளிப்பாடு குறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஐடி மெட்ராசில் அமைந்துள்ள, டெக்னாலஜிஸ் ஃபார் லோ கார்பன் அண்ட் லீன் கன்ஸ்ட்ரக்சன் மையமும், சென்னை ஐஐடி கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் போக்ராஜ் நாயக் ஆகியோர் அடங்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் இந்தோ ஜெர்மன் சென்டர் ஃபார் சஸ்டெய்னபிலிட்டி மையம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டனர் என இது தொடர்பான சென்னை ஐஐடி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"கார்பன் வெளிப்பாட்டை பொறுத்தவரை நமது இலக்கை அடைய வேண்டுமெனில், எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வு வழக்கமாக எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயித்து அதன்படி, செயலாற்ற வேண்டியது அவசியம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வு இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண்பதில் ஒரு படியாக விளங்குகிறது."
இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த சென்னை ஐஐடி கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், எனக் குறிப்பிட்டார்.
கட்டிடங்கள் கட்டுவதால் அதிகரிக்கும் கார்பன் வெளிப்பாடு பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள், மூன்று கட்டமாக ஆய்வை மேற்கொண்டனர்.
1. 2040ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை உருவகப்படுத்த ’ஜியோ ஸ்பேசியல்’ எனப்படும் புவி-இடம் சார்ந்த மாடலிங் தொழில்நுட்பங்களை இக்குழுவினர் பயன்படுத்தினர்.
2. நகரமயமாக்கல் காரணமாக சென்னையில் கார்பன் வெளியேற்றத்தின் அளவை அறிய வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வு நுட்பங்களை பயன்படுத்தினர்.
3. கார்பன் உமிழ்வை மிகப்பெரிய அளவில் குறைக்க வழிவகுக்கும் தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்காக, சென்னை நகரின் வளர்ச்சியில் மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஆற்றல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்த பல்வேறு காட்சியமைப்புகளை இக்குழுவினர் உருவாக்கினர்.
2040ல் சென்னை வரைபடம்
ஆய்வின் முதல்கட்டமாக, ’தி நேச்சர் கன்சர்வன்சி’ என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பால் உருவாக்கப்பட்ட புவிஇடம் சார்ந்த நில மாதிரிகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். கடந்தகாலப் போக்குகள் மற்றும் எதிர்காலத் தடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2040-ல் சென்னையின் எதிர்கால வரைபடத்தைத் தயாரிக்க 'உருவகப்படுத்தும் நுட்பங்களை'ப் பயன்படுத்தினர்.
நகர்ப்புற கட்டமைப்புப் பகுதிகள் அதிகரிப்பதும், நீர் மற்றும் சதுப்புநிலங்கள் குறைந்துகொண்டே வருவதும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ள மாதிரியில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
அதிகரித்துவரும் கார்பன் வெளிப்பாடு
கட்டிடங்கள் இடிப்பு, கட்டுமானம் (பொருட்களைக் கொண்டு செல்லுதல், கட்டுமானப் பணிகள்), கட்டிட செயல்பாடுகள் ஆகியவற்றால் வெளியாகும் கார்பன் அளவை வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வைப் (பயன்படுத்தி ஆய்வுக் குழுவினர் மதிப்பீடு செய்துள்ளனர்.
கட்டிடங்களைக் கட்டும் போதும், அவற்றின் செயல்பாடுகளின் போதும் பயன்படுத்தப்படும் ஆற்றல் காரணமாக சென்னையில் 231 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு இருக்கும் என கணக்கீடுகள் சுட்டிக் காட்டுவதாகவும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கார்பன் உமிழ்வைக் குறைப்பது எப்படி?
பாரம்பரிய சிமென்ட்டை குறைந்த கார்பன் கொண்ட சிமென்ட்டாக மாற்றுதல், கட்டிடங்களை இடிக்கும் போது ஏற்படும் கழிவுகளை எதிர்காலக் கட்டுமானத்தில் மீண்டும் பயன்படுத்துதல், இயங்கி வரும் கட்டிடங்களின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல் ஆகிய மூன்று நடவடிக்கைகள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும், என ஆய்வுக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
ஆற்றல் ஆதாரங்களை மாற்றுவதன் மூலம்தான் கார்பன் உமிழ்வை மிகப் பெரிய அளவில் மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஒரு கட்டிடத்தின் செயல்பாட்டு ஆற்றல் தேவையில் 50% தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தினால் 2019ல் இருந்து 2040ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக 115 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக் ஃபார்முலா ஒன் ரேஸ் கார் - ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் அசத்தல் தயாரிப்பு!
Edited by Induja Raghunathan