தமிழ்நாடு அரசின் ரூ.60 லட்சம் கொடை பெற்ற சென்னை ஸ்டார்ட்-அப் 'அட்சுயா டெக்னாலஜீஸ்’
ஐஓடி துறையில் வளர்ந்து வரும் சென்னை நிறுவனம்!
புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' எனும் தொழில்துறை தொடர்பான விழாவை ஜூலை 20-ம் தேதி நடத்தியது. இதில், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்னும் இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்திருப்பதாக அறிவித்தார். அதோடு, 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதம் மூலம் மொத்தமாக ரூ.17,141 கோடி அளவுக்கு முதலீடு தமிழ்கத்துக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, அன்றைய விழாவில் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 3.5 கோடி ரூபாய் கொடை (Grant) வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 டிஜிட்டல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்த கொடை வழங்கப்பட்டது. 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் போட்டியிட்டன.
இதில், சென்னையைச் சேர்ந்த ஐஓடி நிறுவனமான 'அட்சுயா டெக்னாலஜீஸ்' 'Atsuya Technologies' தமிழக அரசின் கொடையை பெற்றது. ரூ.60.4 லட்சத்துக்கான நிதியை முதல் அமைச்சர் அவர்களுக்கு வழங்கினார். அமெரிக்க தமிழக தொழில்முனைவோர்கள் சங்கம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது.
இது தொடர்பாக அட்சுயா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் கணபதியிடம் இந்த நிறுவனத்துக்கான ஐடியா, வாடிக்கையாளர்கள் மற்றும் அடுத்தகட்டம் குறித்து விரிவாக பேசினோம். தமிழக அரசின் நிதியை பெற்றதுக்காக வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.
ராகுலின் ஆரம்ப காலம்
சொந்த ஊர் திருச்சி. பள்ளிப்படிப்பு அங்கேயே முடித்துள்ளார். அதன் பிறகு சாஸ்திராவில் இன்ஜினீயரிங் படித்த பிறகு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். படித்துக்கொண்டே கிரேட் லேக்ஸ் கல்லூரியில் எம்பிஏ (2010-12 வரை) படித்த ராகுலுக்கு பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் ஹெச்சிஎல் நிறுவனத்தில் விமான நிறுவனங்களின் சாப்ட்வேர் எழுதி இருப்பதாக கூறினார். மேலும், அங்கு தன் அனுபவம் பற்றி பகிர்ந்த ராகுல்,
“அங்கேயே ஐஓடி (internet of things) பிரிவில் பணியாற்றினேன். இதில் பல சர்வதேச புராஜக்ட்களில் வேலை செய்திருக்கிறேன். 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை காக்னிசெண்ட் நிறுவனத்தில் வேலை செய்தேன். 2017ம் ஆண்டுதான் என்னுடைய இணை நிறுவனர்கள் ஸ்ரீதர் ஸ்வாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஸ்ரீதரனை சந்தித்தேன். ஐஓடி துறையில் நிறுவனம் தொடங்கலாம் என முடிவு செய்து அட்சுயா டெக்னாலஜீஸ் என பெயர் வைத்துத் தொடங்கினோம். அட்சுயா என்பது ஜப்பானை சேர்ந்த வார்த்தை. அட்சுயா என்றால் ‘தைரியமான’ என்று அர்த்தம்,” என ராகுல் தெரிவித்தார்.
உணவு வீணாவதை தடுக்க முடியா?
இணையம் மூலம் ஒரு டிவைசை கண்காணித்து கட்டுப்படுத்துவதான் ஐஓடி. உதாரணத்துக்கு உணவுத் துறையில் 40% அளவுக்கு சேதாரம் ஏற்படுகிறது. உணவை பதப்படுத்தப்படும் வசதி இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அந்த பதப்படுத்தப்படும் மையம் சீராக இயங்குகிறதா என்பதை கண்காணித்து, பாராமரிப்பு இல்லாததாலும் உணவு வீணாகிறது.
எங்களது ஐஓடி புராடக்டை உருவாக்கி ஒரு கடைக்குக் கொடுத்தோம். அதுபோல ரீடெய்ல் துறையில் உள்ள நிறுவனங்களுக்கும் கொடுத்தோம். எங்கெல்லாம் குளிர்சாதனம் அல்லது வெப்பநிலையை கண்காணிக்க வேண்டுமோ அங்கெல்லாம் நாங்கள் எங்கள் சேவையை வழங்குகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் இரவு குளிர்சாதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்றால் அது என்ன பிரச்சினை என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட ஸ்டோர் நிர்வாகிக்கு போன் செய்யும். இதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கையை ஸ்டோர் மேனேஜர் உடனடியாக எடுப்பார்.
அடுத்ததாக எனர்ஜீ மேலாண்மை. வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தப் பிரிவில் இறங்கினோம். இதில் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரிய தொழிற்சாலை, பெரிய அலுவலகங்கள் மால் உள்ளிட்ட பெரிய இடங்களில் எனர்ஜியை நிர்வகிக்கத் தொடங்கினோம். இதன் மூலம் பெரு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் எரிசக்தி மீதமானது.
இதனை அடுத்து தண்ணீர் வீணாவதும் பெரிய பிரச்ச்னையாக இருந்தது. அதனால் அதற்கான தீர்வினை கண்டுபிடுத்து, நீர் மேலாண்மையில் ஐஓடி மூலம் உதவுகிறோம். அதனை தொடர்ந்து எல்பிஜி மேலாண்மை என எனர்ஜி பிரிவில் பல சேவைகளை அறிமுகம் செய்தோம். இதற்குத் தேவையான டிவைஸ்களும் நாங்களே தயார் செய்கிறோம்.
நிதி நிலைமை
தற்போதைக்கு ஒரு டிவைஸ்க்கு ஒரு மாதம் என்னும் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறோம். தவிர நிதி சார்ந்த எந்த விவரத்தையும் தற்போது தெரிவிக்க முடியாது, என்றார் ராகுல். இவர்கள் ஏற்கெனவே இரு முறை நிதி திரட்டி இருக்கின்றனர், அதாவது சீட் முதலீடு மற்றும் ப்ரீ சிரீஸ் ஏ நிதி பெற்றுள்ளனர். தற்போது சீரிஸ் ஏ நிதியை பெரும் முயற்சியில் இருக்கிறார்கள்.
இன்னும் சில வாரங்களில் நிதி கிடைத்த பிறகு எங்களின் வருமானம், இதுவரை திரட்டிய நிதி, சந்தை மதிப்பு உள்ளிட்டவற்றை தெரிவிக்கிறோம். அதுவரை நிதி சார்ந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என ராகுல் கூறினார். மேலும், தற்போது நிதி குறித்த விவரங்கள் வெளியான நிதி திரட்டுவதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு நாங்களே முறையாக தெரிவிகிறோம் என்றார் ராகுல்.
தமிழக அரசின் மானியம் குறித்து
தமிழ்நாடு அரசு Digital accelerator என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. அரசின் நிதியை பெற வேண்டும் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் தொழில்புரியும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் விதி.
சுமார் 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் ஐவருக்கு விருது வழங்கப்பட்டது. அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கம் எங்களை மதிப்பீடு செய்து தகுதியான நிறுவனத்தை அரசுக்கு பரிந்துரை செய்தது.
அடுத்தக் கட்டம்
தற்போது 65 நபர்கள் கொண்ட குழு Atsuya Technologies-ல் பணியாற்றி வருகிறார்கள். மொத்தம் 80 வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆவின், டெண்டர் கட்ஸ், கோத்ரெஜ், நேச்சுரல் பாஸ்கட், இண்டெலக்ட், கோன், சதர்லாண்ட் உள்ளிட்ட பல வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தற்போது இந்தியாவில் மட்டும் செயல்பட்டுவரும் இவர்கள், விரைவில் ஆசியா பசுபிக் மற்றும் ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக ராகுல் தெரிவித்தார். அடுத்த கட்ட நிதி கிடைத்த பிறகு, இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.