பயமுறுத்தும் கொரோனா; பாதுகாப்புடன் வாக்களிக்க தேர்தல் ஆணையம் செய்துள்ள ஏற்பாடுகள்!
பெருந்தொற்றான கொரோனா நோய் பரவல் பயமுறுத்தி வரும் நிலையில் பாதுகாப்புடன் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்களும், 3 கோடியே 19 லட்சத்து
39 ஆயிரத்து 112 பேர் பெண்களும் 7 ஆயிரத்து 192 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
வழக்கமாக தேர்தல் என்றால் அதனை நடத்தி முடிப்பதென்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலான ஒன்று இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த பொதுத்தேர்தலானது நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குச் சாவடிகளில் 1 லட்சத்து 58 ஆயிரம் போலீஸ் மற்றும் போலீஸ் அல்லாத படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அளித்த வாக்கை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம் பொருத்தப்பட்டு இருக்கும்.
மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 50 சதவீதம், வெப்-காஸ்டிங் தொழில்நுட்பம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 10 ஆயிரத்து 813 பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள், 537 மிகவும் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து, அங்குள்ள வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, 8,014 தேர்தல் நுண் பார்வையாளர்கள் அளித்துக்கொண்டிருப்பார்கள்.
கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
இதன்படி,
- வாக்குச்சாவடிகளில் தொடாவெப்பநிலைமானி மூலம் வாக்காளர்களை பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கைகளை முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலிதீன் கையுறைகள், வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கையை சுத்தம் செய்ய தனியே சானிடைசர்கள், முகக்கவசங்கள் மற்றும் சர்ஜிக்கல் முகக்கவசம், ரப்பர் கையுறைகளும் தயார் நிலையில் உள்ளன.
வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரிக்கு மிக அதிகமாக இருந்தாலும், கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்பு இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களுக்கும் முழுபாதுகாப்பு கவச உடை (PPE kit) போன்ற கோவிட் வைரஸ் பெருந்தொற்று தடுப்புக்கான 13 வகையான பொருட்கள் தனியே ஒரு அட்டைப்பெட்டியில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுச்சுகாதாரத்துறை மூலமாக கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும் போது கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய கையுறை, பாதுகாப்புக் கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை சேமிக்க மஞ்சள் நிறப் பை மற்றும் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வுதள நாற்காலி, சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்க தன்னார்வர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக 3,538 ‘பிரெய்லி’ வாக்களிக்கும் எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக 60 ஆயிரத்து 884 வாக்காளர் பிரெய்லி தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
21 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாமலும் கூட ஓட்டு போடலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாக வேண்டும். இதில் சந்தேகம் இருந்தால் 1950 என்ற எண்ணுக்கு எஸ்.டி.டி. எண்ணுடன் சேர்த்து டயல் செய்து தகவலை அறியலாம்.
இந்த முறை வாக்காளர்களுக்காக சில இணையதள வசதிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இணையதளத்தில் சக்கர நாற்காலி வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை சரிபார்க்கலாம்.
ஏற்கனவே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு (elections.tn.gov.in) சென்று pwd என்ற தலைப்பில் கிளிக் செய்து அந்த வசதிகளைப் பெறலாம். queue என்ற தலைப்பை கிளிக் செய்தால் வாக்குச்சாவடியில் உள்ள மக்கள் கூட்ட நெரிசல் பற்றி அறிந்து நாம் ஓட்டு போடச் செல்லும் நேரத்தை கணித்துக்கொள்ளலாம்.
சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுடன் உபேர் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இலவசமாக பயணித்து வாக்குச்சாவடிக்கு வந்து (2 கி.மீ. தூரத்திற்குள்) வாக்களிக்கலாம். அவர்களுக்கு உதவியாக ஒருவர் வரலாம். எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்ற தகவலைப் பெறவும் அதில் வசதி செய்யப்பட்டுள்ளது.